Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிமீறல்! - 132 வழக்குகள்... 199 பேர் கைது!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 18 பேர் உட்பட 199 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இமானுவேல் சேகரன் குருபூஜை விதி மீறலில் கைதானவர்கள்.

பரமக்குடியில் கடந்த மாதம் இமானுவேல் சேகரன் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி பலர் விதி மீறலில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் வீதி மீறலில் ஈடுபட்ட 13 அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் 6 கிராமங்களை சேர்ந்தவர்களை கண்டறிந்தனர்.

மாவட்டம் முழுவதும் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கு தலா ரூ 11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற நிலுவையில் உள்ள 87 வழக்குகளிலும் தண்டனை பெற்றுத்தரும் வகையில் முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். மேலும் புலன் விசாரணையில் உள்ள 43 வழக்குகளிலும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் தடை விதிக்கப்பட்ட வழித்தடத்தில் அத்துமீறி சென்ற மானாமதுரையை சேர்ந்த 18 பேர், காவல் துறை வாகனத்தின் மீது ஏறி போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த பரமக்குடி அருகே உள்ள நாகநாதபுரத்தை சேர்ந்த 18 பேர் உள்ளிட்ட 199 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி கார்திக்

மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் மதித்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அவ்வாறின்றி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/emanuel-sekaran-memorial-day-132-cases-registered-199-people-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக