கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மேலும், ஒன்பது வட்டாரக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் தமிழக அரசின் இலவசப் பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதில், குளச்சலில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப் புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவில்லை என்றும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு கமிஷன் அடிப்படையில் புத்தகங்களை விற்பதாகவும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார் குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வட்டாரக் கல்வி அலுவலரான ஜெயராஜ் இருந்தார். வட்டாரக் கல்வி அலுவலரான ஜெயராஜ், தக்கலை அருகே அழகியமண்டபம், வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.54,060 (ஐம்பத்தி நான்காயிரத்து அறுபது ரூபாய்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்கு இருந்த ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஆறு மணி நேரத்துக்கும் மேல் நீண்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
Also Read: ராணிப்பேட்டை: `ஏழை விவசாயியிடம் லஞ்சம் கேட்டு கறார்!’ -மின்வாரிய அதிகாரி கைது
குளச்சல் வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் இலவச முட்டை வழங்குவதிலும் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. குளச்சல் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுமார் 64 பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளத்திற்குக் கையெழுத்து போடுவதற்கும், அரியர், ஊக்கத்தொகை ஆகிய பணபலன்களை ஆசிரியர்கள் பெறுவதற்காகக் கையெழுத்து போடவும் ஜெயராஜ் பணம் வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, `மாதம்தோறும் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் உங்களுக்கு இது தேவையா?’ என வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜிடம் கூறி அவருக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். எல்லவற்றையும் கேட்டுவிட்டு, `இனி நடக்காது சார்’ என கூலாக பதில் சொல்லியிருக்கிறார் வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ். இதைக் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சிரித்தேவிட்டார்களாம்.
source https://www.vikatan.com/government-and-politics/corruption/dvac-books-colachel-educational-department-official-over-bribery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக