Ad

புதன், 21 அக்டோபர், 2020

`நீட் தேர்வை ஆதரிக்கவும் இல்லை... எதிர்க்கவும் இல்லை!' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நீட் தேர்வில் வெற்றிபெற்ற தேனி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு விழா நடத்தினார். இதன் மூலம் நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி விமர்சனமும் எழுந்திருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்

தேனி மாவட்டம், சில்வார்பட்டியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமார், இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி இந்திய அளவில் சாதனை படைத்திருக்கிறார். தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அவர் முதலிடம் பிடித்திருக்கிறார்.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஜீவித்குமார், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதைப் பல்வேறு கட்சியினரும் பாராட்டிவருகின்றனர். அதேநேரம், `இரண்டாவது முயற்சியில்தானே வெற்றி பெற முடிந்தது’ என்றும், `கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுக்கும் பொருளாதாரச் சூழல் அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்காது’ என்றும் நீட் எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜீவித்குமாருக்கு மதுரையில் பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார்.

அமைச்சர் குடும்பத்தினரின் அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மாணவர்களைப் பங்கு பெறவைத்து திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமாக நடத்தினார்கள்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது,``நீட்டால் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், நீட்டுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு நடத்திவருகிறது.
சமீபத்தில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்காக இதே அரங்கில் இரங்கல் கூட்டம் நடத்தி, மாணவர்கள் தவறான முடிவு எடுக்கக் கூடாது என்று அதேநாளில் திறன் மேம்பட்டுப் பயிற்சி நடத்தினோம்.

குடும்பத்தினருடன் ஜீவித்குமார்

நீட் உட்பட பல்வகையான தேர்வு பயம் நீங்க, மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக மதுரை மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். சவால் நிறைந்ததுதான் வாழ்க்கை. அதில், சரியான பாதை தெரிந்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம்.

ஜீவித்குமாருக்கு சரியான பாதை தெரிந்திருக்கிறது. ஆழ்ந்த நம்பிக்கை, விடாமுயற்சி அவரை வெற்றிபெற வைத்திருக்கிறது. நீட் வெற்றி என்ற புதையலை ஜீவித்குமார் எடுத்து வந்திருக்கிறார். நீட் வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதை மாணவர்கள் கண்டுகொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வர வேண்டும். அது தொடர்ந்தால், வரும் காலங்களில் லட்சம் ஜீவித்குமார்கள் உருவாவார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

இந்தக்கால மாணவர்கள் சோஷியல் மீடியாவில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஐடி அமைச்சர் என்ற முறையில் கூறுகிறேன் அது ஓரளவு வேண்டும்தான். அதேநேரம், அதற்கு அடிமையாகிவிடக் கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொள்ள வேண்டும்.

பப்ஜி விளையாட்டால் இளைய சமுதாயம் பாதிக்கிறது என்பதால் மத்திய அரசிடம் அதைத் தடைசெய்ய கோரிக்கை வைத்தேன். `இதனால், இளையவர்கள் எல்லோரும் உங்களை எதிரியாகப் பார்ப்பார்கள். உங்களைக் கிண்டல் செய்து மீம்ஸ் போடுவார்கள்’ என்று என் மகள் சொன்னார். பப்ஜி கேமைத் தடை செய்தது எனக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டது.
அந்த அளவுக்குச் சமூக ஊடகங்களின் தாக்கம் இளைஞர்களிடம் இருக்கிறது.

அமைச்சர் மகள் பரிசு வழங்குகிறார்

எல்லோருக்கும் வாய்ப்புகள் உடனே அமைவதில்லை. ஆனால், கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி கண்டிப்பாக வரும். ஓசியாகக் கிடைக்கும் வெற்றி ஈஸியாகப் போய்விடும்.

Also Read: திரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி?

நானும் பி.காம்ல சேர்ந்தவுடனே ஐ.ஓ.பி பேங்க்கில் மேனேஜர் வேலை கிடைச்ச மாதிரி நினைச்சேன். அப்பத்தான் எங்கள் ஆசிரியர் சொன்னாரு, `உனக்கு முன்னாடி பி.காம் முடிச்சவங்க ரெண்டு லட்சம் பேர் கியூவில் நிக்கிறாங்க’னு. அப்போதுதான் உண்மை உரைத்தது. சரி, அது நமக்குச் சரிப்பட்டு வராது என்று
பெரிய வக்கீலாகிவிட வேண்டுமென்று நினைத்து சட்டக் கல்லூரியில் சேர முயன்றேன். சீட் கிடைக்கலை.

அப்பவும் சோர்ந்துவிடாமல் எம்.எஸ்.டபிள்யூ சேர்ந்தேன். அது என்க்குப் பல அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்தது. என்.எஸ்.எஸ்-ஸில் இருந்ததால், பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் பிரதமர், குடியரசுத் தலைவர் முன் அணிவகுத்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சமூக சேவையின்மீது தீவிர ஈடுபாடு ஏற்பட்டது.

ஜீவித்குமாருக்கு அமைச்சர் பாராட்டு

`உலகிலயே அழகானது எது?’ என்று கேட்டால், `எது பிடிக்குதோ அதுதான் அழகானது’ என்று சொல்வேன். இப்படி ஆர்வமாக விடாமல் உழைத்து வந்ததால்தான், இன்று மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறேன். உழைத்தால் உயர்வு கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம். மாணவர்கள் நதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு நாங்கள் ஆதரவாகவும் பேசவில்லை. எதிர்க்கவும் இல்லை. அதற்குத் தயாராகும் வகையில் கால அவகாசம் கொடுங்கள் என்கிறோம். கால அவகாசம் கொடுத்தால் நீட்டில் தமிழகம் சாதிக்கும். கடந்த ஆண்டு புரியாத நீட் தேர்வு ஜீவித்குமாருக்கு இந்த ஆண்டுதானே புரிந்திருக்கிறது. அதுபோல் எல்லோருக்கும் வாய்ப்பு அமையும்" என்றார்.

ஜீவித்குமார் பேசும்போது, தான் வெற்றி பெறக் காரணமான பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்சி அளித்தவர்கள், பணஉதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜீவித்குமார், ரூ.50,000 நிதியும், வெற்றிக் கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது பெற்றோரும் கலந்துகொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-rb-udhayakumar-speaks-about-neet-in-madurai-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக