புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுமதியுடன், தொழில்துறை செயலர் முத்துமீனா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வணிகம் எளிதாக செய்ய சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும் புதுச்சேரி அரசு தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில், புதுச்சேரியில் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மூன்று ஆ்ண்டுகள் இந்த நடைமுறை அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும். பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்குப் பிறகு, கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், முதலாளி அல்லது மேலாளர் மீது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை. குறிப்பாக, பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு வேலை வழங்குபவர்கள், அவர்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிவதற்கு அனுமதிக்கலாம். அதேசமயம் பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில் நிறுவனங்களின் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும். பெண் ஊழியர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு முதலாளியும், பாலினத்தின் கீழ், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார் குழுவை அமைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/in-puducherry-government-has-issued-an-information-by-allowing-shops-to-be-open-24-hours-with-governors-approval
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக