Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

முதல் பஞ்சாயத்தைக் கூட்டிய அனிதா; கறுப்புத் தங்கம் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 2

நேற்றைய நாளின் நாமினேஷன் ஒத்திகை தொடர்ந்தது.

பாலா: இவர் பிடித்தவர்களாக தேர்ந்தெடுத்தது சுரேஷ் மற்றும் ரியோ. என்ன காரணத்தினாலோ சுரேஷைப் பார்த்தவுடனே இவருக்கு பிடித்து விட்டதாம். (பார்றா!) ரியோ மீது மிகப் பெரிய மரியாதையும் அன்பும் உண்டாம். (ரெண்டே நாள்ல எப்படி?!)

பிடிக்காதவர்களின் வரிசையில் ரேகாவை இவர் தேர்ந்தெடுத்தது ஆச்சர்யமில்லை. “சும்மா நொய்.. நொய்னு.. மத்தவங்களை நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்க” என்று கடுப்பான முகத்துடன் பாலா சொன்னதை மற்றவர்கள் உள்ளூற ரசித்தார்கள். ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று எழுந்து வந்து விளக்கம் அளித்த ரேகா “நான் அம்மா மாதிரிதான் சொல்றேன்... செல்லக்குட்டி... பட்டுக்குட்டி... ன்னு சொல்லித்தான் வேலை வாங்குவேன்” என்று சொல்ல ‘இந்த டகால்ட்டி சென்ட்டியெல்லாம் இங்க வேணாம்” என்று ஆஜித்திற்கு மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.

பிக்பாஸ் - நாள் 2

பிடிக்காதவர்களின் வரிசையில் பாலா அடுத்த பெயராக சொன்னது ‘நிஷா’. “நான் ஜிம் பாடிங்க. தினமும் புரோட்டின் வேணும்... அதை எடுத்து சாப்பிட்டதை இவங்க கிண்டல் பண்ணா எப்படி... குழந்தைத்தனமா இருக்கு... இதுதான் பிடிக்கலை.. மத்தபடி ஐ லவ்யூங்க” என்று பாலா சொல்ல, ஸ்ரீவித்யாவால் கிண்டலடிக்கப்பட்ட ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல் மாதிரி அடிபட்ட எக்ஸ்பிரஷனை தந்தார் நிஷா. "மக்களே… இனி முட்டையை மறந்துடுங்க” என்கிற ஜாலியான பின்குறிப்பையும் தர நிஷா மறக்கவில்லை

அடுத்து வந்தவர் அனிதா: பிடிக்காதவர்களாக ரமேஷ் மற்றும் சம்யுக்தாவை தேர்ந்தெடுத்தார். இருவரிடமும் அதிகம் கனெக்ட் ஆகவில்லையாம். வேல்முருகனின் கலகலப்பான குணாதிசயம் காரணமாக ‘பிடித்தவர்களின்’ பட்டியலில் தேர்ந்தெடுத்தார் அனிதா. அடுத்ததாக, நிஷாவைப் பிடிப்பதற்கான காரணத்தை சொன்ன போது சென்ட்டியாகி கலங்கி விட்டார். அனிதாவின் அம்மா கறுப்பாக இருப்பாராம். அந்த தாழ்வு மனப்பான்மையினால் அதிகம் வெளியே வர மாட்டாராம். 'நிஷா போன்றவர்களின் வெற்றியைப் பார்த்தாவது அவர் மாற வேண்டும்’ என்று அனிதா கண்ணீர் சிந்த, அதைப் பார்த்த பிக்பாஸிற்கு பல்பு எரிந்திருக்க வேண்டும். பின்பு இதையே ஒரு டாஸ்க்காக வைத்து விட்டார்.

(இந்த நாமினேஷன் ஒத்திகை சடங்கில் ரியோவின் பகுதி வரவில்லை. எடிட் ஆகி விட்டது போல).

பிக்பாஸ் - நாள் 2

காட்சி மாற்றம்.

டுட்டோரியல் காலேஜிற்கே லேட்டாக வரும் மாணவியிடம் கரிசனத்துடன் பேசும் லெக்சரர் மாதிரி ஷிவானிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி. “உன்னை விமர்சிக்கிறவங்களை விடு. நீ நீயா இரு. போட்டின்னா முதல்ல பங்கெடுக்கணும். சண்டை செய்யணும் குமாரு” என்று அவர் சொன்ன உபதேசத்தை பெரிய நகங்களைத் தடவிக் கொண்டே கவனமாக கேட்டுக் கொண்டார் ஷிவானி. (தலைல ரெண்டு பக்கமும் எதுக்கு அந்த விளக்கு?)

“வா.. அப்படியே வாக்கிங் போய்ட்டு வந்துடலாம்” என்று ஷிவானியை அழைத்துச் சென்ற பாலா, “அப்புறம்... என்ன விஷயம்?” என்று ஆரம்பித்து மும்முரமாக கடலை விவசாயத்தில் இறங்கினார்.

சற்று நேரத்தில் நாளைய பஞ்சாயத்திற்கான விதை இன்னொரு பக்கம் ஆரம்பித்தது. ‘செய்தி வாசிப்பாளர்’ குரலில் எதையாவது பேசும்படி அனிதாவிடம் ஷிவானி வேண்டுகோள் வைக்க, அனிதா வாசித்தது அத்தனை அருமை. சட்டென்று தொலைக்காட்சியின் முன்னால் உட்காந்திருக்கிறோமோ என்கிற பிரமையைத் தந்தது.

எதிரில் நின்றிருந்த ‘மொட்டை பாஸ்’ சுரேஷைப் பற்றிய ஒரு விஷயத்தை கிண்டலுடன் அவர் ‘செய்தியாக’ வாசிக்க, சுரேஷ் உள்ளுக்குள் காண்டானாரோ என்னமோ, அதை மறைத்துக் கொண்டு “நீ பேசினது... நல்லாயிருந்தது. ஆனா நான் தள்ளியே நிக்கறேன். சில பேர் ‘வணக்கம்’ன்னு சொல்றப்ப மூஞ்சல எச்ச வந்து விழுந்துடும்" என்று பதிலுக்குக் கலாய்க்க, அப்போதைக்கு கவுண்ட்டர் தந்து சமாளித்தாலும் சுரேஷின் கமென்ட்டால் அனிதா உள்ளே காயப்பட்டார் என்பது தெரிந்தது.

இதைப் பற்றி பிறகு வேல்முருகன் மற்றும் ரேகாவிடம் அனத்திய அனிதா, ‘நாளைக்கு நிச்சயம் பஞ்சாயத்தைக் கூட்டப் போறேன். அவர் கிட்டயே நேரா சொல்வேன். இப்ப பேசினா புறம் பேசினா மாதிரி ஆகிடும்’ என்று சபதம் எடுத்துக் கொண்டார்.

மறுநாள் காலை. ஷிவானியும் பாலாவும் வாக்கிங் சென்று கொண்டிருக்க “என்ன இழவுடா இது.. இவங்க நேத்து நைட் ஆரம்பிச்ச வாக்கிங்கை இன்னமும் நிறுத்தவேயில்லையா?” என்பது போல் தோன்றியது. பாலா சிறந்த விவசாயி போல.
பிக்பாஸ் - நாள் 2

விடியற்காலை பாட்டாக ‘சும்மா கிழி’ பாடலைப் போட்டதும் போட்டியாளர்கள் நடனத்தைக் கிழிக்க ஆரம்பித்தார்கள். தான் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஷிவானி அதிகம் மெனக்கெடுவது போல் தோன்றியது. நன்றாகவே ஆடுகிறார். ஆனால் தலையின் இரண்டு பக்கமும் நிற்கும் கொம்பு மாதிரியான சமாச்சாரம்தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பாட்டை பாதியிலேயே நிறுத்திய பிக்பாஸ், “நாமினேஷன் ஒத்திகை சடங்கு ஒண்ணு நடத்தினோம்ல... அது சும்மா... டைம்பாஸிற்குத்தான் செஞ்சோம். இந்த வாரம் நாமினேஷன் கிடையாது” என்று சொல்ல மக்கள் உற்சாகமாகி மேலதிக கொலைவெறியுடன் ‘சும்மா... கிழி…’யைத் தொடர்ந்தார்கள்.

கிச்சன் ஏரியா. ‘அனிதா’ தன் செய்தி வாசிப்பு மிமிக்ரியை மீண்டும் செய்து காண்பிக்க, சும்மா இருக்க முடியாத சுரேஷ் “அருமைடா செல்லம்" என்று சமாதானக் கொடியுடன் அனிதாவை நெருங்க “என் கிட்ட வராதீங்க. உங்களை எனக்குப் பிடிக்கலை அங்கிள்" மோடிற்கு மாறினார் அனிதா.

“நியூஸ் ரீடர்கள் பேசினா எச்சி தெறிக்குமா... நீங்க சொன்னது லோக்கல் கமெண்ட்டா இருக்கு" என்று நேற்று எடுத்த சபதத்தை செயலாக்கும் நோக்கில் அனிதா எகிற, “நான் எல்லோரையும் சொல்லல. ஒரு குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளரைத்தான் சொன்னேன். அவங்க ‘வணணக்கககம்’ –ன்னு சொன்னா.. எச்சி தெறிக்கும்... ன்னு நாங்க பேசிப்போம்” என்று சுரேஷ் அளித்த விளக்கத்தை அனிதா ஏற்கத் தயாராக இல்லை.

(அந்த ‘வணணக்ககம்’ செய்தி வாசிப்பாளர் யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?)

பிக்பாஸ் - நாள் 2

இவர்கள் இப்படி உக்கிரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போது சுற்றியுள்ள எவரும் கண்டுகொள்ளாமல் அவரவர்களுக்குள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ரேகா பஞ்சாயத்திற்குள் புகுந்து, ‘பெரியவங்க நாமதான் விட்டுக் கொடுக்கணும்” என்று சுரேஷிடம் சொன்னதும் ‘அப்பாடா.. எஸ்கேப் ஆக ஒரு சான்ஸ் கிடைச்சது’ என்று சபையிலிருந்து அனத்திக் கொண்டே வெளியேறினார் சுரேஷ்.

இதில் என்னவொரு அவல நகைச்சுவை என்றால், ‘எச்ச தெறிச்சது’ கமென்ட்டை விடவும் சுரேஷூம் அனிதாவும் ஆக்ரோஷமாக வாக்கு வாதம் செய்த போதுதான் சுற்றிலும் அதிகம் எச்சில் தெறித்திருக்கும்.

அனிதாவின் ‘கலாய்ப்புக்கு’ பதில் கவுன்ட்டர் தந்த சுரேஷின் கமென்ட்டை அனிதா இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து ஆக்கியிருக்க வேண்டாம். அதை விடவும் ‘நியூஸ் ரீடர்ஸ்’ என்று பொதுவாக்கியிருக்க வேண்டாம். இந்த விஷயத்தில் சுரேஷின் ஆட்சேபம் நியாயமானதுதான். கேமராவிடமும் இதை முறையிட்டு பதிவு செய்து தன் தரப்பை ஜாக்கிரதையாக்கிக் கொண்டார் சுரேஷ்.

‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என்னும் பாடலை கேமராவுடன் முன்பு பாடிக் கொண்டிருந்தார் ‘மேக்கப்’ ரேகா. தேவலாம். சூப்பர் சீனியர்களுக்கான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நல்ல வாய்ப்பு. பிறகு கூட வந்து இணைந்த கொண்ட ஆஜித் தனது இனிமையான குரலில் பாடலைப் பாடியது அருமை.

பிக்பாஸ் மக்களுக்கு ஒரு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ‘கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் அனைவரும் பேச வேண்டும். கலைத்துறையில் சாதித்தவர்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சில பாராட்டுக்களையும் நிறைய கிண்டல்களையும் பார்த்திருப்போம். ஆனால் தன் இடத்தை அடைய ஒவ்வொருவரும் எத்தனை அவமானத்தை, சிரமத்தை அடைந்தார்கள் என்பதை ‘உருக்கமாக’ சொல்ல வேண்டும்.

பிக்பாஸ் - நாள் 2

கரும்பு ஜூஸ் போல சென்ட்டிமென்ட்டை வலுக்கட்டாயமாகப் பிழிந்து பார்வையாளர்களைக் கண்கலங்க வைக்கும் ரியாலிட்டி ஷோவின் வழக்கமான உத்திதான் இது.

மனது சரியில்லையென்றால் நண்பர்களை அழைத்து எதையாவது பேசி சிரித்து மனநிலையைச் சரிசெய்து கொள்வதுதான் நமது வழக்கம். ஆனால், “மச்சான். நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு வந்துடுங்க... ஒண்ணா சேர்ந்து ஒப்பாரி வைக்கலாம்" என்று நாம் பேசிக் கொள்வதில்லை. ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் இந்த திட்டமிடுதல் நடக்கும்.

ஓகே.. இது வணிக விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் ‘சிறப்பாக’ அழ வைப்பதுதான் போட்டிக்கான தகுதி என்பது போல் பிக்பாஸ் விதியமைத்தது ஆட்சேபகரமானது.

இந்த டாஸ்க்கில் எட்டு தகுதியான இடங்கள் மட்டுமே உண்டு. தகுதி பெறாத மற்றவர்களை அடுத்த வாரம் நாமினேட் செய்ய முடியும். தகுதி பெற்றவர்களை செய்ய முடியாது. எனில் போட்டியாளர்களின் மனங்களில் என்ன தோன்றும்? நாமினேஷனைத் தவிர்ப்பதற்காக செயற்கையான உருக்கத்தை மிகையாக கொட்டித் தீர்க்க அவர்கள் திட்டமிடலாம். ‘யார் சிறந்த முறையில் ஒப்பாரி வைப்பது?’ என்று பெரும்போட்டியே நடக்கலாம்.

‘கடந்து வந்த பாதை’ டாஸ்க்கில் முதலில் பேச வந்தவர் வேல்முருகன். ‘மனசைத் திறந்து பேசுங்க’ என்று பிக்பாஸ் சொன்னவுடன் இயக்குநர் சேரன் நடிக்க ஆரம்பிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டார் வேல்முருகன்.

பிக்பாஸ் - நாள் 2

ஆனால் இவரது கிராமப் பின்னணியும் வறுமையும் கேட்க உருக்கமாகவே இருந்தது. பள்ளியில் அளிக்கப்படும் மதிய உணவை நம்பியே ஒரு குடும்பம். ஆடு, மாடு மேய்த்து அதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பாதி உணவு. வானொலி பாடல்களைக் கேட்டு பாடும் திறமையை வளர்த்துக் கொண்டது. இசைக்கல்லூரியில் சேர சென்னைக்கு வந்து பட்ட அவதிகள், காதல் திருமணம், அதற்கான போராட்டம், சினிமா பாடல் வாய்ப்பு, பிறகு கிடைக்க ஆரம்பித்த வெற்றி, அப்துல் கலாம் கையால் பெற்ற விருது ஆகியவற்றை துயரம் அடைத்த குரலில் திக்கித் திணறி சொன்னார் வேல்முருகன்.

கிராமப்புறங்களில் இருந்து பெருநகரத்திற்குள் வந்து ஏராளமான நடைமுறை அவஸ்தைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஏராளமான இளைஞர்களின் பிரதிநிதியாக வேல்முருகனை பார்க்க முடிந்தது.

அடுத்து வந்தவர் சனம். இவர் சமீபத்தில் ஒரு பெரிய விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டிருக்கிறார். துவக்க விழாவில் கமலும் இதை விசாரித்தது நினைவிருக்கலாம்.

மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி பக்கத்து காலி மைதானத்தில் இருந்த முள்வேலியின் மீது விழுந்திருக்கிறார் சனம். அரைகுறை நினைவுடன் ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களுக்கு உதவி கேட்டு கத்திக் கொண்டிருந்தவரை எவரோ ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். முதுகுத் தண்டில் பலமாக அடிபட்டதால் அது தொடர்பான உபாதைகளால் நிறைய அவஸ்தைப் பட்டிருக்கிறார். ‘இனி நடக்க முடியுமா’ என்கிற மருத்துவக் கேள்வியை தன் மன உறுதியால் தாண்டி வந்திருக்கிறார்.

“இந்த உலகத்தில் நம்ம பெற்றோர் தரும் அன்புதான் உண்மையானது. நிபந்தனையில்லாத அன்பு அது. அதை யாரும் மறந்துடாதிங்க” என்று உருக்கமாகச் சொல்லி சென்றார் சனம். ‘பாய் பிரெண்ட்ஸ்களின் அன்புல்லாம் போலியானது’ என்கிற ‘தர்ஸனத்தை’ இவரது பேச்சு தந்தது.

அடுத்து வந்தார் அறந்தாங்கி நிஷா. இன்றைய நிகழ்ச்சியின் அட்டகாசமான ‘ஹைலைட்’ என்று நிஷாவின் பேச்சைச் சொல்லலாம். தன் உள்ளார்ந்த துயரத்தை நகைச்சுவையால் மறைத்து மிக இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார்.

பிக்பாஸ் - நாள் 2

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நிஷாவின் நகைச்சுவையைக் கண்டு ரசித்திருக்கிறேன். அதில் கூட அவர் என்னை இத்தனை கவர்ந்ததில்லை. ஆனால் இன்றைய பேச்சின் மூலம் சிறப்பாக கவர்ந்து விட்டார்.

“கறுப்பாக இருப்பவர்கள் எவரும் தாழ்வுமனப்பான்மையில் இருப்பதில்லை. சுற்றியுள்ள மற்றவர்கள்தான் அந்த மனப்பான்மையை உருவாக்குகிறார்கள். நான் இளம் வயதில் என் நிறம் குறித்து கவலையே கொண்டதில்லை. ஆனால் பள்ளியில், பேச்சுப் போட்டிகளில் கடைசியாகத்தான் நிற்க வைப்பார்கள். நிறம், அழகு போன்ற காரணங்களினால் அப்படி நடக்கிறது என்பதைப் பிறகு புரிந்து கொண்டேன்.

கல்லூரி படிக்கும் போது கூட ஒரு பய எனக்கு லவ்லெட்டர் கொடுத்ததில்லை. நானே பிரெண்ட்ஸ்ங்க கிட்ட வாய் விட்டு கதறியிருக்கேன். மூன்று பேர் என்னைப் பெண் பார்த்து விட்டு நிறம் காரணமாக மறுத்து விட்டார்கள். பிறகு என் அத்தைப் பையனே வந்து ஒரு இருட்டு நேரத்துல இந்த இருட்டை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என்று சொல்லிச் சென்றார்.

சினிமா, டிவி போன்ற துறைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ‘கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் என்னைச் சுற்றியுள்ள ஐம்பது ஆண்களும் என்னை சகோதரியாக தாங்கிக் கொண்டார்கள். (அங்க நான் மட்டும்தான் பொம்பளை... ஆனா அதை யாரும் நம்பலை). பெண்கள் சரியாக இருந்தா சுற்றியுள்ள விஷயங்களும் சரியா இருக்கும்.

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் காரணம் என்பார்கள். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் அவள் பட்ட அவமானம் காரணமாக இருந்திருக்கிறது” என்று பேச்சைத் தொடர்ந்த நிஷா, தன் குழந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தைப் பற்றி சொன்ன போது அதுவரை சிரித்து மகிழ்ந்த சபை தன்னிச்சையாக கண் கலங்கத் துவங்கியது.

பிக்பாஸ் - நாள் 2

ஆனால் சொந்த சோகத்திலிருந்து தான் உடனே மீண்டது மட்டுமில்லாமல் அங்கிருப்பவர்களையும் தன் நகைச்சுவையால் மீண்டும் சிரிக்க வைத்தார் நிஷா.

நிஷா அடிப்படையில் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் என்பதால் அநாயசமான உரை அவரிடம் பெருகி வருவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சோகமான விஷயங்களைக் கூட இயல்பான நகைச்சுவை கலந்து உணர்ச்சிகரமாக சொல்வதுதான் அவரது பலம். தன் பேச்சில் சோகம் எட்டிப் பார்க்கும் போது அவரே அதை உடனே உதறி அடுத்த ஜோக்கிற்கு சென்று விடுகிறார்.

Also Read: ஒத்திகை டாஸ்கில் பறந்த ஹார்ட்டின்கள்; முதல் தலைவர் ரம்யா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 1

குழந்தைக்கு அடிபட்டதை வெளியில் யாருக்கும் சொல்லாததற்கு அவர் சொன்ன காரணம் முக்கியமானது. சிறிது பிரபலம் என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவர்களைப் பற்றி கன்னாபின்னாவென்று எழுதத் துவங்கி விடுகிறார்கள். (எனக்கும் என் புருஷனுக்கும் விவாகரத்து–ன்னு எவனோ எழுதிட்டான். இதை என் புருஷனே என் கிட்ட வந்து சந்தோஷமா சொன்னாரு). சோஷியல் மீடியாக்களில் போகிற போக்கில் இறைக்கப்படும் பொறுப்பற்ற கருத்துக்கள், கிண்டல்கள், அவதூறுகள் எங்கோ ஒரு தனிமனிதரை ஆழமாக காயப்படுத்துகிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் என்பதை நிஷாவின் பேச்சு உணர்த்துகிறது.

"நான் எப்பவுமே அழ மாட்டேன். இங்க பேசும் கூட அழக்கூடாதுன்னு நெனச்சேன். அழ வெச்சிட்டீங்களடா” என்று சிரித்தபடி மேடையில் இருந்து இறங்கிச் சென்றார் நிஷா.

சபை மெளனத்தில் உறைந்திருந்தது. ‘நீங்க போகலாம்’ என்று பிக்பாஸ் சொன்னதும் அனைவரும் நிஷாவின் பேச்சைப் பாராட்டினார்கள். ரியோவிற்கும் நிஷாவிற்கும் இடையில் உள்ள சகோதரத்துவ நட்பு அப்போது நன்றாகத் தெரிந்தது.

பிக்பாஸ் - நாள் 2

‘ரியோ கிட்ட போய் பேசு’ என்பது போல் சுரேஷ் நிஷாவிடம் சொல்ல, அங்கு சென்று எதுவும் பேச முடியாமல் கலங்கத் துவங்கினார் நிஷா. ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவது போல் ‘சரி. சரி... அழக்கூடாது” என்று நிஷாவின் கண்ணீரை ரியோ துடைத்து விட்டது அருமையான காட்சி. ‘செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி’ டயலாக்குடன் ரேகாவும் வந்து நிஷாவைச் சமாதானப்படுத்தினார்.

“ஏதோ சென்ட்டிமென்ட்டா பேசிட்டோமே.. இனிமே கலாய்க்க மாட்டாங்கன்னு நெனக்காதே. இனிமேத்தான் நல்லா கலாய்ப்போம்" என்று ரியோ அடித்த கமென்ட் சூழலை இலகுவாக்கியது.

உண்மையிலேயே நிஷா ஒரு கறுப்புத் தங்கம்தான்.



source https://cinema.vikatan.com/television/anithas-conflict-nishas-emotions-bigg-boss-tamil-day-2-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக