விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த மார்ச் மாதம் நடந்த தகராறு ஒன்றில் இவரை, அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் வெட்டிக் கொலைசெய்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார், தன் தந்தையைக் கொன்ற முருகனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் எனச்சொல்லி அவரைக் கொலைசெய்ய திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே முருகனை, போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று தீபாவளியை முன்னிட்டு, தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊரான அர்ச்சுனாபுரத்திற்கு முருகன் வந்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரஞ்சித்குமார், முருகனை பழிக்குப்பழி வாங்க இதுதான் சரியான நேரம் எனக்கருதி அவரை கொலைசெய்ய நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயம், வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளி வழியே முருகன் வந்துகொண்டிருப்பதை பார்த்த அவர், முருகனை இடைமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து எந்த பதற்றமும் இல்லாமல் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு சென்று ரஞ்சித்குமார் சரணடைந்துள்ளார். ரஞ்சித்குமாரின் வாக்குமூலத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், முருகனின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ரஞ்சித்குமாரை கைதுசெய்ததுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இந்தக் கொலையில் அவருக்கு யாரேனும் உதவி செய்தார்களா? கூட்டு சதி உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-youngster-who-killed-a-person-in-personal-dispute
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக