நாமக்கல் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கும், தி.மு.க ராஜ்யசபா எம்.பியும், நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கும் இடையில் தான் மேற்படி பரபர சவால் விடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கமணி, சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில், கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை விமர்சித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தங்கமணிக்கு பதிலடி கொடுக்க நினைத்த ராஜேஸ்குமார், மத்திய அரசின் இந்தி திணிப்பு, நீட் தேர்வை கண்டித்து நாமக்கல் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்.
அதில் பேசிய கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், "நாங்கள் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தோமோ, அத்தனையையும் தற்போது நிறைவேற்றி வருகிறோம். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொரோனா காலத்தில் அல்லாடிய மக்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4000 வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி படிக்க செல்லும் மாணவிகளுக்கு, 'புதுமை பெண்' திட்டத்தில் மாதம் ரூ. 1000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று சொல்லிய அத்தனை வாக்குறுதிகளையும் முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னோமோ, அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். நாமக்கல் மாவட்டத்துக்கென்று பிரமாண்டமான முறையில் ரூ. 1,500 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை வருகிறது. நாமக்கல்லுக்கு புதிய பேருந்து நிலையம், ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ராசிபுரத்தில் பட்டு ஏல மையம், நாமக்கல் மாவட்டத்தில் பிரமாண்டமான அதிநவீன பால் பண்ணை என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அத்தனையும் தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் நாம் செய்திருக்கிறோம். ஆனால், இங்கே முன்னாள் அமைச்சராக இருந்தாரே தங்கமணி, சேந்தமங்கலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனால், நான் அவருக்கு ஒரு பதிலை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். தங்கமணியால், அ.தி.மு.க எம்.எல்.ஏ தனபால் பட்ட பாடு எங்களுக்கு தெரியாதா?. ராசிபுரம் எம்.எல்.ஏவாக இருந்த தனபால், தங்கமணிக்கு பயந்துகிட்டுதான் அவர் அவிநாசியே ஓடினார். ஆனால், இதை மறந்து தி.மு.க கட்சியினரை தங்கமணி விமர்சிக்கிறார்.
இதுபோன்ற தங்கமணியோட வரலாறு எல்லாம் எனக்கு தெரியும். அதுமட்டுமல்ல, ராசிபுரம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரோஜாவால், ஒருநாளாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரமுடிந்ததா?. தங்கமணி அனுமதித்தாரா?. தங்கமணிக்கு கொரோனா வந்ததபோதுதான், சரோஜாவால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வர முடிந்தது. ஆனால், இதை எல்லாம் மறந்துவிட்டு, தங்கமணி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று என்னைப் பற்றி பேசியிருக்கிறார். தங்கமணிக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பத்தாண்டு காலத்தில் செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டுக்குள் இந்த மாவட்டத்தில் செய்திருக்கிறோம். நீங்க பத்து வருஷம் என்ன செஞ்சு கிழிச்சீங்க?. உடனே, ரெண்டு விசயத்தை சொல்வீங்க. அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தோம்னு சொல்வீங்க. இன்னொன்னு சட்டக்கல்லூரி கொண்டு வந்தோம்பீங்க.
ஆனா, இந்த ரெண்டு திட்டத்தோட கதையை நான் சொல்றேன். அரசு மருத்துவக்கல்லூரியை டெண்டர் விட்டு, கட்டடத்தை கட்டி அது என்ன லட்சணத்துல முடிஞ்சதுனு உங்க எல்லாருக்கும் தெரியும். மாணவர் சேர்க்கையே அங்கு நடைபெறவில்லை. ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆனதும், இந்த மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. அங்கு தண்ணீர் வசதியில்லை. வேகவேகமாக கட்டடத்தைக் கட்டி, கமிஷனை வாங்கிட்டுப் போயிட்டாங்க.
ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியது தி.மு.க அரசுதான். குடிநீர் வசதிக்கு நாமக்கல் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்றத்தில் பேசியதால், ரூ. 9 கோடி நிதி கிடைத்துள்ளது. இது, அவர்கள் கொண்டு வந்த மருத்துவக்கல்லூரியின் லட்சணம். அடுத்து, சட்டக்கல்லூரி அறிவுப்பு பெயரளவில் மட்டும் இருந்தது. தி.மு.க ஆட்சி அமைந்ததும் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கி, நாமக்கல்லில் புதிய கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனா, நீங்க ஒண்ணுமே பத்து வருஷத்துல செய்யலை. அதேநேரம், நாங்க ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்துக்குள்ள செஞ்சதை எல்லாம் நாங்க சொன்னா, உங்களால் பதில் சொல்ல முடியுமா?.
நாமக்கல்லில் சித்த மருத்துவமனை, சித்தக் கல்லூரி வர இருக்கிறது. அமைச்சர் மதிவேந்தன் முயற்சியில் போதைமலைக்கு தார்சாலை போடும் திட்டம், நாமகிரிப்பேட்டையில் 2,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டா வழங்கும் நிகழ்வு என எங்களுடைய திட்டங்கள் ஏராளம். அதனால், தங்கமணிக்கு நான் சவால் விடுகிறேன். என்னுடைய சவாலை அவர் ஏற்பதற்கு தயாராக இருந்தால், இந்த ஓராண்டு காலத்துக்குள் நாங்கள் செய்த சாதனையைவிட, நீங்கள் பத்தாண்டில் என்ன செய்து கிழித்தீர்கள் என்பதை எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சவாலுக்கு தயாரா?” என்று பேசி, தங்கமணிக்கு சவால்விட்டார்.
இந்த நிலையில், இந்த சவாலை ஏற்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல்லில் நடைபெற்ற, நாமக்கல் நகர அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தங்கமணி,
"பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள். பத்து, பதினைந்து மாணவர்கள் இறந்ததுதான் மிச்சம். 'முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் பத்து ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் எதையும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் ஓராண்டுகால ஆட்சியில் இத்தனை செய்திருக்கிறோம். தங்கமணி என்ன செஞ்சு கிழித்தார்? என்று ராஜேஸ்குமார் நாமக்கல்லில் பேசியிருக்கிறார். அதோடு, 'நான் இந்த மேடையின் வாயிலாக சொல்கிறேன். நீங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்றும் என்னிடம் கேட்டிருக்கிறார். நான் சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், பத்திரிகை நண்பர்கள் அனைவரையும் வரச்சொல்லுங்கள். ஒரு மேடை அமைப்போம். அதில், நானும், தி.மு.க எம்.பியும் இருக்கிறோம். நாங்கள் பத்து ஆண்டுக்காலத்தில் செய்த சாதனைகளை சொல்கின்றேன். இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர் சொல்ல வேண்டும்.
அதை நான் சவாலாக ஏற்றுக்கொள்கிறேன். சட்டசபை முடிந்ததும், எந்த இடம், எப்போது என்று சொன்னால், நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். இதற்கெல்லாம், அ.தி.மு.கவினர் பயந்தவர்கள் அல்ல. அதேபோல், முன்னாள் அமைச்சர் சரோஜாவை ஆட்சியர் அலுவலக ஆய்வு கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று தி.மு.க எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். சரோஜா இல்லாமல் எந்த ஆய்வு கூட்டத்தையும் நடத்தியதில்லை. அவர் சொல்வது உண்மையென்றால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், சட்டப்படி கோர்ட்டுக்கு சென்று, ராஜேஸ்குமாரை மன்னிப்பு கேட்க வைப்பேன். உங்களைப் போல் அரசியல் வியாபாரியல்ல நான். உண்மையாக எம்.பியாக இருந்து, கட்சிக்கும், மக்களுக்கும் விஸ்வாசமாக இருப்பீர்கள் என்று சொன்னால், நீங்க விட்ட சவாலை நான் ஏற்கின்றேன். நேரடியாக மேடைக்கு வந்து என்னிடம் விவாதிக்க வேண்டும்" என்றார்.
இப்படி, இருவரும் பரஸ்பரம் மாறி மாறி தத்தமது கட்சி மேடைகளில் சவால் விடுவதால், நாமக்கல் மாவட்ட அரசியல் பரபர லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/namakkal-politics-dmk-mp-vs-admk-former-minister
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக