திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக எக்கச்சக்கமாக கடத்தல் தங்கம் இறங்குகிறது. தங்கக் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவ்வப்போது வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வதும், அவர்களிடம் தங்கக் கடத்தல் நபர்கள் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. டிஸைன் டிஸைனாக தங்கம் கடத்திவரப்பட்டாலும், அவை அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுகின்றன. அப்படி இந்தமுறை கடத்தல் கும்பல், தங்கக் கடத்தலுக்கு வீடியோ கேமை கையில் எடுத்து வசமாய்ச் சிக்கியிருக்கிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 28-ம் தேதி இரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தின் மூலம் தங்கக் கடத்தல் கும்பல் ஒன்று திருச்சிக்கு வரவிருப்பதாக ஏற்கெனவே வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. கிடைத்த தகவல் மற்றும் சொல்லப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் நோட்டமிட்டு, சோதனையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அப்போது இரண்டு பயணிகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததோடு, இருவரும் ஒரே மாதிரி அதிக அளவில் வீடியோ கேம் சாதனங்களை மலேசியாவிலிருந்து கொண்டு வந்திருந்தது தெரிந்திருக்கிறது.
அதையடுத்து அந்த வீடியோ கேம் டிவைஸ்களை தனியே எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ய, வீடியோ கேம் டிவைஸினுள் தங்கத்தை பேப்பர் வடிவில் பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. தங்கத்தை பேப்பர் வடிவில் மாற்றியதோடு, ஒருவேளை பிடிபட்டாலும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்த தங்க பேப்பர் மீது வெள்ளி நிறத்திலான முலாமை பூசி எடுத்து வந்ததும் தெரியவந்தது. அந்த வகையில் இருவரிடமிருந்தும் 64 தங்க ஷீட்டுகள் மற்றும் நகைகள் என ரூ.69 லட்சம் மதிப்பிலான 1.343 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தங்கத்தை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், ‘எங்கிருந்து, யாருக்காக இந்த தங்கம் கடத்தப்பட்டது?’… என 2 பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/gold-smuggling-gang-caught-at-trichy-airport
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக