சில புள்ளிவிவரங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சில புள்ளிவிவரங்கள் நம்மைக் கடும் வருத்தத்தில் தள்ளும் அப்படிப்பட்ட ஒரு புள்ளிவிவரம் இப்போது வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்பட்ட தொகை ரூ.1.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது, ஜூன் மாதத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாகக் குறைந்தது என்றாலும், ஜூலையில் செலவு செய்யப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி என்பது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மிக அதிகம்.
அது மட்டுமல்ல, கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 8.24 கோடி. இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில் 8.99 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, மாதம்தோறும் 12.5 லட்சம் கிரெடிட் கார்டுகள் புதிதாக உருவாகி, புழக்கத்தில் வந்துசேர்ந்துள்ளன! இந்த ஆண்டின் முடிவில் இன்னும் 75 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் வந்துசேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
கிரெடிட் கார்டு என்பது நவீன கடன் வடிவம். அதனால் பல நன்மை கிடைக் கிறது என்று வாதிடுபவர்கள் பலர். அவசரத்துக்குக் கடன் வேண்டுமெனில் யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் தவிப்பவர்கள், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். 4 முதல் 5 வட்டிக்கு (48% முதல் 60%) வரை கடன் வாங்கிய வர்கள், கிரெடிட் கார்டு மூலம் 32% - 36% வட்டியில் கடன் வாங்குகிறார்கள்.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் இப்படி சில பாசிட்டிவ்வான விஷயங் கள் இருந்தாலும், ஆழம் தெரியாத குளத்தில் சந்தோஷமாக நீச்சலடிக்கப்போய், கடைசியில் கண்ணுக்குத் தெரியாத வேர்களில் கால் சிக்கி, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் திணறுபவர்கள் பல லட்சம் பேர்.
நிதியை நிர்வாகம் செய்வதில் குறைந்தபட்ச ஒழுங்குகூட இல்லாதவர்கள்தான் கிரெடிட் கார்டுகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, பெரும் சிக்கலில் மாட்டிக்கொள் கிறார்கள். இவர்கள், கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தும் தகுதிகொண்ட வர்களா என்றெல்லாம் வங்கிகள் பார்ப்பதில்லை. வாங்கிய கடனைத் திரும்பக் கட்டவில்லை எனில், குண்டர்களை அனுப்பி மண்டையை உடைப்பதில் மட்டுமே வங்கிகள் அக்கறையோடு செயல்படுகின்றன.
இந்த விஷயத்தில் வங்கிகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நிதி ஒழுங்கு பற்றி எந்தப் புரிந்துகொள்ளலும் இல்லாதவர்கள்தான், கிரெடிட் கார்டு வேண்டுமா என்று கேட்டவுடன், வாங்கிக்கொள்கிறார்கள். ‘கேக்காமலே கொடுத்துட் டாங்க...’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பயன் படுத்திவிட்டு, விழிபிதுங்கி நிற்கிறார்கள்!
தெரியாமல் புதைகுழியில் விழுபவர்களுக்குப் பரிதாபப்படலாம்; தெரிந்தே புதைகுழியில் விழுபவர்களை என்னவென்று சொல்வது? தன்னுடைய நிதியை சரியாக நிர்வாகம் செய்யும் தகுதி ஒருவருக்கு இருக்கிறதா, இல்லையா என்று பரிசோதித்த பின்பே அவருக்கு கிரெடிட் கார்டு தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/personal-finance/money/credit-card-usage-increased
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக