Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

"வரும் சட்டமன்றத் தேர்தலில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், தி.மு.க தலைமை நிறுத்தும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள். அ.தி.மு.க அமைச்சர் சவாலுக்குத் தயாரா?" என்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

Also Read: `தி.மு.க-வில் ஸ்டாலின்; அ.தி.மு.க-வில் யார் முதல்வர் வேட்பாளர்னு சொல்ல முடியுமா?'-செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட காவல்துறை தங்கள் மீது பொய்வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிய செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் 51 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். கரூர் வடக்கு நகரம் சார்பில் வெங்கமேடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, "வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது, காவல்துறை கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தது. மின்கட்டண உயர்வுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோதும், கழக நிர்வாகிகள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டது. பல நிர்வாகிகள் மீது, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின்பேரில் காவல்துறை பொய்வழக்கு போட்டுள்ளது. இது காவல்துறையா அல்லது ஆளும் அடிமை அரசின் ஏவல்துறையா?. அடிமை அ.தி.மு.க அரசின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்பட்டு, கரூர் மாவட்ட காவல்துறையினர் எங்களுக்கு அநீதி இழைத்து வருகிறார்கள்.

தி.மு.கவின் நிர்வாகிகளை, களப்பணியாளர்களை, தளபதியின் விசுவாசிகளை மிரட்டிப் பார்ப்பது, அப்படியும் அடிபணியாதவர்கள் மீது வழக்குகள், கைதுகள், காவல்நிலையத்தில் நிகழ்த்தும் மனித உரிமை மீறல் என எல்லாவற்றையும் அப்பட்டமாகச் செய்து வரும் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது. தி.மு.க நிர்வாகிகள் பலரை, 'அ.தி.மு.க மாறுங்கள்' என்று மிரட்டி இழுக்கப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டித்து உண்ணாவிரதம், வழக்கு என சட்டத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்நிலையில், தி.மு.கவின் ஒரு மாவட்ட நிர்வாகியை அழைத்து, ‘உண்ணாவிரதத்துக்கு எதிராக சிலரைத் தீக்குளிக்கத் தூண்டிவிடுவோம்’ என்று காவல்துறையின் உயரதிகாரியே பேசியிருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த ஆளுங்கட்சியின் முறைகேடுகள், கொரோனா காலத்திலும் ஆளுங்கட்சியினர் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து நடத்தும் கூட்டங்கள், பேரணிகளை வாய்மூடி மௌனித்து வேடிக்கை பார்த்தபடியே அவர்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்யும் காவல்துறையின் கறைபடிந்த அதிகாரிகளுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், நீங்கள் நடுநிலையாக நடக்கவில்லை; அதை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அதையும் குலைத்திடும், முறையற்ற உங்களின் முயற்சிக்கும் சலசலப்புக்கும் தளபதியின் உடன்பிறப்புகளாகிய நாங்கள் அஞ்சமாட்டோம். நடுநிலை தவறிய காவல்துறையின் ஒவ்வொரு செயலையும் மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். இன்னமும் ஆறு மாதங்களில் ஆட்சி மாறும், அப்போது, உங்களின் ஒவ்வொரு அநியாயச் செயலுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டியிருக்கும். அதேபோல், வரும் தேர்தலில் கரூர் மாவட்டதில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தி.மு.க நிறுத்தும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள். ஆளுங்கட்சி இந்த சவாலுக்கு தயாரா?.

உண்ணாவிரதப் போராட்டத்தில் செந்தில் பாலாஜி

ஏற்கனவே, இங்குள்ள அமைச்சர், 'அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க டெபாசிட் வாங்கினால், நான் அரசியலைவிட்டே போய்விடுகிறேன்' என்றார். ஆனால், நான் அரவக்குறிச்சியில் ஜெயித்தேன். ஆனால், அமைச்சர் சவாலை நிறைவேற்றவில்லை. அதனால், இப்போது தி.மு.க விடுக்கும் சவாலுக்கு, ஆளுங்கட்சியினர் பதில் சவால்விட அஞ்சுகிறார்கள். மக்களை, தேர்தலை சந்திக்க பயந்த அ.தி.மு.க அரசு, காவல்துறையை ஏவிவிட்டு, தி.மு.கவினரை அடக்கப் பார்க்கிறது. ஆனால், எங்களின் செயல்பாட்டை குறைக்கமுடியாது" என்றார், ஆவேசமாக!.



source https://www.vikatan.com/news/politics/senthil-balaji-protest-against-admk-and-karur-district-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக