Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

`2021-ல் யார் முதல்வர் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்' - பா.ஜ.க கருத்துக்கு அ.தி.மு.கவின் பதில்?

கூட்டணி குறித்த குடுமிப்பிடி சண்டைகள்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறதா, இல்லையா என்கிற சர்ச்சைக்கு அண்மையில், முற்றுப்புள்ளி வைத்த தமிழக பா.ஜ.க தலைவர், 'கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறீர்களா...' என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் தவிர்த்துள்ளது அடுத்தகட்ட சர்ச்சைக்குத் திரி கிள்ளியிருக்கிறது.

கே.எம்.முனுசாமி

இந்த நிலையில், ''தேசிய கட்சியோ, மாநில கட்சியோ யாராக இருந்தாலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் இருக்கலாம். அதற்கு விருப்பம் இல்லாதவர்கள் கூட்டணியைவிட்டு வெளியேறிவிடலாம்'' என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி.

அ.தி.மு.க-வின் இந்த அசால்ட் அறிவிப்பு, தமிழக பா.ஜ.க-வினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,

''அ.தி.மு.க-வோடு கூட்டணி தொடர்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவரே கூறிவிட்டார். அவரே, 'தமிழகத்தில் பா.ஜ.க 60 இடங்களில் வெற்றி பெறும். மொத்தம் 90 இடங்களில் நல்ல எண்ணிக்கையில் வாக்கு பெறக்கூடிய வகையில் கட்சி வலுவாக இருக்கிறது' என்பதையும் கடந்த மாதமே சொல்லியிருக்கிறார்.

ஜி.கே.நாகராஜ்

இந்த 2 விஷயங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, வருகிற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றபிறகு முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க-வின் பங்கு கணிசமாக இருக்கும். அதாவது, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கும்போது, முதல்வர் யார் என்பதை முடிவு செய்கிற இடத்தில் நாங்களும் இருப்போம். இந்தக் கருத்தை இப்போது அல்ல... ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம். எனவே இதில் எனக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. எனவே, கூட்டணியில் இருப்பவர்கள் இருக்கலாம், விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்றெல்லாம் இப்போதே சொல்லிக்கொண்டிருப்பது தேவையற்றது. வருகிற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அவர்களும் ஏஜென்சி வைத்து கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்தாம். எனவே, பா.ஜ.க-வுக்கு எந்தளவு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது என்பது அவர்களுக்கும் தெளிவாகவே தெரியும். இந்த நிலையில், கூட்டணியில் பா.ஜ.க-வை மிஸ் செய்ய நினைப்பவர்கள், முதல்வர் பதவியையும் மிஸ் செய்துவிடுவார்கள்'' என்கிறார் முத்தாய்ப்பாக.

கோவை செல்வராஜ்

இதையடுத்து, கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்த தமிழக பா.ஜ.க-வின் கருத்துக்கு, அ.தி.மு.க தரப்பினரின் பதிலைத் தெரிந்துகொள்வதற்காக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்...

''அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டு 47 ஆண்டுகளில், 32 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு இன்றைக்கும் அ.தி.மு.க தொண்டர்களால் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எங்கள் கட்சியின் கொள்கை, லட்சியத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் சொல்வதைக் கேட்கிற கட்சியாக இருந்தால் மட்டுமே எங்களோடு கூட்டணியில் பயணிக்க முடியும். அ.தி.மு.க-வின் வழிகாட்டுதலுக்கும் செயல்பாட்டுக்கும் உகந்ததாக இல்லாவிட்டால், கூட்டணியில் இருக்க முடியாது.

Also Read: வறுமையில் குடும்பம், செல்போன் வாங்கிக் கொடுத்த ஆசிரியை... நெகிழ்ச்சியில் மாணவிகள்!

'சட்டமன்றத் தேர்தலில், யாரோடு கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில்தான் முடிவு செய்யப்படும்' என்று கடந்த மாதமே முதல்வர் சொல்லியிருக்கிறார். ஊடகத்தினர் கேட்டுக்கொண்டே இருந்ததனால், 'எங்கள் முதல் அமைச்சர் வேட்பாளர் யார்' என்பதை இப்போது கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது. தேர்தலின்போது யாரைக் கூட்டணியில் சேர்க்கலாம் என்பதெல்லாம் அ.தி.மு.க தலைமையே பார்த்து முடிவு செய்யும்.

பொன்.ராதாகிருஷ்ணன்

63 ஆயிரம் கிளைக்கழகங்கள், ஒரு கோடியே 61 லட்சம் உறுப்பினர்கள் என அ.தி.மு.க வலுவாக உள்ளது. எனவே, அ.தி.மு.க-வுக்கு இணையாக மற்ற கட்சிகளைப் பற்றிப் பேசுவதே வேடிக்கையாக உள்ளது; வெட்கக்கேடாக உள்ளது. மற்றவர்கள் இதைவிட வலுவாக இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் தனியாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்று, ஆட்சிப் பொறுப்புக்கு வருவதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான்தோன்றித்தனமாகப் பேசியதால், அந்தத் தேர்தல் முடிவு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அ.தி.மு.க-வோடு கூட்டணியில் இருக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சொல்வார்களேயானால், தேவையற்ற கருத்துகளை ஆளுக்கொருத்தராக சொல்லிக்கொண்டிராமல், ஒற்றுமையாக செயல்பட்டால், அ.தி.மு.க தலைமை சிந்திக்கும். அப்படியல்லாமல், பொறுப்பின்றி அ.தி.மு.க ஆட்சியைப் பற்றியோ அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்தோ பேசிக்கொண்டிருந்தால், அ.தி.மு.க தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜே.பி.நட்டா

தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதிக்கு 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரையிலான ஓட்டுகளைத் தவிர்த்து அதிக வாக்குகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, அவர்களது சக்தி என்னவென்பதை தெரிந்து பேசினால், அவர்களுக்கும் நல்லது; எங்களுக்கும் நல்லது. கூட்டணியைப் பொறுத்தவரை, அகில இந்திய பா.ஜ.க-வின் தலைவராக இருக்கக்கூடியவர் மற்றும் தமிழகப் பொறுப்பாளராக இருக்கக்கூடியவர்கள் எடுக்கிற முடிவுதான் இறுதியானது. மற்றபடி இங்கே இருக்கக்கூடியவர்கள் பேசுவதையெல்லாம் நாங்கள் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை; அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை'' என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/we-will-decide-thecm-in-2021-tamil-nadu-bjps-statement-over-alliance-create-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக