Ad

புதன், 21 அக்டோபர், 2020

`சிம்கார்டு... ப்ளுடூத் ஹெட்செட்!’- `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ பாணியில் காப்பியடித்த மாணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், பல்கலைக்கழகத்தின் காந்தாரி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் எஃப்.ஹெச் தனியாஅர் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வு

தேர்வு தொடங்கி அரை மணி நேரத்துக்குப் பிறகு குறிப்பிட்ட ஒரு தேர்வறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் முணுமுணுத்தபடி இருந்ததைக் கண்காணிப்பாளர் பார்த்திருக்கிறார். இதையடுத்து, ஒரு மாணவரை மட்டும் சிறிதுநேரம் கவனித்ததில், அவர் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல் கண்காணிப்பாளர் உணர்ந்திருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவரிடம் சென்று விசாரித்ததில், கண்காணிப்பாளரிடம் அவர் முறையாகப் பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.

மேலும், அந்த மாணவர் கழுத்தில் கறுப்பு நிறத்தில் ஏதோ ஒன்றை வித்தியாசமாக அணிந்திருந்ததையும் கண்காணிப்பாளர் கவனித்திருக்கிறார். `அது என்ன?’ என்று மாணவரிடம் விசாரிக்கவே, அது தாயத்து எனவும் தனது மதம் சார்ந்த உணர்வுகளைப் புண்படுத்த வேண்டாம் எனவும் மாணவர் கூறியதை அடுத்து கண்காணிப்பாளர் பின்வாங்கியிருக்கிறார். இருப்பினும், மாணவர் நடந்துகொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, இதுதொடர்பாக பல்கலைக்கழகத் தேர்வுக் கண்காணிப்புக் குழுவினருக்கு அவர் தகவல் கொடுத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை

கண்காணிப்புக் குழுவினர் வந்து மாணவர்களை சோதனையிட முயன்றபோதும், மாணவர் முன்புபோலவே பதில் சொல்லியதாகத் தெரிகிறது. இதையடுத்து, போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களிடம் சோதனையிட்டதில், கழுத்தில் அணிந்திருந்தது சிம்கார்டு பொருத்தப்பட்ட ஒரு கருவி எனவும், குறிப்பிட்ட அந்த மாணவர், தனது காதில் மிகச்சிறிய அளவிலான ப்ளுடூத் ஹெட்செட்டைப் பொருத்தியிருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

ப்ளுடூத் ஹெட்செட் மூலம் அவருக்கு வெளியில் இருந்து தேர்வுக்கு உதவி கிடைத்ததையும் போலீஸார் உறுதி செய்தியிருக்கிறார்கள். தொடர் விசாரணையில் எஃப்.ஹெச் தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட மொத்தம் 10 பேர் இதேபோல் முறைகேட்டில் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

Also Read: முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் - தேர்வு முடிவை நிறுத்திவைத்த அண்ணா பல்கலைக்கழகம்? #NowAtVikatan

இதுதொடர்பாக பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர், ``இந்த விவகாரம் பல்கலைக்கழக ஒழுங்கு நடைமுறைக் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

பல்கலைக்கழக தேர்வுக் கண்காணிப்புக் குழுத் தலைவர் மனோஜ் ஸ்ரீவத்சவா கூறுகையில், `தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 10 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்கள் ப்ளுடூத் உதவியுடன் நவீன முறையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கருவிகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

ப்ளுடூத் ஹெட்செட்

எஃப்.ஹெச் தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த 90 மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். மற்ற மாணவர்கள் எதும் முறைகேட்டில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வருவது போன்று தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 10 மாணவர்கள் சிக்கிய விவகாரம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/social-affairs/crime/agra-mbbs-students-caught-cheating-in-final-year-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக