Ad

புதன், 7 அக்டோபர், 2020

அமைச்சர் வேலுமணியின் ரூ.200 கோடி பங்களா... வைரலாகும் வீடியோ! - உண்மை என்ன? #VikatanFactCheck

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 200 கோடி ரூபாய் பங்களா வீடு என்று சொல்லி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது. பிரமாண்டமான அறைகளும், விலையுயர்ந்த ஃபர்னிச்சர்களும், ஜொலிக்கும் மின் விளக்குகளும், அழகான நீச்சல் குளமும் கொண்ட அந்தப் பெரிய வீட்டைச் சுற்றிக் காட்டுவதாக அமைந்திருக்கிறது அந்த வீடியோ. வாட்ஸ்அப்பிலும், சமூக வலைதளங்களிலும் `இது அமைச்சர் வேலுமணியின் வீடு' என்று சொல்லிப் பகிரப்பட்டுவருகிறது.

உண்மை என்ன?

அந்த வீடு உண்மையிலேயே அமைச்சர் வேலுமணியின் வீடுதானா என்பதைத் தெரிந்துகொள்ள, அந்த வீட்டின் புகைப்படம் ஒன்றை கூகுள் தேடலில் ரிவர்ஸ் இமேஜ் முறை கொண்டு தேடிப் பார்த்தோம். அந்தத் தேடலில் நமக்கு விடையாக சில செய்திகள் கிடைத்தன. அந்தச் செய்திகள் மூலம் இது கேரளத்தைச் சேர்ந்த ரெஜி என்பவரது வீடு என்று தெரியவந்தது.

கேரளா பங்களா

Also Read: ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!

மேலும், அந்த வீடு பல பிரபலங்களின் வீடு என்று சொல்லி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கும் உண்மையும் நமக்குத் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட அந்த வீடு பிரபல நகைக்கடை முதலாளி ஒருவரின் வீடு என்று முதலில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது. அதையடுத்து கடந்த மே மாதம் நடிகர் மம்முட்டி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், புது வீடு ஒன்று கட்டி அங்கு குடிபெயர்ந்தார். அந்தச் சமயத்தில் இதுதான் நடிகர் மம்முட்டியின் புது வீடு என்று சொல்லி, இந்த வீட்டின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகப் பெரிய வைரலாகியிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து அந்த வீடு யாருடையது என்று கண்டறிந்து, அந்த வீட்டின் உரிமையாளரிடமே பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டிருக்கிறது மலையாள பத்திரிகையான `மனோரமா.’ அந்த வீடு, கேரளாவைச் சேர்ந்த கட்டுமான தொழில் செய்யும் தொழிலதிபர் ரெஜி என்பவருடையது என்றும், அது கேரள மாநிலம், குறுப்பம்பாடி என்ற ஊரில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

``கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் பலரும் எங்களுடைய வீட்டை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினர். அதில் யாரோ ஒருவர் எங்கள் வீட்டை, `நடிகர் மம்முட்டியின் வீடு’ என டிக் டாக்கில் பதிவிட, அது எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலானது'' என்று மனோரமா செய்தி நிறுவனத்துக்கு ரெஜி பேட்டியளித்திருக்கிறார்.

`வனிதா' என்ற மலையாள பத்திரிகையிலும் ரெஜியின் வீடு பற்றிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. `சில்பி ஆர்க்கிடெக்ட்' (Silpi Architects) என்ற நிறுவனம்தான் அந்த வீட்டை வடிவமைத்திருக்கிறது. அந்த வீட்டின் புகைப்படங்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் ஃபேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளன.

Posted by Silpi Architects on Friday, March 6, 2020

முடிவு

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும்வைத்துப் பார்க்கும்போது அந்த வீடு நிச்சயமாக அமைச்சர் வேலுமணியின் வீடில்லை என்பது தெரியவருகிறது. நடிகர் மம்முட்டியின் வீடும் அது இல்லை என்பதும் உறுதியாகிறது. அது கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரெஜி என்பவருடைய வீடு என்பதும் தெளிவாகிறது.

ஃபேக் நியூஸ்

Also Read: கல்வி வளர்ச்சியில் அமெரிக்காவை விஞ்சுகிறதா தமிழ்நாடு? #GER #FactCheck

இனியாவது அந்த வீடு வேறு எந்தப் பிரபலத்துக்கும் சொந்தமானது என்று சமூக வலைதளங்களில் பகிரப்படாது என்ற நம்பிக்கையோடு இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்கிறோம்.


source https://www.vikatan.com/news/miscellaneous/is-the-viral-video-claiming-a-bungalow-as-minister-velumanis-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக