Ad

சனி, 10 அக்டோபர், 2020

`வடிவேலுவுக்கு நன்றி சொல்லுங்க நீங்க!' - மனநல மருத்துவரே சொல்றார்

10:10... அதாவது பத்து மணி பத்து நிமிடங்கள். விளம்பரங்களில் கடிகாரங்கள் இந்த நேரத்தைக் காட்டுவதுபோல் அமைத்திருப்பார்கள். அதேபோல், 10/10 என்பது மன நலத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான எண். அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலக மன நல நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மன நலம் தொடர்பான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் பரவலாக எடுத்துரைத்து வருகிறது.

10/10 போல் 2020 என்ற எண்ணும் மிக மிக மறக்க முடியாத எண்ணாக ஆகிவிட்டது. 8, 13 போன்ற அதிர்ஷ்டமில்லாத எண்களில் ஒன்றாக 2020 ஆகிவிட்டது. இந்த ஆண்டில் கொரோனா நமது செயல்பாடுகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. உலகமே முடங்கிக் கிடக்கும் இக்காலகட்டத்தில் பலருக்கும் மன நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதனாலேயே மன நல ஆரோக்கியம் மிக மிக அவசியமாகிறது இப்போது.

பொருளாதார நெருக்கடிகள், உயிர் பயம், வெளியே செல்ல முடியாத முடக்கம், ஆன்லைனிலேயே கல்வி, அதிக வேலை மற்றும் வேலை உறுதியின்மை எனப் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளனர் மக்கள். அதனால் ஏராளமான மன நல நெருக்கடிகள் உண்டாகின்றன. அவை உடல் நலத்தைப் பாதிப்பதோடு தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றையும் உருவாக்குகின்றன. தற்கொலை எண்ணங்கள்கூட உருவாகின்றன. சிலரை போதைப் பழக்கங்களுக்கு அடிமை ஆக்குகின்றன.

மன நலத்தைப் பேணிக்காப்பதில் நகைச்சுவை உணர்வு மிக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், மனிதனின் மன நெருக்கடிகளைக் காக்கும் தடுப்புகளில் ஒன்றாக நகைச்சுவை உணர்வைச் சொல்கிறார். அழுத்தம் எகிறிக்கொண்டிருக்கும் குக்கர், சேஃப்டி வால்வ் வழியே அவ்வப்போது ஆவியை வெளியேற்றி அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதைப்போல, அவ்வப்போது நமது மன அழுத்தத்தை நகைச்சுவை மூலம் குறைத்துக்கொள்வது மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும் நல்லது.

தமிழ்த் திரைப்படங்களில் ஏராளமான நல்ல நகைச்சுவைக் கலைஞர்கள் நமக்குத் தரமான நகைச்சுவை விருந்தளித்துள்ளனர், மருந்தளித்துள்ளனர். என்.எஸ் கிருஷ்ணன் தொடங்கி நாகேஷ், கவுண்டமணி எனப் பலரும் உள்ள அந்த வரிசையில் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருப்பவர்... வடிவேலு. தனது உடல்மொழியாலும், வசன உச்சரிப்பின் ஏற்ற இறக்கங்களாலும் முக பாவனைகளாலும் நமக்கெல்லாம் சிரிப்பை மருந்தாகத் தந்தவர் அவர். சோஷியல் மீடியாவில் வெவ்வேறு வடிவில் அணுதினமும் நம்மை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பவர்.

வடிவேலு

ஏன் வடிவேலுவின் நகைச்சுவையை நாம் மிகவும் ரசிக்கிறோம்? உளவியல் ரீதியாகப் பார்ப்போம்.

பல விஷயங்களை மிக மிக முக்கியமானதாக நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு நாம் இறுக்கமாக இருக்கிறோம். அவையெல்லாம் பெரிய விஷயங்கள் இல்லை என ஒருவர் திரையில் போட்டு உடைக்கும்போது, அதன் அபத்தம் நமக்குப் புரிகிறது. இறுக்கம் குறைகிறது. உண்மையில் நம்முடைய அபத்தத்தன்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக வடிவேலுவைக் காண்கிறோம்.

பலருக்கும் உள்ளூர பயம் இருக்கும். அதைத் தைரியம் என்னும் முகமூடி போட்டு மூடிவைத்திருக்கிறோம் `வின்னர்' பட கைப்பிள்ளைபோல. வெளியே சண்டியர்போல் நடமாடுகிறோம். 'வேணாம், வேணாம்!' எனத் தெனாவெட்டாகச் சொல்கிறோம். கட்டத்துரை கையால் கொஞ்சம் அடி விழுந்தவுடன், `வலிக்கும்! அழுதுடுவேன்!' என உண்மையை அப்படியே வெளிப்படுத்தும்போது, அங்கு கிழிவது வடிவேலுவின் முகமூடி மட்டுமல்ல... நம்முடைய போலி முகமூடிகளும்தான்.

வடிவேலு

இதுபோல, பல விஷயங்களில் போலிப் பெருமை வைத்திருப்போம். அவற்றையெல்லாம் பகிரங்கமாகக் கிழிக்கும் கத்தி, வடிவேலின் நகைச்சுவை. அவற்றுள் ஒன்று, சரும நிறம் பற்றிய பெருமிதம். எத்தனையோ கட்டுரைகள், திரைப்படங்கள் நிறப் பெருமிதத்துக்கு எதிராக வந்திருக்கின்றன. இருந்தாலும் பொதுபுத்தியில் சிவப்பு, வெள்ளை நிறத்தைப் பற்றிய பெருமிதத்தைச் சில நொடிகளில் உடைத்துக் காட்டியவர், வடிவேலுதான். `செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்' என்ற அவரின் காமெடிதான். அபத்தமாகத் தோன்றினாலும் அதுதான் நகைச்சுவையின் தன்மை. மிகைப்படுத்துதல் மூலம் ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை நமக்குத் தெரிவிப்பது.

பொதுவாக நாம் எல்லோரும் மனதுக்குள் சில எண்ணங்களை வைத்திருப்போம். ஆனால், அவற்றை வெளியே சொல்ல முடியாமல் அதற்கு நேர்மாறாகப் போலியாக நடித்துக் கொண்டிருப்போம். அதை நேரடியாக ஒருவர் கேட்கும்போது, நாம் அதை நகைச்சுவையாக நினைத்துச் சிரித்தாலும், அடிமனதில் நாம் நினைத்து மருகிக்கொண்டிருக்கும் இறுக்கம் குறைந்து இலகுவாகிறோம்.

நிர்வாணமாக இருக்கும் மன்னருக்கு பயந்து எல்லோரும், `உங்கள் உடை நன்றாக இருக்கிறது' எனும்போது ஒரு குழந்தை மட்டும், `என்ன ராஜா பப்பி ஷேமா இருக்காரு?' என்று கேட்டதே... அந்தக் குழந்தைத்தனமான எளிமை வடிவேலுவின் நகைச்சுவையில் இருக்கிறது.

எல்லோரும் மறுபேச்சு இல்லாமல் வித்தைக்காரன் சொன்னதைக் கேட்டு தாயத்தை வாங்கிக் கட்டிக்கொள்ளும்போது, `நான் ஏன்டா சுடுகாட்டுக்கு ராத்திரி 12 மணிக்குப் போகப்போறேன்?' என அப்பாவியாகக் கேட்பது, அந்த போலித்தனமில்லாத குழந்தைத்தனம்தான். நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால், நமது ஈகோ என்பது பலூன்போல் வீங்கி இருக்கிறது. அதை அடிக்கடி உடைக்கும் குண்டூசிதான் நகைச்சுவை.

வடிவேலு

வரலாறு என்பது ஆட்சியாளர்கள் இஷ்டத்துக்கு மாற்றி அமைப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதைப் பற்றி நிறைய படித்திருக்கிறோம். ஆயினும் `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' தன்னை பெரும் பயில்வான்போல் காட்டிக்கொண்டு படம் வரைய வைத்து, `வரலாறு முக்கியம் அமைச்சரே!' எனச் சொல்லும்போது, வரலாற்றில் சிலர் செய்த அபத்தங்கள் புரிந்து சிரிக்கிறோம். `நாங்கள் வீரம் விளைந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்' எனப் பெருமிதங்களில் மிதப்பவர்களுக்கும் அது ஒரு சுருக் குண்டூசியாக இருக்கும்.

நம்முடைய குறைகளை நினைத்துப் புலம்புவது, வருத்தப்படுவது, பிறரைக் குறைசொல்வது போன்றவை எல்லாம் மன அழுத்தத்துக்கு வழிவகுப்பவை. நமது குறைகளை ஏற்றுக்கொள்வதே மன அழுத்தம் குறைப்பதற்கான முதல்படி. தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்ளும் சுய பகடி, அதற்கான சிறந்த வழி. `நாய் சேகர்' முதல் `கண்ணாடியில தெரியுற குரங்கு பொம்மை' வரை... எல்லாம் அந்த ரகம்தானே?

எவ்வளவோ பிளான் பண்ணியும் சில பல விஷயங்கள் நம் வாழ்வில் சொதப்பத்தான் செய்யும் என்பதை நிதர்சனமாக உணர வேண்டும். அப்படியான சூழ்நிலைகளில் அதை நாமே பகடி செய்து அதை எளிதாக எடுத்துக்கொண்டு நகர, `எதையும் ப்ப்ப்ளான் பண்ணிப் பண்ணனும்' என்ற வடிவேலுவின் நகைச்சுவை ப்ரிஸ்கிரிப்ஷனைத்தானே நாம் பயன்படுத்துகிறோம்?

வடிவேலு

நாம் சீரியஸாகச் சொல்லும் விஷயங்களைப் பலர் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்களது அபிப்பிராயங்களை நினைத்துக் கவலைப்படக் கூடாது. இந்த உண்மையை, சிம்பிளாக ஊத்தப்ப காமெடியில் சொல்லிவிட்டுப் போகிறார் வடிவேலு. காதலியை வர்ணிப்பதுபோல் ரசித்து ஊத்தப்ப ரெசிப்பி சொல்வார் வடிவேலு. சர்வரோ, `சாருக்கு ஒரு ஊத்தப்பம்' எனச் சிம்பிளாகச் சொல்லி முடிக்கும் அந்த நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் இல்லை. இப்படி, ஒவ்வொரு முறை நம் நீண்ட விளக்கங்கள் கட் செய்யப்படும்போதும், நம் வாழ்வில் வரும் `சர்வர்கள்' மேல் கோபப்படாமல் சிரித்து நகர, ஊத்தப்ப காமெடியே துணை.

நம்மை நல்லவன் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக முட்டுச் சந்தில் மூன்று மணி நேரம் கதறக் கதற அடிவாங்குவோம். வெளியே சூனா பானா எனப் பெரிதாக ஃபிலிம் காட்டினாலும், வீட்டுக்குள் வெறும் சுப்பையா பாண்டியன்தான் என்பதை உணரவைப்பது, வடிவேலுவின் காமெடி.

மருத்துவர். ராமானுஜம்

இப்படி, நமது பலவீனங்களையும் மனதின் அந்தரங்க இருட்டுகளையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருக்கும் வடிவேலு, ஒப்பற்ற நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். அவருக்கு இந்த உளவியல் எல்லாம் தெரிந்திருக்குமா எனத் தெரியாது. ஆனால், இவற்றையெல்லாம் இயல்பாக நிகழ்த்திக் காட்டும் பிறவிக் கலைஞன் அவர்.

அவரது நகைச்சுவைக் காட்சிகள், நம் மன நலத்துக்கு நல்லதொரு மருந்து. அந்த நகைச்சுவை மருத்துவருக்கு, உலக மன நல நாள் வாழ்த்துகளும், நன்றிகளும்!

- மருத்துவர். ராமானுஜம், மன நல மருத்துவர்.


source https://www.vikatan.com/health/healthy/psychiatrist-explains-how-vadivelu-comedies-makes-us-happy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக