Ad

சனி, 15 அக்டோபர், 2022

IIT Madras: 40% குறைவான கார்பனை வெளியிடும் சிமென்ட், ஐ.ஐ.டி ஆராய்ச்சியளர்களின் புதிய முயற்சி

கட்டுமானப் பணிகளில் ‘போர்ட்லேண்ட் சிமென்ட்’ (Portland Cement) என்ற வகையே நாம் வெகுவாக பயன்படுத்தப்படும் ஒன்று. இந்த வகை Cement Clinkers முறையை கொண்டே பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது. சுண்ணாம்பு கற்கள் எரிக்கப்படும் இத்தயாரிப்பு முறை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை விளைவிக்கிறது.

கிட்டத்தட்ட 8% உலகளாவிய CO2 வெளியேற்றத்திற்கு இந்த போர்ட்லேண்ட் சிமென்ட் கட்டிகளின் தயாரிப்பே காரணமாக அமைகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கான்கிரீட் சிமென்ட் கட்டிகளின் அளவைக் குறைப்பதன் மூலமாகவும், சிறந்த கட்டுமான நுட்பங்களைக் கொண்டு கழிவுகளைக் குறைப்பதன் மூலமும் இந்த அளவைக் குறைக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

சிமென்ட் பயன்பாடு

இதையடுத்து குறைந்த அளவு கார்பன் இலக்குகளைச் சாத்தியமாக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி டெல்லி, புதுடெல்லியில் உள்ள TARA Development Alternatives, கியூபாவின் யுசிஎல்வி, சுவிட்சர்லாந்தின் இ.பி.எஃப்.எல் ஆகியவை இதில் இணைந்து செயல்பட்டன. இதில் உருவாக்கப்பட்ட கலப்பு சிமென்ட் LC3 வகை கார்பன் வெளியீட்டை 50 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாகச் சீனக் களிமண் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படப் பீங்கான் அற்ற மூலப்பொருட்களே LC3 சிமென்ட்டில் களிமணாக பயன்படுத்தப்படுகிறது என தெரிகிறது. சிமென்ட் உற்பத்திக்குப் பொருத்தமற்ற, தரம் குறைந்த சுண்ணாம்பையும் கூட LC3 சிமென்டில் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.

நிலைத்தன்மை தாக்க மதிப்பீட்டின்படி, சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட்டுடன் ஒப்பிடுகையில் LC3 உற்பத்தியில் ஏறத்தாழ 40% CO2 வெளியீடு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதும், உற்பத்திக்கு 20% குறைவான ஆற்றல் தேவைப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சிமென்ட் சிறந்த வலிமை, நீடித்த தன்மையுடன் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. LC3 என்பது ஒரு பொதுநோக்கு சிமென்ட் எனவே இதன் உற்பத்திக்குப் பசுமைப் புல அலகு அமைக்கவேண்டிய தேவையும் இல்லை. தற்போது புழக்கத்தில் உள்ள உற்பத்தி அமைப்பிலேயே இதனை ஒருங்கிணைக்க முடியும். குறைவான ஆற்றலே தேவைப்படுவதால், கிடைக்கும் களிமண்ணின் தன்மையைப் பொறுத்து 25% அளவுக்கு உற்பத்திச் செலவைக் குறைக்கவும் முடியும். இந்த வகைச் சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் LC3 கான்கிரீட் கட்டுமானத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துவது உறுதி என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

LC3 நீண்டகால ஆராய்ச்சி நிறைவடைந்த நிலையில் அதன் முடிவுகள் குறித்துப் பேசிய, ஐஐடி மெட்ராஸ், டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானம் கூறியதாவது " பல்கலைக்கழகங்களுக்கு இடையே பல்லாண்டுகளாக பல்வேறு அளவீடுகளில் இதுகுறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடலோரப் பகுதிகளில் இந்த சிமென்ட் உயர்ந்த செயல்திறனுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ்-ன் இந்த ஆராய்ச்சிப் பணிகள் மூலம் கட்டுமானத்தில் புதிய சிமென்ட்டுகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தக் கூடிய நிலையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது" என்றார். LC3 போன்ற நீடித்த கட்டுமான பொருட்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்த புதுடெல்லி 'தாரா'வைச் சேர்ந்த டாக்டர் சௌமன்மெய்ட்டி பேசுகையில் " புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருவதால், எரிசாம்பல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். தற்போது உள்ள சிமென்ட் உற்பத்தியில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் லாபகரமான, தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியக்கூறுகளை 'சுண்ணாம்பு நீற்றப்பட்ட களிமண் சிமென்ட்' வழங்குகிறது. தற்போது உள்ள உற்பத்தி அமைப்பில் இதனை எளிதாக ஒருங்கிணைத்து, முதலீட்டுச் செலவுகளைக் குறைக்க முடியும். சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் நீடித்த மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் சிமென்ட் நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கல்வி நிறுவனங்களுடன் தாரா இணைந்து செயல்பட்டு வருகிறது " எனக் குறிப்பிட்டார்.

மேலும் கூட்டு ஆராய்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தாக்கத்தை எடுத்துரைத்த ஐ.ஐ.டி டெல்லியின் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் கூறுகையில் " சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் எவ்வாறு நிலையான தொழில்நுட்பங்களை ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு விரைவாகக் கொண்டுவர இயலும் என்பதற்கு LC3 சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெவ்வேறு நிபுணத்துவத்தைப் பெற்றுள்ள குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு காரணமாக, நாம் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பல்வேறு சிமென்ட்டுகளைவிட LC3 சிமென்ட் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது " என்றார்.



source https://www.vikatan.com/oddities/education/less-carbon-emitting-cement-designed-by-iit-researchers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக