Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

`மூன்று குழுக்கள் அமைப்பு... முதல்வர் அறிவிப்பு!' - நள்ளிரவில் பன்னீர் எடுத்த அஸ்திரம்!

“விடிய விடிய நடந்த ஆலோசனையில் பன்னீரின் பிடிவாதத்தினால் எடப்பாடி தரப்பு ஆடிப்போய்விட்டது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு முதல் குழு அமைப்பது வரை பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளச் சொன்னார் பன்னீர்” என்கிறார்கள் பன்னீருடன் ஆலோசனை நடத்திய அ.தி.மு.க நிர்வாகிகள்.

எடப்பாடி - பன்னீர்

அ.தி.மு.க -வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.கவின் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேனியில் மூன்று நாட்கள் முகாமிட்டிருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பிய பிறகு நேற்று முழுவதும் அவரது வீட்டில் தொடர் ஆலோசனைகள் நடந்தது. வழிகாட்டு குழு அமைக்க ஒப்புக்கொண்டால் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்புக்கு நான் ஒப்புக்கொள்கிறேன் என்று முதலில் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Also Read: அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை... கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு?! #LiveUpdates

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை பன்னீர் வீட்டில் எட்டு அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் சிலர் உட்பட அடுத்தகட்ட ஆலோசனை துவங்கியது. இந்த ஆலோசனையின்போது தனது தரப்பு கோரிக்கைகளை வலுவாக வைத்திருக்கிறார் பன்னீர். வழிகாட்டு குழு அமைக்க எடப்பாடி ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால், “வழிகாட்டு குழுவிற்கு உள்ள அதிகாரங்களைக் குறைத்திருக்கிறீர்கள். வழிகாட்டு குழுவே, நான் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அறிவிக்கச் சொன்னேன். வழிகாட்டு குழுவிற்கான அதிகாரங்களை முழுமைப்படுத்துங்கள்” என்று எடப்பாடியின் தூதுவர்களிடம் சொல்லியிருக்கிறார் பன்னீர்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

அதேபோல் வழிகாட்டு குழுவோடு மேலும் மூன்று குழுக்களை அமைக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பன்னீரும் ஒப்புக்கொண்டுள்ளார். பிரச்சார குழு, தேர்தல் பணிக்குழு, தேர்வுக்குழு என மூன்று குழுக்களைக் கூடுதலாக அறிவித்து வழிகாட்டு குழுவில் இடம்பெறாதவர்களை வேறு மூன்று குழுவில் இடம்பெறச் செய்ய முடிவாகியுள்ளது. அதே நேரம் பன்னீர் வீட்டில் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து ஆலோசனை நடந்தது. இதற்குக் காரணம் பன்னீர் கடைசி நேரத்தில் காட்டிய கெடுபிடியே என்கிறார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

எடப்பாடி தரப்பிலோ, “ உங்கள் கோரிக்கையை எடப்பாடி ஏற்றுக்கொண்டுவிட்டார். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல். வழகாட்டுக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே முதல்வர் வேட்பாளர் பெயரையும் அறிவித்துவிடலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்குப் பன்னீர் ஒப்புக்கொள்ளாமல் இரண்டு அறிவிப்புகளையும் தனித்தனியாகவே அறிவிக்கவேண்டும் என்று பிடிவாதம் காட்டியிருக்கிறார். மேலும் வழிகாட்டு குழுவிற்கான அதிகாரங்களை என்ன என்பதை தெளிவுப்படுத்திய பிறகே, அந்த அறிவிப்பை நான் வெளியிடுவேன். இதற்கு மேலும் எடப்பாடி தொடர்ந்து பிடிவாதம் காட்டினால் அவர் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்துக்கொள்ளட்டும்” என்று டென்சனுடன் பேசி பேச்சுவார்த்தையிலிருந்து எழுந்து அவரது அறைக்குள் சென்றிருக்கிறார்.

இதற்குப் பிறகு சில சமாதானங்களை அவரிடம் சொல்லி மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்துள்ளது. “வழிகாட்டு குழுவில் அவர் பக்கம் ஆறுபேர் இருக்கப்போகிறார்கள். எதற்கு வழிகாட்டுக்குழுவை கண்டு அவர் அஞ்சவேண்டும்” என்று பன்னீர் கேட்டிருக்கிறார். ஒரே நேரத்தில் வழிகாட்டு குழு அறிவிப்பையும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்கிற அறிவிப்பையும் வெளியிடப் பன்னீருக்கு விருப்பம் இல்லாமல் போனதாலே நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நீண்டதற்குக் காரணம் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/what-happened-in-ops-eps-meeting-regarding-admk-cm-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக