Ad

புதன், 21 அக்டோபர், 2020

CSK-வின் `கடைக்குட்டி சிங்கம்' என்னவெல்லாம் சம்பவங்கள் செய்திருக்கிறார் தெரியுமா?! #SamCurran

இந்திய இளம் வீரர்களிடம் இதுவரை ஸ்பார்க்கைக் காணாத கேப்டன் தோனியே, கண்டதும் கரன்ட் அடித்து, "ஒரு முழுமையான வீரராக எங்களுக்குக் கிடைத்துள்ளார்" என புகழ்ந்து தள்ளிய வீரர் சாம் கரண். சென்னையின் கடைக்குட்டி சிங்கம்!

2018-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக, மொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஒரு பாக்கெட் சைஸ் டைனமைட், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சாம் கரண்.

சாம், ஜூன் 3, 1998-ல் இங்கிலாந்தில் உள்ள நார்த்தாம்டனில் பிறந்தார். இங்கிலாந்தில் பிறந்தாலும், சாம் வளர்ந்தது ஜிம்பாப்வேயில்தான். சாமின் குடும்பம் கிரிக்கெட் பாரம்பர்யம் மிக்கது. இவர் தாத்தா உள்ளூர் கிரிக்கெட்டர். இவர் தந்தை கெவின் மால்கம் கரண் ஜிம்பாப்வேக்காகவும் சில போட்டிகளில் ஆடியிருக்கிறார். சாம், அவரது சகோதரர்கள் டாம் கரண் மற்றும் பென் கரண் மூவருமே கிரிக்கெட் வீரர்கள்தான். அப்பாதான் பயிற்சியாளர்.

Sam Curran | Shane Watson

சாமுக்கான முதல் வாய்ப்பு, 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில், 2011-ல் கிடைக்க, அந்தத் தொடரின் ஐந்து போட்டிகளில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நேரத்தில், சாமின் தந்தை எதிர்பாராத விதமாக திடீரென இறக்க, அதிர்ச்சியில் உறைந்தது ஒட்டுமொத்த குடும்பமும். இதே சமயத்தில் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கவுன்ட்டி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு, சாமைத் தேடி வந்தது. அவரது சகோதரர் டாம் ஏற்கெனவே அந்த அணிக்காக ஆடி வந்ததால், சாமும் ஜிம்பாப்வேவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார்.

தொடர்ந்து சர்ரே அணிக்காக விளையாடத் தொடங்கிய இந்தச் சகோதரர்கள் பல சம்பவங்களை அங்கே நிகழ்த்திக் காட்டினர். 2015-ம் ஆண்டு நார்த்தாம்டன்ஷயருக்கு எதிரானப் போட்டியில், இருவரும் இணைந்து பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கவுன்ட்டி போட்டிகள் வரலாற்றிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அபூர்வ சகோதரர்களாய் ஜொலித்தனர்.

கவுன்ட்டி போட்டிகளில் சர்ரே அணியின் சார்பில் பல சாதனைகளை தன் பெயரைப் பதிவு செய்தார் சாம். கவுன்ட்டி போட்டிகளில் ஆடிய குறைந்த வயதுடைய வீரராகவும், குறைந்த வயதில் 5 விக்கெட் ஹாலை பதிவு செய்த வீரராகவும் விளங்கிய அவர், 34 போட்டிகளில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 11 அரைச்சதங்கள் உள்பட 1272 ரன்களையும் குவித்தார்.

#SamCurran #Tomcurran
இதன் பலனாய் 2016-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் சாம் கரணுக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில், 7 விக்கெட்டுகளை எடுத்து 201 ரன்களையும் குவித்தார்‌. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான இவரது 83 ரன்கள் இவரை அடையாளம் காட்டியது.

வரிசைகட்டிய இந்த வெற்றிகளின் மூலமாய் சாமுக்கு அவருடைய இருபதாம் வயதிலேயே இங்கிலாந்து அணிக்காக ஆடும் வாய்ப்பு வந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து டாம் கரண் இங்கிலாந்து அணிக்காக ஆடிக் கொண்டிருக்கையில், அதற்கு அடுத்த ஆண்டே அந்த வாய்ப்பு சாமுக்கும் கிடைத்தது. 2018-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராகத் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலும், அதே ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியிலும் இவர் விளையாடினார்.

Sam Curran

இந்தப் போட்டிகளிலெல்லாம் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் எதையும் சாம் நிகழ்த்தத் தவறிய கட்டத்தில், இவருக்கான திருப்புமுனையாக அமைந்தது, 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான். இந்தப் போட்டியில், முரளி விஜய், தவான், கேஎல் ராகுல் என முதல் மூன்று பேட்ஸ்மேன்களையும் ஆட்டமிழக்கச் செய்த சாம், ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் வீழச் செய்து, விஸ்வரூபம் எடுத்தார். இந்தப் போட்டிதான் இவரை ஒரு சிறந்த ஆட்டக்காரராக அடையாளப்படுத்தியது. இதே காரணத்தால், 2019-ம் ஆண்டு, விஸ்டனும் அந்த ஆண்டின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராய் இவரைத் தேர்ந்தெடுத்தது.

இதனைத் தொடர்ந்து 2019 ஐபிஎல்-கான ஏலத்தில், பஞ்சாப் இவரை 7.20 கோடிக்கு விலைக்கு வாங்கினர். அந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் ஓப்பனராக 20 ரன்களைச் சேர்த்த சாம், பந்துவீச்சில் மிரட்டினார். அந்தப் போட்டியில், ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த இவர், அதன்மூலமாய் ஐபிஎல்-லில் ஹாட்ரிக்கைப் பதிவு செய்த குறைந்த வயதுடைய வீரர் என்னும் பெருமையையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 55 ரன்களைக் குவித்து அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடிக் காட்டினார். அந்த ஐபிஎல் தொடரில், 323 ரன்களைக் குவித்திருந்த இவர், பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

#SamCurran

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்-ல், பஞ்சாப் இவரைத் தக்க வைத்துக் கொள்ளத் தவற, அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, சென்னை இவரை 5.5 கோடிக்கு வாங்கியது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்கும் மேலாய் கடைக்குட்டி சிங்கம், சுட்டிக் குழந்தை என இவரை சென்னை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சிஎஸ்கேவுக்காக மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே, ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி கலக்கிய சாம், தொடர்ந்து ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஸ்மித், ராகுல் திவேதியா, பராக் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதேபோல கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்த வருட ஐபிஎல்-ன் முதல் பாதியில், பேட்டிங்கில் இவரை எந்த இடத்தில் இறக்குவது என்பது உறுதிப்படுத்தப்படாத காரணத்தால், கேமியோ இன்னிங்ஸ் ஆடியே பழக்கப்பட்ட சாம் ரன்கள் சேர்க்கக் கொஞ்சம் திணறினாலும், கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளிலும், விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் சன் ரைசர்ஸுக்கு எதிரான சமீபத்திய போட்டியில், ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பை தோனி இவருக்கு வழங்க, அதனை நன்கு பயன்படுத்தி, 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்து, அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வந்த சன்ரைசர்ஸின் இன்னிங்ஸிலும், ஆபத்தான வார்னரை ஆட்டமிழக்கச் செய்து, சன்ரைசர்ஸுக்கு அதிர்ச்சித் தொடக்கத்தைப் பரிசளித்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார்.

Sam Curran | #RRvCSK

இதுவரை தான் விளையாடிய 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாம், இனி வரும் போட்டிகளில், விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், ஓப்பனராக தொடர்ந்து இறங்கும் பட்சத்தில் ரன் வேட்டையிலும் ஈடுபடுவார் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.

ஆனால், சென்னைக்கு இன்னும் நான்கு மேட்ச்கள் மட்டுமே இருக்கிறது என்பதுதான் சோகம்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-story-on-chennai-super-kings-new-sensation-sam-curran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக