ஆன்லைன் கேமிங், சூதாட்ட விளையாட்டு, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க முடிவெடுத்திருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில். அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது!
விளையாட்டு என்பது மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உருவானது. திறமையைக் காட்ட ஊக்குவிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் (குதிரைப் பந்தயம்) போக, அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் ஜெயிக்கும் சூதாட்ட விளை யாட்டுகள் (சீட்டாட்டம்) பிற்பாடு அறிமுகமாகின. இன்று நவீன தொழில்நுட்பத் தின் உதவியுடன் ஆன்லைன் கேமிங் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த விளையாட்டுகளை விளையாடத் தொடங்கும் மக்கள், காலப்போக்கில் தன்னிலை மறந்து, இவற்றில் மூழ்கிவிடுகிறார்கள். பொன்னான நேரத்தை இழப்பதுடன், பல லட்சம் ரூபாயையும் இழக்கிறார்கள். கடன் வாங்கி இது மாதிரியான சூதாட்ட விளையாட்டுகளில் நஷ்டம் ஏற்படும்போது, அதை சமாளிக்கும் வழிதெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பதென்பது சரியான முடிவாக இருக்காது. இப்படி வரி விதிப்பதன் மூலம் இந்த விளையாட்டுகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் அளிப்பதாக ஆகிவிடுகிறது. அதிகபட்ச வரி விதிப்ப தால், இந்த விளையாட்டுகளை பலரும் விளையாட மாட்டார்கள் என்று நினைக் கிறது அரசாங்கம். ஆனால், அரசு நினைக்கிற மாதிரி நடக்குமா என்பது கேள்விக் குறிதான். காரணம், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் மனநோயாளிகளைப் போல ஆகிவிடுகிறார்கள். மதுபானங்களின் விலை உயர்த்துவதால், குடிகாரர்கள் குடிக் காமல் இருந்துவிடுவதில்லை. எனவே, சூதாட்ட விளையாட்டுகள் எந்த வகையில் நடந்தாலும் அதை ஒழிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமே அன்றி, அதற்கு வரி விதித்து, நியாயப்படுத்தக் கூடாது!
தமிழ்நாட்டில் ஆன்லைன் கேமிங் விளையாட சட்டப்படி தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னை கிண்டியிலும் ஊட்டியிலும் இப்போதும் குதிரைப் பந்தயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஊருக்கு நாலு கிளப் எனத் திறக்கப்பட்டு அங்கு சீட்டாட்டம் கனஜோராக நடந்துகொண்டுதான் இருக் கிறது. இவற்றில் எல்லாம் அப்பாவி மக்கள் பணம் போட்டு, பெருமளவிலான பணத்தை இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
சூதாட்ட விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதென்பது அந்த விளையாட்டுகளில் இருந்து மக்களை அந்நியப்படுத்த எடுக்கப்படும் முதல் நடவடிக்கையாக இருக் கலாமே அன்றி, அதுவே இறுதித் தீர்வாக நிச்சயம் அமைந்துவிடக் கூடாது. எல்லா வகையான சூதாட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு, உழைப்பின் மூலம் உயரவே அரசாங்கமானது மக்களை ஊக்குவிக்க வேண்டும். மக்களும் சூதாட்டங்களில் இருந்து தூரமாக விலகி நிற்க வேண்டும்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/business/government/28-gst-in-online-gaming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக