Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`நாடா... இல்ல காடா?' - சண்டை சரிதான்... ஆனா, சுரேஷ் நீங்க இப்படிப் பண்ணலாமா? பிக்பாஸ் - நாள் 16

நேற்றைய நாள் சண்டையும் சச்சரவுமாக சென்றதால், இன்றைய நாளை கலகலப்பாக அமையும் படி செய்து விட்டார் பிக்பாஸ். எனவே இன்று ஜாலியான, சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. (அப்படி நினைத்துக் கொண்டால்தான் தினமும் பார்க்கும் உத்வேகம் வரும்).

'மாரி' படத்திலிருந்து பாட்டு ஒலித்தது. நடனப்போட்டியில் வென்ற கேப்ரியல்லா கூட தினமும் இப்படி ஆடுவதில்லை. வெறிகொண்டு குத்தி ஆடினார் அனிதா. ‘என் வழி... தனி வழி’ என்று வழக்கம் போல் ஓரமாக ஒதுங்கி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார் ஷிவானி. மற்றவர்கள் இதை சுட்டிக் காட்டியும் அவர் மாறுவதாக இல்லை.

பிக்பாஸ் - நாள் 16

நேற்றைய கட்டுரையில் ரியோ, ஹீரோ மாதிரி பன்ச் வசனம் பேசினார் என்று நான் எழுதியது அவர் காதில் விழுந்து விட்டதோ. என்னமோ, கூரையில் நின்று தனுஷ் மாதிரி ஸ்டைல் காட்ட முயன்றார். (எங்களை செஞ்சிட்டீங்க ரியோ!).

“நான் என்னமோ ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்ற மாதிரி சொல்லிட்டு வர்றீங்க... உங்களுக்கு ஏதாவது சொன்னேனா.. ஆஜித் பயலை மட்டும் இழுத்து வெச்சு... ரெண்டே மணி நேரம்தான் பேசிட்டு இருந்தேன். அப்பவும் அவன் காதுல ரத்தம் வர்றதைப் பார்த்தவுடன் பரிதாபப்பட்டு நிறுத்திட்டேன். ‘இப்படி காதுல ரத்தம் வருதுன்னா... உன் ஆரோக்கியத்துல ஏதாவது பிரச்னை இருக்கலாம்-ன்னு அதுக்கப்புறம் அரைமணி நேரம் மட்டும்தான் அவன் கிட்ட அட்வைஸ் பண்ணேன். அதுல இருந்து அவன் எங்க என்னைப் பார்த்தாலும் காதை மூடிக்கிட்டு தெறிச்சி ஓடுறான்... ஏன் இப்படில்லாம் பண்றீங்க?” என்று சுரேஷிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஆரி.

சுரேஷிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அவர் பாட்டுக்கு கொளுத்தி போட்டு விட்டு அது வெடிக்கும் சமயத்தில் தூரமாக சென்றுவிடுவார். பட்டாசை கொளுத்தி விட்டு தூரமாக நிற்பது பாதுகாப்புதான். ஆனால் மனிதர்கள் உணர்வுபூர்வமாக கதறும் போது அதை ஒதுக்கும் வகையில் விலகிச் சென்று விடுவார் சுரேஷ். இப்போது ஆரியிடமிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது வசதியாக ‘டாஸ்க்’கிற்கான அழைப்பு மணி அடித்தது. ஆள் எஸ்கேப்!

இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க். பிக்பாஸ் டீமில், ‘பாகுபலி’ திரைப்படத்தை கேமரா பிரின்ட்டில் பார்த்த யாருக்கோ இந்த ஐடியா வந்திருக்க வேண்டும். டாஸ்க்கின் பெயர் ‘நாடா... இல்ல காடா’. ‘சொர்க்கபுரி... நரகபுரி’ என்று வீடு இரண்டாகப் பிரிக்கப்படுமாம். ஒரு பக்கம் ராஜவம்சத்தினர். இன்னொரு பக்கம் அரக்கர்கள்.
பிக்பாஸ் - நாள் 16

சங்கொலி ஒலித்ததும் ராஜ வம்சத்திலிருந்து ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். விஜிபி கோல்டன் பீச் வாசல் ஆசாமி மாதிரி ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். அரக்கர்கள் அவரை கிண்டல் செய்து சிரிக்கவோ அசையவோ செய்ய முயல்வார்கள். அவர்களின் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால், வெளியே வந்தவர் அரக்கர் குடும்பத்தின் உறுப்பினராகி விடுவார். சிரிக்காமல் சமாளித்தால் மறுபடியும் உள்ளே சென்று ராஜ வாழ்க்கையைத் தொடரலாம்.

இப்படியொரு கோக்குமாக்கான விதியோடு ஆட்டம் துவங்கியது. முதலில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அரக்கர்கள் தங்கும் பிரதேசத்தின் ‘செட்’டும் லைட்டிங்கும் அட்டகாசமாக அமைக்கப்பட்டிருந்தது. ‘வெறும் விளையாட்டுதானே’ என்றில்லாமல் மிக சிரத்தையுடன் அலங்கரித்த வடிவமைப்பாளருக்கும் உழைத்த பணியாளர்களுக்கும் பாராட்டு.

ராஜ குடும்பத்தில் வேல்முருகன், நிஷா, சம்யுக்தா, சனம், ரம்யா, பாலா, சோம் மற்றும் ரியோ. பழைய கண்ணாம்பா நடித்த படங்களையெல்லாம் நிஷா நிறைய பார்த்திருப்பார் போலிருக்கிறது. ‘சென்று வென்று வாடா மகனே... அய்யோ என் மகன் துன்பப்படுகிறானே’ என்றெல்லாம் ‘டயலாக்’ பேசிக் கொண்டிருந்தார். வேல்முருகன் டம்மி ராஜாவாக மூலையில் அமர்ந்திருந்தார்.

சனம், ரம்யா, சம்யுக்தா ஆகியோர் ராஜ வம்ச ஒப்பனையில் மிக அம்சமாக இருந்தார்கள். அதிலும் சம்யுக்தா மினி சைஸ் ‘தேவசேனா’ போலவே காட்சியளித்து மனதைக் கவர்ந்தார். (ஆர்மிக்காரர்கள் உற்சாகமாகி இருப்பார்கள்). மீசையை தியாகம் செய்து இம்சை அரசன் புலிகேசியாக மாறிய ரியோ... அந்த உடல்மொழியை டாஸ்க் முழுவதும் பின்பற்ற முயன்றது சிற(ரி)ப்பு. பாலாவிற்கு இளவரசர் ஒப்பனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆனால் அவரால் சுத்த தமிழில் பேச முடியாமல் ‘அய்யே... என்னால போக முடியாது. பே...’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 16

அரக்கர் குடும்பத்தின் தலைவி அர்ச்சனாவிற்கு அந்த வேடம் மிகச்சரியாகப் பொருந்தியிருந்தது. சூன்யக்காரி போலவே இருந்தார். சுரேஷிற்கு வேடப் பொருத்தம் இல்லையென்றாலும் பர்ஃபாமன்ஸ் செய்வதில் அவர்தான் முன்னணியில் இருந்தார்.

நம்பியார் பாணியில் முகத்தைக் கோணி சரளமாக வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தார். ஆனால் போட்டியின் போது எதிர் அணியை சிரிக்க வைக்கிறோம் என்கிற பேர்வழியில் தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்தது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக சனத்தை அவர் எல்லை மீறி கிண்டல் செய்தது சரியானதல்ல.

சுரேஷிற்கு அடுத்தபடி அதிக வசனங்களைப் பேசியவர் என்று அனிதாவைச் சொல்லலாம். ஆனால் ஸ்கூல் மாறுவேடப் போட்டியில் வந்த குழந்தை மாதிரியே இருந்ததால் அவர் பேசியது எடுபடவில்லை. ‘இனி நீ என் அடிமை’ என்று சோமைப் பார்த்து அவர் ஒரு கணத்தில் சொன்ன போது ‘உண்மையாக இருக்கலாமோ’ என்று தோன்றியது.

இருப்பதிலேயே கவர்ச்சியான அரக்கி என்று ஷிவானியைச் சொல்லலாம். அரக்க ஒப்பனை கூட அவரின் அழகை குலைக்கவில்லை. ‘அழகான ராட்சசியாக’ இருந்தார். வழக்கம் போல் என்ன பிரச்னையென்றால் மற்றவர்கள் எதிர்அணியைச் சிரிக்க வைப்பதற்காக பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த போது இவர் மட்டும் தனியாக வாக்கிங் சென்று கொண்டிருந்தார். இவரை ராஜ குடும்பத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். இவர் சிலையாக அமர்ந்திருந்தால் ஒரு பய இவரை பேச வைத்திருக்க முடியாது.

அரக்கர் குடும்பத்தின் இதர உறுப்பினர்களான ஆரி, ரமேஷ், ஆஜித், கேப்ரியல்லா போன்றோர் வெறுமனே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டுகளாக இருந்தார்கள். அதிகம் மெனக்கெடவில்லை.

பிக்பாஸ் - நாள் 16

போட்டி தொடங்கியது. ராஜ குடும்பத்திலிருந்து முதலில் வெளியே வந்தவர் சனம். தேர் போல நகர்ந்து வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டார். அரக்கர்கள் என்ன கிண்டல் செய்தாலும் ஆடாமல் அசையாமல் இருந்தார். குறிப்பாக சுரேஷ் எல்லை மீறி கிண்டல் செய்த போதும் எதிர்வினை காட்டாமல் வெற்றி பெற்று மறுபடியும் ராஜ குடும்பத்திற்குத் திரும்பினார்.

“அடுத்து வரவங்களை நாற்காலில உட்கார விடாதீங்க... நகராம அப்படியே நிறுத்தி வெச்சா... நமக்கு வெற்றி கிடைக்கும்" என்று போர் வியூகத்தை அரக்கர்கள் மாற்றினார்கள். அடுத்து வந்தவர் ‘சோம்’. பிஞ்சு முகம். “வெற்றியோடு திரும்பி வா மகனே" என்று நிஷா டயலாக் பேச... “நீ சொல்றத பார்த்தாலே சிரிப்பு வருதே அம்மா" என்று சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். அப்போதே தெரிந்து போயிற்று... இவர் அதிக நேரம் தாங்க மாட்டார் என்று.

சுரேஷ் தனது டோப்பா முடியைக் கழற்றி மொட்டை தலையைக் காட்டி பயமுறுத்தினார். சிறிது நேரம் தாக்குப் பிடித்த சோம், ‘மெளனராகம்’ கார்த்திக், முகத்தில் அடிபட்ட வேதனையோடு ரேவதியைப் பார்த்து கண்அடிப்பது போல எதையோ செய்து விட ‘அசைஞ்சுட்டான்... அசைஞ்சுட்டான்’... என்று எதிரணியினர் உற்சாகமானார்கள். “ஹே.. எச்சி முழுங்கினேப்பா....’ என்று சோம் சொன்னது எடுபடவில்லை. ஆக அரக்கர் குலத்தில் இணைந்தார் சோம். தனக்கு ஒரு அடிமை கிடைத்ததில் அனிதாவிற்கு ஏக குஷி.

‘இளவரசர் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டாரே’ என்கிற எந்தவொரு கவலையும் இல்லாமல் ராஜ குடும்பம் சோற்றை குழம்புடன் கலந்து வக்கணையாக மொக்கிக் கொண்டிருந்தது. ‘எதிரணி உத்திகளையும் ரகசியங்களையும் எங்களுக்குச் சொல்’ என்று சுரேஷ் சோமிடம் மிரட்ட ‘ஒருத்தர் பயங்கர கறுப்பா இருப்பாரு... இன்னொருத்தர் கறுப்பா பயங்கரமா இருப்பாரு’ என்கிற காமெடி மாதிரி ஏதோ சொன்னார். விரலை மடித்துக் கொண்டு சிலையாக அமர்வதுதான் உத்தியாம். ஸ்ட்ராடர்ஜிக்கே இது வெட்கக்கேடு. ‘இதுவா உத்தி... த்தூ... ‘என்று துப்பினார்கள் அரக்கர்கள்.

பிக்பாஸ் - நாள் 16
‘அய்யாங்... நான் போ மாட்டேன்...’ என்று முதலில் இருந்தே சிணுங்கிக் கொண்டிருந்த பாலாஜியை மல்லுக் கட்டி அடுத்ததாக அனுப்பி வைத்தார்கள். புறமுதுகிட்டு ஓடிய இளவரசனைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ‘புறவாசல்’ வழியாக போருக்குப் புறப்பட்ட முதல் இளவரசன் பாலாஜி என்றே வரலாறு எழுதும்.

ஆசனத்தில் அமர்ந்து விடுவதற்காக சைடு என்ட்ரியில் வேகமாக வந்த பாலா, எதிர் அணியைச் சேர்ந்த ஆஜித்தை தள்ளி விட்டு அமர முயல, அங்கு ஏற்கெனவே சோம் அமர்ந்திருந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாலாஜி உடல் ரீதியாக மூர்க்கமாக செயல்பட்டதை எதிர்அணி ஆட்சேபித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘பாலாஜி... கோட்டை அழிங்க... மறுபடியும் வாங்க’ என்று உத்தரவு பிறப்பித்தார் பிக்பாஸ்.

“என்னடி பிள்ளையை வளர்த்து வெச்சிருக்கே?” என்று அர்ச்சனாவும் நிஷாவும் குழாயடிச் சண்டை போட்டுக் கொண்டது சுவாரஸ்யமான காட்சி. மறுமுறை வெளியே வந்த பாலாஜி திட்டமிட்டபடி வாசலிலேயே சட்டென்று அமர்ந்தார். "நான் டக்குன்னு சிரிச்சுடுவேன்” என்று முதலில் இருந்தே கூறி வந்தாலும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். மொட்டையையும் தொப்பையையும் காட்டி சுரேஷ் செய்த அழிச்சாட்டியம் தாங்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரது உடை அவிழ்ந்து அண்டர்வேர் ‘பப்பரப்பபே’ என்று தெரிந்தது.

சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் பாலா தலையை மெலிதாக அசைத்து விட்டதால் தோல்வியுற்று அரக்கராக மாறினார். ராஜ குடும்பத்தில் இன்னொரு இழப்பு. ‘என் மகன் திரும்பி வரும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’ என்று அரண்மணைக்குள் நிஷா பாவனை காட்ட “ஏற்கெனவே மூணு தட்டு சோத்தை மொக்கிட்டீங்க மம்மி" என்று ரம்யா தந்த கவுன்ட்டர் அட்டகாசம். (ஆஹா... பொண்ணுக்கு காமெடி கூட வருது!).

பிக்பாஸ் - நாள் 16
நிஷா போராளிகளை ஊக்குவிக்கும் டயலாக்கை பேசிக் கொண்டே செல்ல, ஏற்கெனவே பீதியில் அமர்ந்திருந்த ரியோ “அம்மையாரே... நீ ஊக்கும் விற்க வேண்டாம். ஆணியையும் விற்க வேண்டாம். மூடிக் கொண்டு அமருங்கள்” என்று கடுப்பை அடக்கிக் கொண்டு சொன்னார்.

அடுத்ததாக, "சமாதானக் கொடியை வேண்டுமானால் பறக்க விட்டுடலாமா” என்ற மரண பீதியோடு ரியோ வெளியே சென்றார். இவரும் பாலாவைப் போல வாசலில் டக்கென்று அமர்ந்தது மட்டுமல்லாமல், காதில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார். நல்ல உத்தி இது. அரக்கர்களின் கொட்டம் அதிகரித்தாலும் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார் ரியோ.

இளவரசர் இப்படி வெளியே சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்த வேளையில், உள்ளே ராஜ குடும்பத்தினர் அமர்ந்தபடியே சொகுசாக உறங்கி வழிந்து கொண்டிருந்தனர். (அய்யகோ... வெட்கம்!). எப்படியோ சமாளித்து வெற்றி பெற்ற ரியோ, அதே உற்சாகத்துடன் "பிக்பாஸ்... இந்த வெற்றியைக் கொண்டாட உற்சாக பானம் கிடைக்குமா?” என்று ஜாலியாக ஒரு பிட்டைப் போட்டு வைத்தார். கண்டிக்க வேண்டிய அம்மாவும் வெட்கமே இல்லாமல் ‘சைட்டிஷ்' கேட்டு பின்பாட்டு பாடினார்.

ராஜ குடும்பத்திலிருந்து அடுத்த பலியாடு சம்யுக்தா. ஒப்பனையைக் கலைத்து விட்டு நீதி கேட்கச் சென்ற கண்ணகி போல தலைவிரி கோலமாக வாசலில் அமர்ந்து விட்டார். யாரைக் கிண்டல் செய்தாலும் அதை சனத்தோடு இணைக்கும் வன்மத்தை இப்போதும் சுரேஷ் நிறுத்தவில்லை. ‘படுக்கையில் பாம்பு நெளியுது’ என்று வைரமுத்துவின் வரிகளையெல்லாம் இணைத்து சம்யுக்தாவை வெறுப்பேற்ற முயன்றார்.

பிக்பாஸ் - நாள் 16
என்றாலும் தலைவிரி கோலத்தில் தம் கட்டிய சம்யுக்தா வெற்றி பெற, ‘இந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை தொடரும்’ என்று பிரேக் தந்தார் பிக்பாஸ்.

“இந்த ‘டாஸ்க்’ சாக்கை வெச்சு சனத்தை பாம்புன்னு சுரேஷ் சொல்றாரு... இதெல்லாம் சரியா? 'இது சரியல்ல’ன்னு நான் சொன்னதுக்கு என்னை கிறுக்கி-ன்றாரு... நான் கிறுக்கியாவே இருந்துட்டுப் போறேன்" என்று ஆரியிடம் அனத்திக் கொண்டிருந்தார் அனிதா. சுரேஷ் எல்லைமீறிய விவகாரம், கமலின் பஞ்சாயத்து நாளில் விசாரணைக்கு வரும் என்று நினைக்கிறேன்.

அடுத்ததாக ராஜ குடும்பத்திற்கும் அரக்கக் குடும்பத்திற்கும் இணைத்து ஒரு செக் மேட் வைத்தார் பிக்பாஸ். எரிபொருள், தண்ணீர் இனிமேல் ரேஷன் முறையில்தான் வருமாம். அத்தியாவசியப் பொருட்கள் மறுமுறை தரப்பட மாட்டாதாம். இருப்பதை வைத்து சிறப்புற வாழ வேண்டுமாம். (சொகுசாக வாழ்ந்த ராஜ குடும்பத்திற்கு வந்த சோதனை!)

Also Read: `Truth or Dare..?' கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... யாருக்கு யாரோட சண்டை? பிக்பாஸ் - நாள் 15

‘வட போச்சே’ என்று பீதியில் ஆழ்ந்த பாலா, தனக்கான முட்டை பறிபோய் விடுமோ என்று ‘அத்தியாவசியப் பொருட்கள்னா... எது?' என்று விதியில் குழப்பத்தைக் கிளப்பினார். உணவையும் நீரையும் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள்.

திடீரென்று அர்ச்சனாவின் அழுகைக் குரல் கேட்க, மக்கள் பதறிப் போனார்கள். ‘கத்தையாக கொடுத்துக் கொண்டிருந்த பிக்பாஸ், இப்படி ஒத்தையாக கொடுக்க ஆரம்பித்து விட்டாரே’ என்பதுதான் அர்ச்சனாவின் அழுகைக்குக் காரணம். ‘ஆளுக்கு ஒரு கிலோ அரிசி திம்பாங்களே... இனிமே இவங்களுக்கு கஞ்சிதானே செய்ய முடியும்’ என்பது அவரின் கவலைக்குக் காரணம்.

பிக்பாஸ் - நாள் 16
தாய்மை நோக்கோடு அர்ச்சனாவின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணவைத் தயார் செய்பவர்களுக்கு எப்போதுமே போதுமான உணவு கிடைக்காது என்பதுதான் நடைமுறை. பெரும்பாலான தாய்மார்களுக்கு இது பொருந்தும். தனக்கு இல்லையென்றாலும் குடும்பத்தினருக்குப் பரிமாறி ஆனந்தப்படும் உள்ளங்கள் அவை. உணவு போதாமையால் எந்தவொரு குழந்தையாவது ‘இன்னும் பசிக்குதும்மா’ என்று கேட்டால் அதைவிடவும் ஒரு தாயின் மனதை வேதனைப்படுத்தும் வார்த்தைகள் இருக்க முடியாது.

அரக்கர் குடும்பத்தின் அட்டகாசம் நாளையும் தொடரும் போலிருக்கிறது. வேல்முருகன், நிஷாவெல்லாம் எப்படி எதிரிகளிடம் சிக்கி சின்னா பின்னாமாகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-luxury-budget-task-in-the-house-bigg-boss-tamil-season-4-day-16-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக