Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மாரடைப்புக்குப் பிறகு அவர்களுக்கு ரெகுலர் வாழ்க்கை சாத்தியமில்லையா? மாரடைப்பு வந்து மீண்டவர்கள் உடற்பயிற்சி, பயணம் செய்யலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் முருகு சுந்தர பாண்டியன்...
ஒரு நபருக்கு ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டால் அவர் உடனடியாக இதயநோய் மருத்துவரின் ஆலோசனையையும் சிகிச்சையையும் பெற வேண்டும். இதயத்தின் செயல்பாடு மற்றும் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.
அடைப்புகளின் எண்ணிக்கை மற்றும் தன்மையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உகந்த மருத்துவ சிகிச்சையுடன் கூடுதலாக ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் ரிவாஸ்குலரைசேஷன் சிகிச்சையும் செய்ய வேண்டும். எனவே, அந்த நபர் பாதிப்பிலிருந்து மீளும் காலமானது இந்த மருத்துவ சிகிச்சைகளைப் பொறுத்தே அமையும்.
பாதிப்பிலிருந்து குணமடைந்த பிறகு, இதய செயல்பாடு சாதாரணமாக இருந்தால் நோயாளிகள் தங்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பலாம். ஒருவேளை இதய செயலிழப்பில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் , அவர் இதய மருத்துவர் வலியுறுத்தும் பிரத்யேக ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஹார்ட் அட்டாக் வந்து மீண்டவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தினமும் 30 நிமிடங்கள் பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவார்கள்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பாதிப்பிலிருந்து மீண்டதும் உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வார். உங்கள் இதயச் செயல்பாடும் நல்லவிதமாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் உடற்பயிற்சிகள் செய்யவோ, பயணம் செய்யவோ தடை ஏதும் இருக்காது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-can-heart-attack-survivors-travel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக