`மருந்துகள் நோயை குணப்படுத்தலாம். ஆனால், மருத்துவர்களால் மட்டுமே நோயாளிகளை குணப்படுத்த முடியும்.’ - சுவிட்சர்லாந்து மருத்துவர் கார்ல் ஜங் (Carl Jung).
மனிதர்கள், மருத்துவர்கள்மேல் வைத்திருப்பது அபாரமான நம்பிக்கை. எப்பேர்ப்பட்ட தீராத நோயையும் மருத்துவர் தீர்த்துவிடுவார் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த பலவீனம்தான் பலருக்குப் பணம் பார்க்கும் வழி. இதய அறுவை சிகிச்சையையே எடுத்துக்கொள்வோமே... அரசு மருத்துவமனையில் இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கட்டணம். பணத்துக்குத் தகுந்த சிகிச்சை, வசதிகள், கவனிப்பு. எல்லா மருத்துவர்களும் இப்படிப்பட்டவர்கள் இல்லை. விதிவிலக்கானவர்களும் உண்டு... இதயநோய் நிபுணர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டியைப்போல!
பெங்களூரு. டாக்டர் தேவி ஷெட்டியின் நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனை. உள்ளே நுழைந்ததும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அத்தனை பேரும் வழிபட தனித்தனி வழிபாட்டுத்தலங்கள். யாருக்கு, எந்த நோயாக இருந்தாலும் அதற்கான தீர்வு தொடங்குவது இந்த இடத்திலிருந்துதான். உள்ளே போனால் வரவேற்புக்கூடம். `இங்கே வங்காள மொழியில் பேசலாம்’ என்கிற அறிவிப்புப் பலகை. கர்நாடகவாசிகள் கன்னடத்தில் பேசுவார்கள்; ஆங்கிலமும் இந்தியும்கூடத் தெரியும். பிறகு ஏன் வங்க மொழி? அண்டை நாடான பங்களாதேஷிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதிகம். நோயாளிகளுடன் வரும் நண்பர்கள், உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் சிரமப்படாமல் உரையாடும் வசதிக்காக வங்க மொழி.
டாக்டர் தேவி ஷெட்டி நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை பாணியே வேறு. அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்... `இன்றைய நவீன மருத்துவம், ஒரு மருத்துவர் பரிவோடு, ஒரு நோயாளியைத் தொட்டுப் பேசும் முக்கியத்துவத்தை அடியோடு இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒரு நோயாளி என்னிடம் வரும்போது, அவருக்கான எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டிருக்கும். அந்த ரிப்போர்ட்டுகளையும் நான் படித்திருப்பேன். அவருக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். அந்தச் சூழ்நிலையில், நான் என் ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தவேண்டிய தேவையே இருக்காது. ஆனாலும், நான் என் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து நோயாளியின் மார்பில் வைத்துக் கேட்பேன். அவருடைய இதயத்துடிப்பையும், நுரையீரல் செயல்பாட்டையும் கவனிப்பேன். நான் நோயாளியைத் தொடவேண்டிய தேவையே இல்லை. ஆனாலும் நான் ஒவ்வொருவரையும் தொட்டுப் பேசுகிறேன். தொடுதலின் சக்தி ஆச்சர்யகரமானது.
நான் நோயாளியைத் தொடுகிற கணத்தில், அவரின் தோளைச் சுற்றி என் கைகளைப் போட்டுக்கொள்வேன். அவருக்கு அது என்மேல் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தும். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள்தான் அவருடன் உரையாடுவதற்கான நேரம். அந்த நேரத்துக்குள் மரணத்தின் விளிம்பில் நடக்கும் ஆபரேஷனுக்கு அவரைத் தயார்படுத்திவிடுவேன். அவர் என்னை முழுமையாக நம்ப ஆரம்பித்துவிடுவார். அவரின் கண்களை நேருக்கு நேராகப் பரிவோடு பார்த்து, அவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பேசவேண்டியது மிக அவசியம். இந்த உலகிலுள்ள மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எல்லாவற்றையும்விட தொட்டுப் பேசும் இந்த வழிமுறைக்கு மிகச்சிறந்த குணப்படுத்தும் சக்தி உண்டு. ஆனால், எதிர்பாராதவிதமாக தொட்டு சிகிச்சை அளித்தல் என்கிற இந்தத் தத்துவம், நோயாளிகளின் மேலான பரிவு, அக்கறை இவையெல்லாம் படிப்படியாக இப்போது இல்லாமலேயே போய்விட்டன. இது மிக மோசமான சூழ்நிலை. ஆனாலும் இவையெல்லாம் திரும்ப வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’
இதுதான் தேவி பிரசாத் ஷெட்டி. அதனால்தான் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளெல்லாம் அவரைத் தேடி வந்தன. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அவரை `தி ஹென்றி ஃபோர்டு ஆஃப் ஹார்ட் சர்ஜரி’ என்று வர்ணித்தது. நோயாளியிடம் பரிவுகாட்டித் தொட்டுப் பேச வேண்டும் என்பதை தேவி ஷெட்டி கற்றுக்கொண்டது ஒரு பெரிய ஆளுமையிடம். அது ஒரு சுவாரஸ்யமான கதை. அதற்கு முன்பு தேவி ஷெட்டியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு...
1954-ம் ஆண்டு, கர்நாடகாவிலுள்ள தக்ஷிண கன்னடா மாவட்டத்திலிருக்கும் கின்னிகோலி என்கிற கிராமத்தில் பிறந்தவர் தேவி ஷெட்டி. வீட்டில் ஒன்பது குழந்தைகளில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர். பள்ளியில் படிக்கும்போது, கிறிஸ்டியான் பார்னார்டு (Christiaan Barnard) என்ற மருத்துவரைப் பற்றிக் கேள்விப்படுகிறார். பார்னார்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தார் என்கிற செய்தியைக் கேள்விப்படுகிறார் ஷெட்டி. அன்றிலிருந்து தானும் ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணராக ஆக வேண்டும் என்கிற லட்சியம் அவருக்குள் துளிர்விடுகிறது. படிப்படியாக அதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பிறகு லண்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில், எஃப்.ஆர்.சி.எஸ் பட்டம் வாங்கினார். 1989-ல் இந்தியாவுக்குத் திரும்பியவர், கொல்கத்தாவிலுள்ள பி.எம்.பிர்லா ஹாஸ்பிட்டலில் பணியாற்றினார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதெல்லாம் தொடுதலின் மகத்துவம் அவருக்கே தெரியாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகுகூட ஏழை நோயாளிகளென்றால் யாரும் தொட்டுப் பேச மாட்டார்கள். அன்றைய காலகட்டத்தில் மொபைல்போன்கள் இல்லை. ஆபரேஷன் தியேட்டரில் ஒரு லேண்ட்லைன் போன் மட்டும் இருந்தது.
ஒருநாள் டாக்ட தேவி ஷெட்டி ஆபரேஷன் தியேட்டரில் ஓர் அறுவை சிகிச்சையில் இருந்தார். அப்போது அந்த போன் அழைப்பு வந்தது. அவருடன் இருந்த மயக்க மருத்துவர் போனை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் தேவி ஷெட்டியை வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்டதும், ``நான் ஒரு ஹார்ட் சர்ஜன். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போய் நான் என்ன செய்யப்போகிறேன்?’’ என்றார் தேவி ஷெட்டி. அன்றைக்குத் திரும்பத் திரும்ப அந்த போன் அழைப்பு வர, வேறு வழியே இல்லாமல் அழைத்தவரின் வீட்டுக்குப் போனார் தேவி ஷெட்டி. அழைத்தவர் வேறு யாருமில்லை... அன்னை தெரசா.
அன்னை தெரசாவுக்கு ஹார்ட் அட்டாக். அதற்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி. பின்னாளில் அன்னை தெரசாவுடனான தனது நாள்களைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டாக்டர் ஷெட்டி... ``எனக்கு எளிமையின் ஆற்றலையும், இரக்கத்தின் ஆற்றலையும், அன்பின் ஆற்றலையும் அறிமுகப்படுத்தியவர் அன்னை தெரசாதான். அவர் ஒரு கன்னியாஸ்திரீ. அவருடைய வேலை என்பது பிரார்த்தனை செய்வது. ஆனால் அவரோ, சக மனிதர்களுக்கு உதவுவதுதான் கடவுளை அடைய சிறந்த வழி என்று நம்பினார்.’’
கொல்கத்தாவிலிருந்து பெங்களூருக்குத் திரும்பியவர், தன் இதய அறுவை சிகிச்சைப் பணியைத் தொடங்கினார். 2001-ல் நாராயணா ஹிருதயாலயா (இப்போது நாராயணா ஹெல்த்) மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தொடங்கினார். இதய அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல், புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை எனப் பல சிகிச்சைகள் இங்கே அளிக்கப்படுகின்றன. ஆயிரம் படுக்கை வசதியுடன் இயங்கிவருகிறது நாராயணா ஹெல்த். ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் இங்கே நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் தினமும் இங்கே வருகிறார்கள். பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, மைசூர்... எனப் பல நகரங்களில் மொத்தம் 24 நாராயணா ஹெல்த் மருத்துவமனைகள் இருக்கின்றன.
தேவி ஷெட்டியின் நாராயணா மருத்துவமனையில் மிகக்குறைந்த செலவில் சிகிச்சை என்பதுதான் சிறப்பம்சம். பல தனியார் மருத்துவமனைகள் இதய அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டிருக்க, மிகக் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை அளிக்கிறார் தேவி ஷெட்டி. பல்வேறுவிதமான மருத்துவப் பரிசோதனைகளுக்கும் குறைந்த கட்டணமே இவர் மருத்துவமனையில் வசூலிக்கப்படுகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை. இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் ஷெட்டி. இந்த சாதனைகளுக்கெல்லாம் அடிப்படை அவருக்கு அன்னை தெரசாவுடன் ஏற்பட்ட சந்திப்பு.
இப்போதும் தேவி ஷெட்டியின் அலுவலக அறையில் அன்னை தெரசாவின் புகழ்பெற்ற வாசகம் அடங்கிய ஒரு பலகை மாட்டப்பட்டிருக்கிறது. அதில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது... `பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிட உதவும் கரங்கள் புனிதமானவை.’
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/motivation-from-the-life-of-doctor-devi-shetty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக