Ad

திங்கள், 24 அக்டோபர், 2022

Pro Kabaddi: ரெய்டு, டிஃபன்ஸ் ரெண்டுமே மோசம் - தொடர்ந்து தோற்கும் தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது 6-வது போட்டியில் பலம் வாய்ந்த யுபி யோத்தா அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் 24-41 என மிக மோசமாக தமிழ் தலைவாஸ் அணி தோற்றிருக்கிறது.

ஒரு அணியாக ஒன்றிணைந்து ஆடாமல் தங்களது தனிப்பட்ட ஆட்டத்திலேயே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து மோசமான தோல்விகளால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். வெறும் இரண்டு ரைடர்கள் ஐந்து டிஃபன்ட்டர்கள் கொண்டு ஒரு சரியான ஃபார்மேஷனே இல்லாமல் தமிழ் தலைவாஸ் இந்தப் போட்டியில் களம் இறங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரதீப் நர்வால்வை அசத்தலாக டேக்கிள் செய்து முதல் புள்ளியைப் பெற்றது தமிழ் தலைவாஸ். ஆனால், அடுத்து அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் சொதப்பலாகவே அமைந்தது. ரெய்டர்களும் டிஃபன்ட்டர்களும் ஓர் அணியாகவே ஆடவில்லை. அதிரடி வீரர் பவன் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை. சீசனின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய நரேந்தர் கண்டோலா கடந்த போட்டியிலிருந்து சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை.

தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா

முக்கியமான நேரங்களில் ரெய்டு புள்ளிகள் எடுப்பதில்லை. நம்பிக்கை இல்லாதது போன்றே ஆடுகிறார். ஹிமான்ஷூ சிங்கும் பெரிதாக ரெய்டு புள்ளிகளைப் பெறவில்லை. எதிரணியில் புரோ கபடி சீசன்களில் 1400 ரெய்டு புள்ளிகளை எடுத்து சாதனை படைத்தார் பிரதீப் நர்வால். கடந்த போட்டிகள் போலவே இந்த ஆட்டத்திலும் டிஃபன்ட்டர்கள் படுமோசமாக ஆடினர்.

முதல் 8 நிமிடங்களிலேயே தமிழ் தலைவாஸ் முதல் ஆல் அவுட்டைச் சந்தித்தது. முதல் பாதியில் அவர்களால் பெரிதாகப் புள்ளிகளே பெற முடியவில்லை.

யுபி யோத்தாவின் அதிரடி ஆட்டத்தால் மீண்டும் ஒரு ஆல் ஆவுட்டை முதல் பாதிலேயே சந்தித்தது தமிழ் தலைவாஸ். முதல் பாதி முடிவில் 11 - 23 என 12 புள்ளிகள் முன்னிலை வகித்தது யுபி யோத்தா. இரண்டாவது பாதியிலும் அவர்களே அதிரடி காட்டினர். யுபி யோத்தா அணியில் சுமித் 5 டேக்கிள் புள்ளிகளை எடுத்தார். மொத்தம் 19 டேக்கிள் புள்ளிகளை பெற்றது அந்த அணி. அதிரடி வீரர் பிரதீப் நர்வால் பத்து நிமிடங்கள் பென்ச்சில் இருந்தாலும் தமிழ் தலைவாஸ் அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறவில்லை.

இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் எடுத்த எல்லா முயற்சிகளும் வீணாகவே போனது. இறுதியில் 41-24 என யுபி யோத்தா அமோகமான வெற்றியைப் பெற்றது.
தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா

இந்தப் போட்டியில் நரேந்தர் கண்டோலா ஹிமான்ஷூசிங் ஆகியோர் சேர்ந்து ஒன்பது ரெய்டு புள்ளிகள் மட்டுமே எடுத்தனர். அதிலும் நரேந்தர் கண்டோலா வெறும் இரண்டே ரெய்டு புள்ளிகள் மட்டுமே எடுத்தார். போட்டியின் போது யார் ரெய்டு செல்ல வேண்டும் என்பதிலேயே குழப்பம் இருந்தது. அணியில் வீரர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ரெய்டர் விஸ்வநாத் பென்ச்சில் உட்கார்ந்திருந்தார். மாறாக, டிஃபன்ட்டர் மோஹித் ரெய்டு சென்றார். ஒரு டிஃபன்ட்டரால் சிறந்த முறையில் எப்படி ரைட் சென்று புள்ளிகளை எடுக்க முடியும்? இப்படிப் பல காரணங்களினால் தமிழ் தலைவாஸுக்குப் புள்ளிகளைப் பெற முடியவில்லை.

அடுத்தடுத்த தோல்விகளால் தமிழ் தலைவாஸ் பிளே-ஆஃப் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. பவன் இல்லை என்றாலும் எங்களால் வெற்றி பெற முடியும் என நம்பிக்கையோடு தமிழ் தலைவாஸ் வீரர்கள் களமிறங்க வேண்டும். மாற்றம் நிகழ வேண்டும்.


source https://sports.vikatan.com/kabaddi/pro-kabaddi-2022-tamil-thalaivas-losing-streak-continues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக