Ad

புதன், 19 அக்டோபர், 2022

``ஸ்டாலின், ஓபிஎஸ்-ஸுடன் அரைமணி நேரம் பேசியிருக்கிறார்!" - உண்ணாவிரதப் போராட்டத்தில் இபிஎஸ் தாக்கு

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க-வினரை பேச அனுமதிக்காததை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்ட நிலையிலும், அ.தி.மு.க நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தும், அ.தி.மு.க-வினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் போலீஸார் கைதுசெய்து ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தில் அதிமுக

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க தரப்பிலிருந்து சட்டமன்றத்திற்கான எதிர்க்கட்சித் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல், எம்.எல்.ஏ-க்கள் கடிதம் என அனைத்தையும் சபாநாயகருக்கு அனுப்பினோம்.

எங்களின் கோரிக்கையை இரண்டு மாதங்களாக சபாநாயகர் கிடப்பில் போட்டார். பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க தரப்பில் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. எனவே அ.தி.மு.க-விலிருந்து சில உறுப்பினர்கள் நீக்கப்பட்டதும் செல்லும் என்பது உறுதியாக விட்டது.

போராட்டத்தில் அதிமுக

ஆனால் இங்கு ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. மக்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க-வை முடக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக சபாநாயகர் கூறுகிறார். ஆனால் நீதிமன்றத்தில் எந்த வழக்குமில்லை என்பது வெளிச்சமான செய்தி. ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார் என்பது பச்சையாக தெரிகிறது. ஸ்டாலினின் வேண்டுகோள், ஆணைக்கிணங்க சட்டப்பேரவை சபாநாயகர் செயல்படுகிறார். எனவே எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். அ.தி.மு.க-வை எதிர்க்கும் தெம்பும், திராணியும் இல்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ்-ஸை பயன்படுத்தி அ.தி.மு.க-வை வீழ்த்த நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. நேற்று சட்டப்பேரவை முடிந்ததும் ஓ.பி.எஸ் உடன் அரைமணி நேரம் பேசியிருக்கிறார் ஸ்டாலின்" எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palaniswamy-alleges-tn-assembly-speaker-appavu-during-admk-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக