மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழு வெளியிட்ட பரிந்துரை பல்வேறு அரசியல் விமர்சங்களுக்குள்ளாகிவரும் நிலையில், பாராளுமன்ற விதிமுறைகளை மீறி இந்த பரிந்துரை வெளியிடப்பட்டிருப்பதாக, விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``அமித் ஷா தலைமையிலான 'அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு' அண்மையில், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் ஊடகங்களுக்குத் தெரிய வந்து இந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் ஊடகங்களுக்கு வெளியானது பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே அந்த அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும். அத்துடன், குழுவின் தலைவர் பொறுப்பு வகிக்கும் அமித் ஷா, தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் முதல் அறிக்கை 1987-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது 11-வது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் விவரங்கள் உள்துறை அமைச்சகத்திலிருந்து தான் கசிய விடப்பட்டது எனக் கூறப்படுகிறது. அவ்வாறெனில், அதற்குப் பொறுப்பேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து உள்துறை அமைச்சர் விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அவரின் சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று ’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குஜராத்தில் இந்தியைப் பயிற்று மொழி ஆக்குவோம்’ என்று பேசத் தயாரா... அப்படி அவர் பேசி குஜராத்தில் வாக்கு கேட்க முடியுமா... நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அதைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடு என்னும் அவப்பெயரை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கும் பாஜக அரசு, மொழி அடிப்படையிலான இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vck-chief-thirumavalavan-demand-to-home-minister-amit-shah-resigning-from-his-post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக