Ad

வெள்ளி, 21 அக்டோபர், 2022

`வரி மேலாண்மை முறையாக இல்லாததால் ரூ.236.63 கோடி வருவாய் இழப்பு!’ - சி.ஏ.ஜி அறிக்கை

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 2020, 2021-ம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலத்தின் வருவாய், செலவு, கடன், வரி ஏய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

2019-20-ம் ஆண்டில் மாநில அரசு ஈட்டிய வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி. இது மொத்த வருவாயில் 69 சதவீதமாக இருந்தது. மீதமுள்ள 31 சதவிகிதம், அதாவது, ரூ.54,176 கோடி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதன்படி மொத்த வருவாய் 1.74 கோடி ரூபாயாகும்.

ஜி.எஸ்.டி

வரித் தொடர்பான தணிக்கை

2018-19 ஆண்டை காட்டிலும் வட்டி வரவுகள், ஆதாயப் பங்குகளும், ஆதாயங்களும் 35.32 சதவிகிதமும், பயிர் வளர்ப்பு 71.30 சதவிகிதமும், காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்கும் பிரிவில் 42.68 சதவிகிதமும் சரிந்திருக்கிறது. மாநிலத்தின் வருவாய் முந்தைய ஆண்டு 14,200.02 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், 2019-20-ல் 12,887.84 கோடி ரூபாயாக (9.24 சதவிகிதம்) குறைந்துள்ளது.

மாநிலத்துக்குள் உள்ளபடியான நிலுவைத் தொகை 30,908.32 கோடி ரூபாயாகும். அதில் 12,451.84 கோடி ரூபாய் ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதில் விற்பனை, வர்த்தகம் மீதான வரிகளே அதிகமாக இருக்கிறது.

2019-20-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம், நில வருவாய் சம்பந்தமான பதிவுருக்களை ஆய்வு செய்ததில் ரூ.236.63 கோடிக்கு குறைவான வரி மதிப்பீடுகள், குறைவாக வரி விதித்தல் என வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூ.80.78 கோடி அளவுக்கு வரி செலுத்தவில்லை. மின்னணு வழிப் பட்டியல் தயாரித்தவர்கள் ஜி.எஸ்.டி ஆர்3பி படிவம் தாக்கல் செய்யாததுடன் ரூ.49.43 கோடி வரி செலுத்தவில்லை.

வரி இல்லை என கணக்கு தாக்கல் செய்தவர்கள் மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு ரூ.8.22 கோடி வரி செலுத்தவில்லை.

25 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.20 கோடிக்கு மாறுதல் தீர்வை கூடுதல் வரி தவறாக, அதிகமாக ஒதுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பதிவு அதிகாரிகள் ஆவணங்களை தவறாக வகைப்படுத்தியதால் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ரூ.1.09 கோடியாக குறைவாக வசூலிக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின்படி, 40 முகவர்கள் குறித்த மதிப்பீட்டு அலுவலர்களின் கவனக்குறைவால் ரூ.4.16 கோடி வரிக்கு ரூ.48.88 லட்சம் வட்டி வசூலிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/23663-crore-revenue-loss-due-to-improper-tax-management-cag-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக