Ad

புதன், 7 அக்டோபர், 2020

பாலாவும் இல்லை, `அர்ஜுன் ரெட்டி'யும் இல்லை... பாலா `வர்மா' என்ன சொல்கிறான்? #Varmaa

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குநருக்கும் கருத்து வேறுபாடுகள் என்பது சகஜம்தான். இதனால் படத்தையே மாற்றும் சூழல்களும் உருவாகி இருக்கின்றன. 'ஜஸ்டிஸ் லீக்' படம் வெளியான போது, இது மிகவும் மோசம், எங்களுக்கு இயக்குநர் ஜேக் ஸ்னைடர் எடுத்த 'ஜஸ்டிஸ் லீக்' வெர்சன் வேண்டும் என போராடினார்கள் ரசிகர்கள். அடுத்த வருடம் அந்தப் படமும் வெளியாகயிருக்கிறது. 'அர்ஜுன் ரெட்டி'யின் ரீமேக் ரைட்ஸை வாங்கி துருவ் விக்ரமை அறிமுக செய்ய நினைத்த குழு, இயக்குநர் பாலாவை அணுக, அவர் 'வர்மா' என்னும் படத்தை எடுத்து முடித்தார்.

ஆனாலும், படத்தை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிதாக ஒரு டெக்னிக்கல் குழு, நடிகர்கள் பட்டாளம் என அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரிஸய்யாவை வைத்து மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற படத்தை எடுத்தனர். தெலுங்குப் பதிப்பின் ஜெராக்ஸ் வெர்சனான 'ஆதித்ய வர்மா'வில் அனைவரையும் ஈர்த்தது அறிமுக நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு. இது ஜெராக்ஸ் வெர்சன் எனில், பாலா அப்படி என்னதான் எடுத்தார், என்பதற்கான பதிலாக வந்திருக்கிறது பாலாவின் ̀வர்மா'. இந்தியாவில் 'Shreyas ET' என்ற தளத்திலும், மற்ற நாடுகளில் 'Simply South' மற்றும் 'Tent Kotta' ஆகிய தளங்களிலும் வெளியாகி இருக்கிறது.

வர்மா

ஒரு ரீமேக் படத்தின் கதையை மீண்டும் பல சமயங்களில் எழுதவேண்டியதில்லை. அதே தேவதாஸ் நாய் காதல்தான். ஆனால், தேவதாஸின் கதையை வைத்து பின்னப்படும் கதைகளைப் போல, 'அர்ஜுன் ரெட்டி'யை வைத்து, தனக்கான 'வர்மா'வை எடுத்திருக்கிறார் பாலா. யாரையும் டோண்ட் கேர் ஆட்டிடியூட் 'ஆதித்ய வர்மா' என்றாலும், விளிம்பு நிலை மனிதர்களின் நேசக் கரங்களில் எப்போதும் தவழ்கிறான் வர்மா. ஐஸ்க்யூப்களை டிரௌசரில் போட்டு, இந்தப் படம் இனி இப்படித்தான் இருக்கும் என கெத்து கார்டு போட்டது 'ஆதித்யா வர்மா'. ஆனால், எழுதவே முடியாத நிலையில் இருக்கும் அந்த முதல் காட்சியை வைத்து இனி இதை எப்படி பார்ப்பது என்கிற நிலைக்கு தள்ள வைக்கிறது 'வர்மா'.

கல்லூரியில் சீனியர் மாணவரான, கோபக் கனலாய் தகித்துக்கொண்டிருக்கும் வர்மாவை மன்னிப்பு கேள் அல்லது வெளியேறு என்கிறார்கள். போங்கடா என வாக் அவுட் கொடுக்கும் தறுவாயில் அவன் வாழ்வில் உள்ளே நுழைகிறாள் மேகா. பொல்லாத கோபம் கொண்ட வர்மாவுக்கு மேகாவைப் பார்த்ததும் பொல்லாத காதல். இவர்களின் பிரிவையும், இணையும் பொழுதையும் 2 மணி நேரத்துக்குள் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. (அர்ஜுன் ரெட்டி 3 மணி நேரம்)

வர்மா

மேகாவைப் பார்க்கும் முதல் காட்சியில் அவளின் ஐடி கார்டை இழுத்து, பெயர் பார்க்கும்போது, 20 வருடத்துக்கு முன் வெளியான சேது விக்ரமின் முகபாவனைகள், துருவின் கண்களில் தெரிகின்றன. துருவ் விக்ரம் படத்தில் நடித்த நல்ல காட்சி என்றால் அதுமட்டும்தான். வர்மா கதாபாத்திரத்தை ஒரிஜினலில் இருந்து முழுவதுமாக மாற்றிவிட்டதால், படத்தில் துருவின் கதாபாத்திரம் ஏனோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செல்கிறது. எல்லோரின் மீது கோபம் கொண்டாலும், அர்ஜுன் ரெட்டியோ, ஆதித்ய வர்மாவோ அவர்களுக்குள் இன்னும் கொஞ்சம் மனிதம் இருக்கும். பெண்களைத் தப்பாக பேசினால், அடிக்கப்போகும் வர்மாவோ, ̀வேலைக்காரி நாயி, சம்பளம் வாங்கனேல' எனப் பேசும் போது. இவனுக்கு என்ன நடந்தால் என்ன என்னும் நிலையில்தான் படம் நகர்கிறது. 'நான் கடவுளில்' ஆர்யா இப்படித்தான். "என்னைய பிரிஞ்சு என்ன ஒல்லியாவா இருக்க, நல்லா குப்பைத் தொட்டி மாறித்தான இருக்க" என அம்மாவைக் கேட்பார். அர்ஜுன் ரெட்டியின் ஒன்லைனை வைத்தே பாலா எடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.

தேவதாஸ் கதைகளின் ஆகப்பெரும் பலமே, காதலர்களுக்கு இடையேயான பரஸ்பர புரிதல்களும் காட்சிகளும்தான். அர்ஜூன் ரெட்டி, ஆதித்ய வர்மா, கபீர் சிங் என எல்லாவற்றிலும் நிரம்பி வழியும் இவை, வர்மாவில் மொத்தமாய் மிஸ்ஸிங். கெமிஸ்டிரியைத் தாண்டி காட்சிகளிலேயே பெரிய பற்றாக்குறை.

வர்மா

"Suffering is very personal. Let him suffer." காதல் பிரிவுகளில் பலருக்கும் இப்படியானதொரு காலகட்டம் இருக்கும். அப்போது உடன் இருக்கும் நண்பர்களும், மனதுக்கு நெருக்குமான பெரியவர்களும்தான் பலம். இந்த வசனத்தைச் சொல்லும் பாட்டி கதாபாத்திரமே 'வர்மா' படத்தில் மொத்தமாக இல்லை. 'Let him Suffer' என வர்மாவில், அப்பா கதாபாத்திரம் சொல்லும் போது, ̀ அந்த நாய் சீப்படட்டும்' டோனில் இருக்கிறது. காரணம், அதற்கு முன், இருவருக்குமான எந்தவித காட்சிகளும் பெரிதாக இல்லை. மேகா வீட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள், சீரியல் டிராமா போல் தெரிகிறது. பாலாதான் இந்தக் காட்சிகளை எடுத்தாரா என்னும் நிலையில் இருக்கிறது.

அதிலும் 400 ஆர்த்தோ ஆபரேஷன், 20 இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். எல்லாமே சக்ஸஸ் என துருவ் பேசும் போதெல்லாம், எல்லா உறுப்புக்கும் நீங்களே ஆபரேஷன் பண்ணுவீங்களா, அது உடம்பா இல்ல மட்டன் ஸ்டாலா என்னும் கேள்வி எழாமல் இல்லை.

Also Read: அனுஷ்கா, மாதவன், அஞ்சலியின் `நிசப்தம்'... அமேஸானுக்கு ஒரு ரெக்வஸ்ட்! #SilenceTamilMovie

வர்மாவின் ஃபிளாட்டில் வேலை செய்யும் நபராக தெலுங்கு பேசும் ஈஸ்வரி ராவ். படத்தின் மிகப்பெரும் ஆறுதல் இவர்தான். படம் நெடுக வரும் கதாபாத்திரம். படத்துக்கான எமோஷன்... வர்மா மீது கொஞ்சமேனும் கரிசனம் பார்வையாளனுக்கு வர வேண்டும் என போராடும் கதாபாத்திரம். அட்டகாசமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் நர்ஸாக வரும் சாண்டிரா. ஆனால், முழுக்கவே பார் டெண்டர் போல், அந்தக் கதாபாத்திரத்தை மாற்றிவிட்டார்கள். 'ஆதித்ய வர்மா'வில் பிரியா ஆனந்த், இதில் ரைஸா வில்சன்.

வர்மா

ஒரிஜினலில் இருக்கும் பாடல்கள் தாண்டி, மற்றவைப் பெரிதாக ஈர்க்கவில்லை. டெக்னிக்கலாகவும் படம் எந்தவித பிரமிப்பையும் கூட்டவில்லை. எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே!

1917-ம் ஆண்டு எழுதப்பட்ட `தேவதாஸ்', அதன் நூறாவது ஆண்டை அர்ஜுன் ரெட்டி படம் வெளியான போது கொண்டாடியது. அது ஒரு பெங்காலி நாவல். இருந்தும் தேவதாஸ் என்றவுடன் நமக்கு ஒரு கதாபாத்திரம் நம் கண் முன் விரிகிறது. அருகே காதலியின் பெயரில் ஒரு நாய். `அர்ஜுன் ரெட்டி'யின் கதையை இவ்வளவு சுருக்கமாகவும் சொல்லலாம். அதே அர்ஜுன் ரெட்டியின் கதையை இன்னும் சுருக்கமாக இரண்டு மணி நேரத்தில் சொல்ல வேண்டும் என்றால், 'வர்மா'வைத் தேர்வு செய்யலாம். ஆனால், இதில் 'அர்ஜுன் ரெட்டி'யும் இல்லை. பாலாவும் இல்லை.


source https://cinema.vikatan.com/tamil-cinema/director-balas-take-on-arjun-reddy-varmaa-tamil-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக