Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

ரத்த பிளாஸ்மாவுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ்; பரிதாபமாக உயிரிழந்த டெங்கு நோயாளி!- அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்துமுடித்ததையடுத்து, தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்திருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், போலியான ரத்த வங்கிகளை அமைத்து, பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அத்தகைய ஒரு சம்பவமாகத்தான், பிரயாகராஜ் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப் பாண்டே என்பவருக்கு, பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரத்தத்தின் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், ரத்த வங்கியில் இருப்பவர்கள் இதுபோன்ற ஏமாற்றுவேலையை செய்திருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகப் பேசிய போலீஸ் அதிகாரி, ``பிரதீப் பாண்டே என்ற டெங்கு நோயாளி முறையான சிகிச்சையைப் பெற முடியாமல் இறந்திருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதலில் அலகாபாத் பகுதியிலுள்ள ரத்த வங்கியில் பிளாஸ்மா வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் அது போலி ரத்த வங்கி என்றும், பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்'' என்றார்.

மேலும், இது குறித்து உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக், ``டெங்கு நோயாளிக்கு போலி பிளாஸ்மா விநியோகித்தது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/dengue-patient-died-after-allegedly-received-mosambi-juice-instead-of-blood-plasma

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக