இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக காசி இருக்கிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய கலாசாரம், பாரம்பர்யம், அறிவுத் தொடர்பை மீண்டும் கண்டறியவும் கொண்டாடவும் வசதியாக வாரணாசியில் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை என ஒரு மாதம் நடைபெறுகிறது.
கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பர்ய நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி, தமிழகத்திலிருந்து 3,000 பேரை அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ஒருபுறம் பா.ஜ.க-வினர் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், மற்றொருபுறம் தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது. தமிழகத்துக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையிலுள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கம்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனால், தமிழகத்தின் 12 வெவ்வேறு இடங்களிலிருந்து கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும், சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலிருந்து ரயில்களுடன் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகள் மூலம் பல்வேறு குழுக்களாகக் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டுத் திரும்பி வர எட்டு நாள்கள் வரை ஆகும். காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவதுடன், கங்கையில் படகு சவாரியும் மேற்கொள்வர். விருந்தினர்களின் பயணச் செலவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் https://ift.tt/1C9cAXO என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்' எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "கல்வியில் ஆன்மிகம் கலப்பது தப்பு அல்ல. ஆனால் மதவெறி கலந்துவிடக் கூடாது. பொதுக்காசை எடுத்து இப்படி வீசலாமா... மறைமுகமாக இதில் வேறு ஏதோ இருக்கிறது" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "தமிழ்நாட்டுக்கு எது நல்லது செய்தாலும், அதைக் கெடுதல் என்றுதான் இங்கு இருக்கக்கூடியவர்கள் சொல்வார்கள். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைக் கெடுதல் என்று சொல்வார்கள். அதனால் இவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தவேண்டியது கிடையாது.
நம்முடைய கலாசாரம், பண்பாட்டைப் பெருமைப்படுத்துவதற்காக ஏதேனும் ஒன்றைச் செய்தால் அதிலும் குறை கண்டுபிடிப்பது என்பது தவறான விஷயம். ஆகவே இவர்களுடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் ஆகவேண்டிய நல்ல காரியங்களை, ஆக்கபூர்வமான காரியங்களைப் பார்ப்பது சிறந்தது. இதில் அரசு நிதி எதுவும் வீணடிக்கப்படவில்லை" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/announcement-of-chennai-iit-dmk-opposing-why
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக