Ad

திங்கள், 17 அக்டோபர், 2022

உக்ரைன் Vs ரஷ்யா போல் வெடிக்கப் போகிறதா தைவான் Vs சீனா?!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதை தடுக்கும் நோக்கிலும், உக்ரைனை தங்களோடு இணைக்கும் நோக்கிலும், அந்த நாட்டின்மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. அதுவே மறுபுறம், தைவானை தங்களுடன் இணைக்கும் நோக்கில், அங்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது சீனா. என்ன பிரச்னை அங்கே?

தைவான் முன் கதை!

சீனாவில், 1911-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1927-ல் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இந்தப் போரில் தோல்வியுற்ற சீன தேசியக் கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் 168 தீவுகள் அடங்கிய தைவானில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித் தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தைவான். 1975 வரை சீன தேசியக் கட்சியின் தலைவரான சியாங்-ன் சர்வாதிகார ஆட்சியிலிருந்த தைவான், அதன் பிறகு மெல்ல மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நீண்ட காலமாகவே தைவானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981-ல் `ஒரு நாடு; இரண்டு அமைப்புகள்' என்ற ஆட்சிமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, ``எங்களுடன் தைவான் இணைந்துகொண்டால், ஹாங்காங்கில் இருப்பதுபோல உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்'' என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தைவான்.

தைவான் - சீனா

தைவானில், 2000-ம் ஆண்டில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து தொழில்துறை, தொழில்நுட்பத் துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதைக் கண்டு அஞ்சிய சீனா, `தைவானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனி நாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே' என்று சொல்லிவந்தது. 2005-ல் தைவானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது சீனா. இதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தைவானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.

இதைத் தொடர்ந்து, 2016-ல் தைவானின் அதிபரான சாய் இங்-வென், சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டுவந்ததோடு, பாதுகாப்புத் துறையையும் மேம்படுத்தினார். வெளிநாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தத் தொடங்கினார். அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் இங்-வென் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டதால், தைவானுக்குப் பல நவீன ஆயுதங்கள் கிடைத்தன. மீண்டும் 2020-ல் அதிபரான இங்-வென், தற்போதிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நல்ல நட்புறவை கடைபிடித்துவருகிறார். கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமையிடமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்திருக்கின்றன.

தைவான் எல்லையில் சீனா ஏவுகணைப் பயிற்சி

கடந்த ஆகஸ்ட் 3 அன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கைகளை மீறி தைவானுக்கு வந்து சென்றார். ``தைவானுக்கு எப்போது துணை நிறோம் என்பதை உணர்த்தவே இங்கு வந்திருக்கிறேன்'' என்றார் பெலோசி. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியது சீனா. அங்குள்ள கடற்பரப்பில் சில ஏவுகணைகளையும் வீசி அச்சுறுத்தியது. இதையடுத்து, தைவானும் போர்ப் பயிற்சியில் ஈடுபட, அங்கு பதற்றம் அதிகரித்தது.

அந்தப் பதற்றம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில், தைவான் குறித்துப் பேசிய அவர், ``தைவான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை முறியடித்து, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. இந்தப் பிரச்னையில் சீன அரசு ஒருபோதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயங்காது. தைவானைச் சீனாவுடன் இணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சி எடுத்து, நேர்மையான வழியில் இணைப்பை உறுதி செய்வோம்'' என்று பேசியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது தைவான் அதிபர் மாளிகை. அந்த அறிக்கையில், ``தைவான் தனது இறையாண்மையிலிருந்து பின்வாங்காது. சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்ள முடியாது. தைவான் ஓர் சுதந்திர நாடு. போரைச் சந்திப்பது தைவானின் விருப்பமல்ல. இதுதான் தைவான் மக்களின் ஒருமித்த கருத்து'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், சீனா - தைவான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
ஏற்கெனவே, ரஷ்யா - உக்ரைன் போர் உலகம் நாடுகள் பலவற்றிலும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில், மற்றொரு போரை இந்த உலகம் தாங்காது!


source https://www.vikatan.com/government-and-politics/international/story-about-taiwan-vs-china-crisis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக