Ad

திங்கள், 17 அக்டோபர், 2022

Doctor Vikatan: கைகளில் அதிகப்படியான கொழுப்பு.... பருத்த கைகளை மட்டும் இளைக்க வைப்பது சாத்தியமா?

Doctor Vikatan: என் வயது 35. கைகளின் மேற்பகுதி மட்டும் மிகவும் பருமனாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? கைகளை மட்டும் இளைக்கச் செய்ய முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

ஷீபா தேவராஜ்

கைகளின் மேல்பகுதி என நீங்கள் குறிப்பிட்டிருப்பது பைசெப்ஸ் உள்ள அப்பர் ஆர்ம் பகுதியை என புரிந்துகொள்கிறேன். உடலில் கொழுப்பு சேர்வது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அதாவது சிலருக்கு சில பகுதிகளில் மட்டும் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும்.

சிலருக்கு பிட்டப்பகுதியில் கொழுப்பு அதிகம் சேர்ந்து அந்தப் பகுதி மட்டும் மிகவும் பெரிதாக இருக்கும். இன்னும் சிலருக்கு இடுப்புப் பகுதியைச் சுற்றி கொழுப்பு சேர்ந்திருக்கும். வேறு சிலருக்கு தொடைப்பகுதியில் மட்டும் அளவுக்கதிக கொழுப்பு சேர்ந்திருக்கும்.

கொழுப்பு சேரும் விதமானது இப்படி ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதைப் போல உங்கள் விஷயத்தில் கைகளில் அது அதிகம் சேர்ந்திருக்கலாம். நீங்கள் கேட்டுள்ளதுபோல கைகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை.

உடற்பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடலுக்குமானதுதான். இதுவரை நீங்கள் உடற்பயிற்சியே செய்து பழக்கமில்லாதவர் என்றால் உடனடியாக அதைத் தொடங்க வேண்டும். ஃபிட்னெஸ் பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உங்களுக்கேற்ற வொர்க் அவுட்டை தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பியுங்கள். அப்படி அவர் பரிந்துரைக்கும் வொர்க் அவுட்டானது உங்களுடைய ஒட்டுமொத்த உடலுக்குமானதாகவே இருக்கும்.

ஒட்டுமொத்தமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது அவற்றில் கைகளில் சேர்ந்த கொழுப்பும் குறையுமே தவிர, கைகளுக்கு மட்டும் செய்யும்படியான பிரத்யேக பயிற்சி என்று எதுவும் கிடையாது.

அப்படி நீங்கள் வொர்க் அவுட் செய்யும்போதுதான் உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்ந்திருந்தாலும் அது குறையும். அதுதான் சரியானதும்கூட.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-excess-fat-is-it-possible-to-reduce-puffy-arms-only

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக