Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

"சுரேஷின் அலப்பறைகளுக்குக் காரணம்..?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன | நாள் - 5

பிக்பாஸ் வீட்டின் சமையல் டீமில் யார் யார்தான் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைதான் மேற்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்தளவிற்கு எக்கச்சக்க குழப்பம்.



என்ன நடந்ததென்று பார்ப்போம்.



கிச்சன் கேபினட்டிலிருந்து ராஜினாமா செய்து விட்டாலும் “லெமன் ஜூஸ் போடட்டுமா.. இஞ்சி இடிக்கட்டுமா?” என்று சுரேஷ் அந்த ஏரியாவிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.



இந்தப் பஞ்சாயத்தையெல்லாம் கறாராக பேசி ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டிய ‘காப்டன்’ ரம்யாவோ ‘போங்க சார்.. எனக்கு வெட்கமா இருக்கு” என்கிற மோடியிலேயே அசட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ரம்யா பாண்டியன்
இப்படி ஆளாளுக்கு அவர்கள் இஷ்டத்திற்கு ராஜினாமா செய்து டீம் மாற கேப்டன் எப்படி அனுமதிக்கலாம்? பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையே ஒருவரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான். கிச்சன் டீமுடன் பொருந்திப் போக முடியாத சுரேஷ், மறுபடியும் க்ளீனிங் டீமிலும் ஏதாவது ஏழரையைக் கூட்டி விட்டு, அவராக முடிவு செய்து ‘டீம் மாற வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பாரா?



ஆனால் இன்று ரேகா மேடமின் எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. ‘பாரும்மா சனம்... இன்னிக்கு நான் சண்டை போட்ற மூடில் இல்லை... வியாழக்கிழமை சண்டை போடறதில்லைன்னு விரதம்” என்ற ரேகா ‘படுத்தே விட்டானய்யா’ என்று சரணைடையும் இம்சை புலிகேசியாக மாறி, சனத்திற்கு சாஷ்டாங்க நம்ஸ்காரம் செய்யும் நிலைமைக்கு போய் விட்டார்.

ஆனால் ஒன்று. வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் மட்டுமே வாஸ்து சரியில்லாத சுரேஷின் வாய் தொணதொணத்துக் கொண்டேயிருக்கிறது. மற்றபடி இதர சமயங்களில் அவர் ஓகேதான் போல. இல்லையென்றால் சில ஆண் போட்டியாளர்களின் நட்பைப் பேணிக் காக்க முடியாது அல்லது ‘சரி .. வயதில் பெரியவர் ‘என்று இளைஞர்கள் விட்டுக் கொடுத்து விடுகிறார்களோ, என்னவோ!



‘பெரியவர்களை முதியோர் இல்லத்திற்கு துரத்தி விடுகிறார்கள்’ என்கிற புகார் இளைய தலைமுறையின் மீது நெடுங்காலமாக சுமத்தப்படுகிறது. இந்த விஷயம் இளைய தலைமுறையின் சுயநலத்தைக் காட்டுகிறது என்பது ஒருபக்கம் உண்மைதான். ஆனால் இன்னொரு பக்கம் என்ன நடக்கிறது என்றால், பெரியவர்கள் தங்களின் வேலையை மட்டும் பார்க்காமல் வீட்டில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அநாவசியமாக மூக்கை நுழைத்துக் கொண்டேயிருப்பதுதான் பிரச்னை. தங்களின் முக்கியத்துவம் குறைகிறதே என்கிற காம்ப்ளெக்சில் அவர்கள் செய்யும் ராவடிகள் வீட்டில் ஏழரையைக் கூட்டி விடுகின்றன. அதற்கு சுரேஷின் நடவடிக்கைகள் ஒரு நல்ல உதாரணம்.



சுரேஷின் அலப்பறைகள் ஒருபக்கம் என்றால் சனத்திற்கும் ரேகாவிற்கும் இடையில் நிகழும் உரசல் என்பது மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நிகழ்வது போல் உள்ளது. ‘பிஸிபேலாபாத் நான் செய்கிறேன்’ என்று சனம் ஏற்கெனவே சொல்லியிருந்தார் போல. ஆனால் அதற்குள் ‘அதில் நாலு கப் அரிசியும் இரண்டு கப் பருப்பும்’ போட்டு ரேகா எதையோ செய்து கிண்டி விட சனத்திற்கு செம கோபம்.



‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இன்னொரு எக்ஸ்டென்ஷன் மாதிரி ரேகாவின் எபிஸோட் ஆகி விட்டது. அந்த நிகழ்ச்சியில் ரேகா தனது டீமில் உள்ளவர்களிடம் ‘சிடுசிடு’வென்று எரிந்து விழுந்து கொண்டேயிருப்பாராம்.

ஆனால் இன்று ரேகா மேடமின் எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. ‘பாரும்மா சனம்... இன்னிக்கு நான் சண்டை போடுற மூடில் இல்லை.. வியாழக்கிழமை சண்டை போடறதில்லைன்னு விரதம்” என்ற ரேகா ‘படுத்தே விட்டானய்யா’ என்று சரணைடையும் இம்சை புலிகேசியாக மாறி, சனத்திற்கு சாஷ்டாங்க நம்ஸ்காரம் செய்யும் நிலைமைக்கு போய் விட்டார்.

ரேகா

''நம்மைப் பிரிக்க சதி நடக்கிறது’' என்று ரேகா இன்னொரு உத்தியைப் பயன்படுத்தினாலும் கூட சனம் அதற்கு மசியவில்லை. (பயிற்சி போதவில்லையோ?!)

‘சுரேஷ் சாரை யார் காய்கறி வெட்டச் சொன்னது?” என்று சனத்திற்கும் ரேகாவிற்கும் இடையில் ஆழ்ந்த வாக்குவாதம் நடக்கும் போது சுரேஷ் படுத்திருந்த விதம் கொடூரமானது. ‘பப்பரப்பே’ என்று படுத்திருப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அதைக் கச்சிதமான டெமோவாக செய்து காட்டினார் சுரேஷ். பக்கத்தில் இரு நபர்கள் அமர்ந்திருக்கும் போது, அதிலும் பெண் போட்டியாளர்கள் இருக்கும் சூழலில் இவர் – என்னதான் கால் பிரச்னையென்றாலும் கூட இப்படி வில்லங்கமான போஸில் சாய்ந்திருந்தது அநாகரிகமானது.

‘நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயிலுங்க. நான் எட்டாங் கிளாஸ் பாஸூங்க” என்கிற கதையாக “நீ வீட்டுக்குத்தான் கேப்டன்.. நான் குக்கிங் டீமிற்கே கேப்டன்” என்று கேப்டன் விஜய்காந்த் மாதிரி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ரேகா எகிற, சீத்தலை சாத்தனார் மாதிரி தலையில் குத்திக் கொண்டார் சனம். இந்தக் களேபரத்தில் அந்த ‘சாம்பார் சாதமே’ வெறுத்துப் போய் வீட்டை விட்டு ஓடியிருக்கும்.

பிறகு, அனிதாவிடம் சென்று ரேகா இந்த பஞ்சாயத்தைப் பற்றி அனத்த முயல, ‘எதுவா இருந்தாலும் சம்பந்தப்பட்டவங்க கிட்ட நேரா சொல்லிடுங்க” என்று கறாராக அவரை வெட்டினார் அனிதா. இவர் ஒழுங்குப் பிள்ளையாக இருக்கிறாராம்.

இத்தனை கலாட்டாக்களுக்கு இடையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ‘நல்ல வேளை யாரும் பார்க்கலை... ஜட்டியை தோய்ச்சுடலாம்’ என்று ரகசியமாக கிளம்பிக் கொண்டிருந்தார் ரியோ.

சுரேஷ் செய்யும் ராவடிகள் பிக்பாஸிற்கு பிடித்துப் போயிற்றோ என்னவோ, ‘இத்தனை பிரச்னை செய்ற மனுஷனை பிரச்னைகளுக்கு நடுவிலேயே போட்டால் வீடு இன்னமும் கொழுந்து விட்டு எரியுமே” என்கிற ரணக்கொடூர பிளானோடு ரியோவை அழைத்தார். (அப்ப… கேப்டன் ரம்யா இல்லையா?!).



ரிப்போர்ட் கார்டு வாங்க பிரின்ஸிபல் ரூமிற்குச் செல்லும் பேக் பெஞ்ச் மாணவன் மாதிரி, வாக்குமூல அறைக்கு பம்மி பம்மிச் சென்ற ரியோவிடம் ‘சுரேஷூக்கு உடம்பு சரியில்லை... அவரை லேடீஸ் ஹாஸ்டல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணுங்க’ என்றார் பிக்பாஸ்.

உடனே ஒப்புக் கொண்டால் அதற்குப் பெயர் சுரேஷ் என்று ஆகி விடுமா? ‘'அதெல்லாம் வேண்டாம். நானே ஒரு பிரச்னை... நான் போய் பிரச்னைகளுக்கு நடுவுல படுக்கணுமா?” என்று அவர் மல்லுக்கட்ட, “நீங்களா வர்றீங்களா.. இல்ல லிப்லாக் கொடுக்கட்டுமா?” என்று வில்லங்கமாக ரியோ மிரட்ட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தேசத்துடன் பெண்கள் ரூம் பெட்டிற்கு போய் ‘பப்பரப்பே’வைத் தொடர்ந்தார் சுரேஷ்.

சுரேஷ்



நாள் 5 விடிந்தது. ஏதோவொரு குத்துப் பாடலை அலற விட்டார் பிக்பாஸ். இன்றும் அந்த கண்றாவியான கண்ணாடியைப் போட்டு வந்து ஆடினார் ரம்யாவின் பாட்டி. தன்னை ஃபோகஸ் செய்த கேமராவிடம் “போங்க மாமா... எனக்கு வெட்கமா இருக்கு” என்றபடி விலகிச் சென்றார் நிஷா.

கடந்து வந்த பாதையில் சோம் சுந்தர் பேசினார். கூட்டுக்குடும்பம், தந்தையின் மரணம், தாயின் தியாகம், உலகம் சுற்றும் ஆசை, அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் வெற்றி, விளம்பரப் படங்கள், சினிமா முயற்சிகள், அதன் பின்னடைவுகள், காதல் தோல்வி ஆகியவற்றை இயல்பாக விவரித்த அவர்

“ஆக்சுவலி.. எனக்கொரு பிரச்னை இருக்கு. யாருக்கும் தெரியாது. எனக்கு வாய் திக்கும். அதனாலேயே நான் யார் கிட்டயும் பேசவே மாட்டேன். நண்பர்கள் போன் பண்ணா கூட எடுக்க மாட்டேன். எங்க கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு பயம். ஆனா... இங்க நான் ரொம்ப வசதியா ஃபீல் பண்றேன். அதுக்கு நீங்க தந்த அன்புதான் காரணம்” என்றெல்லாம் பேசி கண்கலங்க “அடப்பாவி மக்கா... நீ சொன்ன பிறகுதான் இதப்பத்தியே எங்களுக்குத் தெரியுது.. அப்படில்லாம் ஒண்ணுமில்ல. நீ கலக்குடா...” என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் நெகிழ்வுடன் ஆதரவளிக்க ஓர் அட்டகாசமான ராப் பாடலைப் பாடி அசத்தினார் சோம்.

சோம்



“மாயண்ணேன் வந்திருக்காக.. மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காக. மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக” என்று முதல் நாளில் ரகளையாக பேசிக் கொண்டிருந்த வேல்முருகன், இப்போது அந்த வீட்டில்தான் இருக்கிறாரா என்று சந்தேகம் வந்து விட்டது. அந்தளவிற்கு கிச்சன் பாலிட்டிக்ஸை மட்டுமே ஃபோகஸ் செய்து கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.

‘இதோ நானும் இருக்கேன்’ என்கிற நோக்கில் இன்று ‘என்னடி ராக்கம்மா’ பாடலை வேல்முருகன் ரகளையாக பாட... ஆறு முதல் அறுபது வரை வயதுள்ள பெண்கள் அனைவரும் நடனமாடி மகிழ்ந்தார்கள்.

கடந்து வந்த பாதையில் அடுத்து ரம்யா பாண்டியன்.

உருக்கமாக பேசி அனுதாபம் தேடிக் கொள்ளக்கூடாது என்பது சரிதான். அதற்காக ‘பாம்புக்கடியில் எங்கள் அப்பா இறந்து விட்டார்’ என்பதைக் கூட புன்னகையுடன் சொல்வது சற்று ஓவர். உறவினர்களின் ஆதரவில் பிறகு வாழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலெழ சாலையில் hand bills தருவது போன்ற பணிகளைச் செய்திருக்கிறார் ரம்யா. முதல் சினிமா வாய்ப்பு ஒரே நாளில் பறி போனது. அதற்குப் பிறகு வந்த ‘ஜோக்கர்’ பட நாயகி பாத்திரம் நல்ல விமர்சனங்களைத் தந்தாலும் அடையாளம் தரவில்லை.

ரம்யா பாண்டியன்



பிறகுதான் அந்த மொட்டை மாடி போட்டோ ஷூட். ‘அது எப்படி ஹிட் ஆச்சுன்னு எனக்கே தெரியலை’ என்று ஒன்றும் தெரியாதது போல் பேசி, பிறகு அவருக்கே அது ஓவராகத் தெரிந்ததோ, என்னமோ... தானாக மழுப்பிச் சிரித்து… “அதுல ஏதோ ஒரு மேஜிக் நடந்தது” என்றார். என்ன மேஜிக் என்று ஆர்மிக்காரர்களை கேட்டால்தான் தெரியும்!

Also Read: "ஆக்ச்சுவலா மொட்டைமாடி போட்டோஷூட்ல என்ன நடந்துச்சுனா...!?'' வைரல் க்ளிக் ரம்யா பாண்டியன்



“சர்வே எடுத்து பார்த்ததுல, ‘பிக்பாஸ் போயிடாதீங்க’ன்னு தமிழ்நாட்டு மக்கள் தொன்னூறு சதவிகிதம் பேரு வாக்களிச்சிருந்தாங்க. வாய்ப்பைத் தேடி அலைந்தவர்களுக்குத்தான் ஒரு வாய்ப்பை தட்டி நிராகரிப்பது எத்தனை கஷ்டம் என்று தெரியும். எனவே பிக்பாஸிற்கு வந்துட்டேன்” என்று புன்னகையுடன் மேடையில் இருந்து இறங்கினார் ரம்யா. அப்போதே தெரிந்து போயிற்று, இவர் நாமினேஷனில் கோவிந்தா என்று.



பிக்பாஸிற்குள் வந்ததைப் பற்றி ரம்யா சொல்லும் போது “எங்க பெரிய குடும்பத்துல எங்க அப்பாதான் மூத்தவர். அவரை பிக்பாஸ் –ன்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. அவர் கார்ல கூட பிக்பாஸ் –ன்னு போட்டிருக்கும்” என்று அவர் சொன்ன லாஜிக் கனெக்ஷென் ஒரு பக்கம் காமெடியாக இருந்தது.

காட்சி மாற்றம்.

பிக்பாஸ் வீட்டு மக்கள் சோற்றை வீணாக்குவதைப் பற்றி, ‘பொலிட்டிக்கல் கரெக்னட்ஸ்’ மோடில் ஆரி சொற்பொழிவாற்ற, குப்பையில் கொட்டப்பட்ட சோற்றிற்கு கேமரா ஃபோகஸ் செய்தது. ‘மீந்தத எடுத்து வையும்மா.. மோரு ஊத்தி காலைல சாப்பிடலாம்” என்று கஷ்டம் அறிந்த கிராமத்தானாக வேல்முருகன் சொன்னது நல்ல விஷயம்.

அழுகாச்சி டாஸ்க்கில் அடுத்து வந்தவர் ஆஜித்.

“சின்ன வயசுல இருந்தே பாடுறதில ஆர்வம். கஷ்டப்படற ஃபேமிலி. இசைக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. இருந்தாலும் பல சிரமங்களைத் தாண்டி சூப்பர் சிங்கர் வந்தேன். ஜெயிப்பேன்னு எதிர்பார்க்கலை. ஆனா மறுபடியும் வாழ்க்கை கீழ போயிடுச்சு. ஆதரவு யாருமில்ல. சென்னைல தங்க வீடு இல்லாம கஷ்டப்பட்டோம். ‘இவன்லாம் பிக்பாஸா’ன்னு கேட்டாங்க. என்னால என் அம்மாவிற்குப் பெருமையில்லை. அவங்களாலதான் எனக்குப் பெருமை. சின்ன வயசுலயே நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன்” என்று களங்கமில்லாமல் சொல்லி இறங்கினார் ஆஜித்.


‘நல்லாப் பாடற தம்பி, விட்டுடாத. சின்சியரா பிராக்டிஸ் பண்ணு’ என்று ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்கள், போட்டியாளர்களை ஊக்கப்படுத்துவது நல்ல விஷயம்தான். ஆனால் நடைமுறையில் அந்த இளம் பாடகர்கள் எத்தனை சிரமங்களையும் வறுமை தரும் நடைமுறைக் கசப்புகளையும் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை ஆஜித்தின் அனுபவம் உணர்த்தியது.

அடுத்து வந்தவர் பாலா. இந்த ‘ஜிம்பாடிக்குள்’ இப்படியொரு பரிதாபமான ‘வியாசர்பாடி’ கதை இருக்கிறது என்பது அவர் சொல்லித்தான் தெரிந்தது. பாலாவின் கதையைக் கேட்க உண்மையிலேயே நெகிழ்ச்சி.
பாலாஜி முருகதாஸ்



“உங்க பதினைஞ்சு பேரையும் பார்க்க எனக்குப் பொறாமையா இருக்கு. நீங்க கஷ்டப்பட்டிருக்கீங்க.. ஆனா உங்களுக்குப் பின்னால உங்க பெற்றோர், சகோதரர்கள் –ன்னு ஒரு குடும்பம் ஆதரவா இருந்திருக்கு. ஆனா எனக்குன்னு அப்படி யாருமே இல்லை. சின்ன வயசிலே இருந்தே எங்க பேரன்ட்ஸ் என்னைக் கண்டுக்கவேயில்லை. நானாதான் வளர்ந்தேன். குடிபோதைல எங்க அப்பா என்னைக் காரணமேயில்லாம போட்டு அடிப்பாரு. ஸ்கூல்ல சாப்பிடாம கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்துல அம்மாவும் குடிப்பழக்கத்துல விழுந்தாங்க.



“என் வாழ்க்கையைத்தான் மாத்த முடியல.. மூஞ்சிய மாத்த முடியாது.. மாத்த முடிஞ்சது என் உடம்பை மட்டும்தான். ஜிம் போய் நல்லா டெலவப் பண்ணேன். மிஸ்டர் இந்தியா போட்டில ஜெயிச்சு வந்தேன். என்னை வரவேற்க ஈ காக்காகூட வரலை. எனக்குன்னு குரு யாரும் இல்ல. மிஸ்டர் இன்டர்நேனஷல்லயும் சாதிச்சேன். அப்ப கூட ம்ஹூம். என் நண்பர் உதவியாலதான் இப்ப மேலே வந்திருக்கேன்.”



‘'நான் வீட்டு மரம் இல்லடா.. தானா வளர்ந்த காட்டு மரம்” என்று பஞ்ச் பேசாத குறையாக தன் சோகக் கதையை சொன்னார் பாலா.



“ஒரு குழந்தையை ஒழுங்கா வளர்க்கத் துப்பு இல்லைன்னா... ஏன் பெத்துக்கறீங்க?” என்று ‘புதிய பாதை’ பார்த்திபன் மாதிரி பாலா பொங்கிய போது நம்மிடம் பதில் இல்லை. குடும்ப வன்முறைக்குள் சிக்கும் இளம் மனங்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக பாலாஜி இருந்தார். அந்த ஆஜானுபாகுவான மனுஷன் குழந்தை போல் விசும்பி அழுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர் பேசி முடித்த அடுத்த கணமே, ஏறத்தாழ அனைத்துப் போட்டியாளர்களும் வந்து அவரை ஆதரவாக கட்டியணைத்துக் கொண்டார்கள்.

''ஒரு பிரபலமான தமிழ் சினிமா இயக்குநர், உங்க ரிலேட்டிவ்தானே.. அதுல நீங்க பெருமைப்படலாம்ன்னு சிலர் சொல்றாங்க.. அதுல எனக்குப் பெருமையில்ல. ‘முருகதாஸ்’ன்றது எங்க அப்பா பேரு. அதுதான் என் அடையாளம்” என்று பாலாஜி கெத்தாக சொன்னாலும் செல்வாக்குள்ள உறவினர்களால் கைவிடப்படும் சோகம் அதன் பின்னால் தெரிந்தது.

கடந்த வந்த பாதை டாஸ்க்கின் ரிசலட் நேரம். இரண்டாவதாக பேசிய எட்டு பேரில் ‘யார் தகுதி’ என்பதை முந்தைய டீம் தேர்வு செய்ய வேண்டும்.



''டீம் டீமாக பிரிந்து உட்காருங்கள்'’ என்று பிக்பாஸ் அறிவித்த போது ''ஏற்கெனவே அப்படித்தான் அமர்ந்திருக்கிறோம். உங்கள் மனநிலையும் எங்கள் மனநிலையும் ஒரே கோட்டில் செல்கிறது.. பிக்பாஸ்'’ என்ற டயலாக்கை நிஷா பேசினார். பிக்பாஸின் குரலில் ‘நிஷா’ என்று ரியோ மிமிக்ரி செய்ய, சற்று ஜெர்க் ஆனார் நிஷா,

நிஷா



பிறகு, ‘தேங்க்யூ நிஷா’ என்று பிக்பாஸ் சொன்னவுடன் பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி விதம் விதமாக வெட்கப்பட்டார். அவருக்கு வந்த மகிழ்ச்சியில் ‘கடல் அலை நின்று போயிருக்கும். காற்று அடிப்பதும் நின்றிருக்கும். மரங்கள் அசைவின்றி உறைந்திருக்கும்.. போல. அப்படியொரு ரொமாண்ட்டிக் ஃபேண்டஸி மோடிற்கு பயணமானார் நிஷா.

முதல் டீம் கலந்துரையாடலில் இறங்கியது. ‘கச்சா முச்சா’ என்று பல லாஜிக் காரணங்களை அவர்கள் போட்டாலும், யார் மிக உருக்கமாக பேசினார்களோ.. அவர்களே தகுதி பெறுவார்கள் என்பதுதான் இறுதியில் நிஜமானது.


இதன்படி சுரேஷ் (அப்பாடா!), ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகியோர் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் இணைந்தார்கள்.



பிறகு இதைப் பற்றி ஆரியிடம் பேசிய சுரேஷ் ‘மத்தவங்கள்லாம் ஓகே. ஆனா ஆஜித்திற்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கலாம்” என்று அவர் கரிசனையுடன் சொன்னது சரியான ஆலோசனையாக இருந்தது. “ஓகே... அவனை நாம இன்னமும் மோட்டிவேட் பண்ணலாம்” என்று சுயமுன்னேற்ற வகுப்பெடுக்கும் பாணியில் ஆரி சொன்னார்.

இரவு நேரம். கார்டன் ஏரியாவில் வேல் முருகன் ‘அம்மா’ பாட்டை உருக்கமாக பாடிக் கொண்டிருக்க, அவர் மடியில் தலை சாய்ந்திருந்த ரியோ நெகிழ்ச்சியுடன் கண்மூடிக் கிடந்தார். சற்று தூரத்தில் படுத்திருந்த அனிதாவும், இந்தப் பாடலை நெகிழ்வுடன் கேட்டு ஒரு கட்டத்தில் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். மற்றவர்கள் வந்து அவரைத் தேற்றினார்கள்.



‘அனிதாவை அழவைத்த வேல்முருகன்” என்று அதிர்ச்சியானதொரு தலைப்பை இந்நேரம் யூட்யூப் சேனல்காரர்கள் தயார் செய்திருப்பார்கள்.



இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது என்னுடைய முக்கியமான சந்தேகம் என்னவெனில்



“ஏம்ப்பா.. அந்த நாலு கப் அரிசி. இரண்டு கப் பருப்பு போட்ட ‘பிஸிபேலாபாத்தை' செஞ்சி முடிச்சீங்களா... இல்லையா?”



source https://cinema.vikatan.com/television/the-reason-behind-suresh-activities-bigg-boss-tamil-season-4-day-5-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக