Ad

புதன், 7 அக்டோபர், 2020

ஹத்ராஸ்: `அரசுக்கு எதிராகப் பேச இளம்பெண் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் பேரம்!'- உ.பி போலீஸ்

ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 எஃப்.ஐ.ஆர்கள் (முதல் தகவல் அறிக்கை) பதியப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட எஃப்.ஐ.ஆர்-ல், ``யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராகக் கருத்துகளைக் கூற, அடையாளம் தெரியாத நபர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் வரை கொடுக்கப்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹத்ராஸில் பதியப்பட்ட ஆறு எஃப்.ஐ.ஆர்-களில் ஒன்றில் இந்த வரி இடம்பெற்றிருக்கிறது. ஹத்ராஸ் காவல் நிலைய எஸ்.ஐ ஒருவர் பதிவு செய்திருக்கும் அந்த எஃப்.ஐ.ஆரில், இளம்பெண் குடும்பத்துக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் யார் என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

உ.பி போலீஸ்

மேலும், அடையாளம் தெரியாத பத்திரிகையாளர், `மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லை’ என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பேசவைக்க முயன்றதாகவும் போலீஸார் குறிப்பிட்டிருக்கிறார்கள். மாநிலத்தில் அமைதியைக் குலைக்க அரசுக்கு எதிராக சதிசெய்வதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாக ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி, செய்தி வெளியிட்டிருக்கிறது.

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `செய்தியாளரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய சர்ச்சை

உத்தரப்பிரதேசத்தில் சாதிரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவில் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்துவருகின்றனர். இந்தத் தகவல், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹத்ராஸ் சம்பவம், அது குறித்த சர்ச்சைகள் பற்றிப் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``எனது ஆட்சியின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஹத்ராஸ் சம்பவத்தைத் தவறாக சித்திரிக்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

க்ரைம்

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `அதிகாலை 2:30 மணிக்கு தகனம் ஏன்?' - உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு விளக்கம்

உ.பி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் இளம்பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரால் செப்டம்பர் 14-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் பதிவு செய்த முதல் எஃப்.ஐ.ஆரில் இந்தத் தகவல் இடம்பெற்றிருந்தது. இதில், கடுமையாகக் காயமடைந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29-ல் உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், காவல்துறையினரே அதிகாலையில் தகனம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தநிலையில், அந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/rs-50-lakhs-offered-to-hathras-victim-family-to-speak-against-state-government-up-police-in-fir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக