Ad

வியாழன், 27 அக்டோபர், 2022

Doctor Vikatan: உப்பில்லாத உணவுப்பழக்கம்... ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: அயோடைஸ்டு உப்பு, சாதாரண உப்பு... எது சிறந்தது? உப்பு சேர்க்காத உணவுகள் ஆரோக்கியமானவையா? உணவில் உப்பை அறவே தவிர்ப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டெர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்...

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

கடல்நீரை ஆவியாக்கிப் பெறப்படும் உப்பில் தாதுச்சத்துகள் கலந்திருக்கும். பொதுவாக கடல் உப்பு ஆரோக்கியமானது என்று நாம் நம்புகிறோம். ஆனால் இதிலுள்ள தாதுச்சத்துகளின் அளவு மிகமிக குறைவு. கடல் உப்பைச் சேர்த்துக் கொள்வதால்தான் இந்தச் சத்துகள் உடலில் சேர வேண்டும் என்று அவசியமில்லை. அந்தச் சத்துகள் பிற உணவுகளின் மூலமே நமக்குக் கிடைத்துவிடும்.

அயோடைஸ்ட்டு உப்பு என்பது சாதாரண டேபிள் சால்ட்டில் செறிவூட்டப்பட்ட அயோடின் சத்து சேர்க்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு அயோடின் குறைபாடு காரணமாக பலரும் தைராய்டு பாதிப்புக்குள்ளானார்கள். தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய அயோடின் மிக அவசியம். சீரான ரத்த அழுத்தம், இதயநலம் என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தைராய்டு ஹார்மோன் மிக முக்கியம். எனவே அயோடின் இல்லாவிட்டால் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகாது.

தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்காக அந்தச் சுரப்பி பெரிதாகத் தொடங்கும். அதற்கு 'காயிட்டர்' (Goiter) என்று பெயர். இதையெல்லாம் தவிர்ப்பதற்காகத் தான் உப்பில் அயோடின் சேர்த்து அயோடைஸ்டு உப்பாக விற்கத் தொடங்கினார்கள்.

அயோடின் சத்து மிகக் குறைந்த அளவுதான் நம் உடலுக்குத் தேவை. மட்டுமன்றி கர்ப்பகால ஆரோக்கியம், கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி போன்றவற்றுக்கும் அயோடின் சத்து அவசியம். அதற்காக அயோடின் குறைபாடு வந்துவிடுமோ என்ற பயத்தில் அதை அளவுக்கதிமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

ரத்த அழுத்தம்

உப்பு நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அதே நேரம் அதன் அளவு அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம், இதய பாதிப்பு என நிறைய பிரச்னைகள் வரலாம். இதற்கெல்லாம் பயந்துகொண்டு சிலர் உணவில் உப்பே சேர்ப்பதில்லை. சோடியம் என்ற உப்பானது நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்து.

அதை அறவே தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அளவோடு சேர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த சோடியமானது பிற உணவுகளிலும் கிடைக்கும். நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் இயல்பிலேயே சோடியம் சத்து இருக்கும். 

உணவின் மூலம் கிடைக்கும் உப்புச்சத்து குறித்து நாம் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. எனவே அதைத் தாண்டி நாம் அளவுக்கதிமாக உப்பு சேர்க்கும்போதுதான் பிரச்னையாகிறது. சோடியம் குறைபாட்டால் தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்பான பாதிப்புகளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உப்புள்ள உணவுகளால் ரத்த அழுத்தம், இதயம் பாதிக்கப்படுதல் போன்ற ரிஸ்க்குகள் அதிகரிக்கும். எனவே உப்பே சேர்க்கக்கூடாது என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு இதயம், கிட்னி தொடர்பான பிரச்னைகள் இருந்தால் உப்பின் அளவில் கவனம் அவசியம்.

உப்பு

பொதுவாக 1.5 முதல் 2 கிராம் அளவு அல்லது அதைவிட குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது. ஆரோக்கியமான யாருக்கும் உப்பே வேண்டாம் என மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துவதில்லை. அதே நேரம் சிலருக்கு குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லும்போது, அதன் விளைவாக உடலில் நீர்வறட்சி ஏற்படும். எனவே அவர்களை நிறைய தண்ணீர் குடிக்குமாறும், அதில் சிட்டிகை உப்பு சேர்த்துக் குடிக்கும்படியும் அறிவுறுத்துவோம். அது நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

உப்பையே தவிர்ப்பது சரியானதல்ல. அளவோடு இருக்கும்போது எதுவும் ஆபத்தாவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-a-salt-free-diet-healthy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக