கொரோனாவால், உலக பொருளாதாரம் செயலிழந்தபோது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் வாகன உற்பத்தித்துறையும் ஒன்று. ஆனால், அத்தகையை இக்கட்டான சூழலில், சிறப்பாகவும், மனித குலத்துக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் செயல்பட்டது விவசாயத்தொழில் மட்டுமே. கொரோனா கால கட்டத்தில் விவசாயத்தொழில் மட்டுமே தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்ததால், இந்த ஆண்டு செப்டம்பரில், முதன்முறையாக இந்தியாவின் டிராக்டர் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.
செப்டம்பர் மாதம் மட்டும் 1,16,185 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 27 சதவிகிதம் அதிகம். இதில் ஏற்றுமதி மட்டும் 7,600 டிராக்டர்கள் என டிராக்டர் மற்றும் இயந்திரமயமாக்கல் சங்கத்தின் (Tractor and Mechanization Association) தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்றாவது முறையாக இப்படி டிராக்டர் விற்பனை 1,00,000 ஐ தாண்டியுள்ளது. விவசாயத்தையே முற்றிலும் சார்ந்துள்ள டிராக்டர் உற்பத்தியாளர்களின் இந்த சாதனைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ரஃபி சீஸனில் கிடைத்த நல்ல மகசூல், அதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்த நல்ல வருமானம், மற்றும் காரிப் சீஸனில் பெருமளவில் நடைபெற்ற விதைப்பு பணிகள் போன்றவை மிகவும் முக்கியமானவையெனப் பெருமையுடன் கூறுகிறார் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பின் தலைவர் விங்கேஷ் குலாட்டி. மேலும், ``நல்ல பருவமழை, காரிப் பயிர் பரப்பளவு உயர்வு, அரசின் தொடர் ஆதரவு மற்றும் முக்கிய பயிர்களுக்கு அதிகரித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையெனப் பல நன்மைகள் ஏற்பட்டதால், டிராக்டர்களின் சில்லறை வர்த்தகம் சிறப்பாக இருக்கிறது. வரும் பண்டிகைக் காலங்களில், விற்பனை மேலும் அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் எஃப்.இ.எஸ். பிரிவின் செப்டம்பர் மாத உள்நாட்டு விற்பனை 42,361 டிராக்டர்களாக இருந்தது. முந்தைய ஆண்டில் இதன் விற்பனை 36,046 மட்டுமே. தற்போது, டிராக்டர்களின் விற்பனை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் வேளாண் இயந்திரங்கள் பிரிவு இந்த ஆண்டு செப்டம்பரில் 11,851 டிராக்டர்களை விற்றுள்ளது. அந்நிறுவனம் முந்தைய ஆண்டைவிட 9.2 சதவிகித வளர்ச்சியை இந்த ஆண்டும் பதிவு செய்துள்ளது.
ஊரடங்கு ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டவுடன், டிராக்டர்களின் தேவை கணிசமாக உயர்ந்தது. தற்போது, நேர்மறையான பொருளாதார காரணிகளால் கிராமப்புற தேவையும் அதிகரித்துள்ளது. நிதி சுலபமாகக் கிடைத்ததால் விவசாயிகளின் உணர்வு மற்றும் மனநிலை மேம்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், தற்போது தனது உச்ச உற்பத்தித் திறனை எட்டும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும், வேகமாக அதிகரித்து வரும் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனாலிகா குழுமம் 51.4 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ``இது டிராக்டர் தொழில்துறையின் சராசரியை விட அதிகமானது. விவசாயிகளின் நேர்மறையான உணர்வு, நிறுவனத்தின் வளர்ச்சி வேகமெடுக்க உதவியது. வரவிருக்கும் பண்டிகை காலம் சிறப்பாக இருக்கும்'' என்கிறார் சோனலிகா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராமன் மிட்டல்.
இந்த ஆண்டு ஜனவரி முதலே, டிராக்டர் உற்பத்தி மந்தமாக இருந்தது. ஜனவரியில் 68,503 ஆக இருந்த டிராக்டர் உற்பத்தி மார்ச் மாதம் உற்பத்தியில் 50 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. கொரோனா தாக்குதல் உச்சத்தை எட்டியதால், ஏப்ரல் மாதம் உற்பத்தி அதலபாதாளத்துக்குச் சென்றது. ஏப்ரலில் டிராக்டர்களின் உற்பத்தி வெறும் 158 மட்டுமே. விற்பனை 80 சதவிகிதம் சரிந்தது. பொருளாதார வீழ்ச்சியால் பல ஆட்டோ நிறுவனங்கள் உற்பத்தித் திறனைக் குறைத்தன. அதற்கு நேர்மாறாக, விவசாயத்தொழில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டதால், மே மாதம் டிராக்டர் விற்பனை ஐந்து மடங்கு உயர்ந்தது. இந்த மாபெரும் வளர்ச்சியால் உற்சாகமானார்கள் டிராக்டர் உற்பத்தியாளர்கள். விளைவு, ஜுன் மாத டிராக்டர் உற்பத்தி 81,445 ஆக உயர்ந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத உற்பத்தியைவிட 25 சதவிகிதம் அதிகம். கூடவே இயற்கை விவசாயிகளுக்குக் கைகொடுத்ததாலும் விவசாய உற்பத்தி பெருகி, நிதி நிலை உயர்ந்ததாலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் டிராக்டர் விற்பனை மளமளவெனப் பெருகியது.
கொரோனா காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து தடையின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று ஜெனெரிக் மருந்துகள். மற்றொன்று டிராக்டர்கள். ஜூனில் மட்டும் 5,760 டிரக்டர்கள் ஏற்றுமதியாகின. ஆகஸ்ட் மாதம் எஸ்கார்ட் நிறுவனம் 80 சதவிகித வளர்ச்சி கண்டது. அதன் உள்நாட்டு விற்பனை 70 சதவிகிதம் மற்றும் ஏற்றுமதி 90 சதவிகிதமாகவும் உயர்ந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3.4 சதவிகிதம் வளர்ச்சி கண்ட ஒரே துறை விவசாயம். பொருளாதாரம் சுருங்கி, வேலை வாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்த நிலையில் டிராக்டர் துறையின் சாதனைக்கு விவசாய வளர்ச்சிதான் அடித்தளமிட்டது. விவசாயக்கூலிகள் பற்றாக்குறை அதிகரித்ததும், டிராக்டர் விற்பனைக்கு முக்கிய காரணம். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் ஊதிய அதிகரிப்பும், விவசாயிகளை டிராக்டரை நோக்கி நகர வைத்தது. ரபி சீஸனின் அதிக மகசூலும் விவசாயிகளின் பணப்புழக்கத்தை அதிகரித்ததும் ஒரு காரணம். நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து தொழில்களின் வளர்ச்சிக்கும் அடிப்படை விவசாயம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/agriculture/tractor-sales-continuously-booming-amidst-economic-slowdown-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக