1997-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த டைட்டானிக் படத்துக்கு எப்படி இன்றுவரை பலபேர் ரசிகர்களாக இருக்கிறார்களோ, அதைவிடவும் பலமடங்கானவர்கள் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்க்கவேண்டுமென்ற கனவுடன் இன்றும் இருக்கின்றனர். அந்த படத்தில் கூறியவாறே மூழ்கவே மூழ்காது என்று நம்பிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் மூழ்கி, கிட்டத்தட்ட 110 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், மூழ்கிச் சிதைந்த அந்தக் கப்பலை ஒருமுறையாவது பார்க்கவேண்டுமென்ற ஆசை பலருக்கும் இருக்கத்தான் செய்யும்
அப்படி தன்னுடைய சிறுவயதில், மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்க்கவேண்டும் என்று ஆசைவளர்த்துக்கொண்ட ரெனாட்டா(Renata) என்ற பெண், அதற்காக 30 வருடமாக சிறுகச் சிறுக ரூ.2 கோடியைச் சேமித்து, தன் ஆசையைத் தானே நிறைவேற்றிக்கொண்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ரெனாட்டா, இதற்காக 5 பேர் செல்லக்கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கடலுக்கடியில் சிதைந்து கிடந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், இந்தப் பயணத்தில், குழுவிலிருந்த ஒவ்வொருவரும் தலா ரூ.2 கோடியைச் செலவுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், தன்னுடைய ஆசையைத் தானே நிறைவேற்றிக்கொண்டதைப்பற்றி ரெனாட்டா பேசிய விடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் ரெனாட்டா, ``நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, யாரும் அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்கவில்லை. அது எங்கிருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அதனால் முதலில் அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அதற்காக அறிவியல் மற்றும் கடலியல் படிப்புகளை நான் படிக்க வேண்டியிருந்தது. ஆனால், கல்லூரி பயின்ற முதல் வாரத்திலேயே டைட்டானிக் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட என் கனவு நொறுங்கிப்போய்விட்டது. பின்னர் என் வாழ்க்கையை வங்கித் தொழில் பக்கம் மாற்றினேன். கூடவே, சிதைந்த டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான வழியைத் தேடவும் செய்தேன். அதேசமயம் நான் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல. ரொம்ப காலமாகப் பணத்தைச் சேமித்து வருகிறேன். எனக்கென்று சொந்தமாகக் கார் இல்லை. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், இந்த முடிவுகள் எல்லாமே டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் செல்லவேண்டும் என்று விரும்பியதால் எடுக்கப்பட்டன" என்று கூறினார். இவர் பேசிய வீடியோ வரைலாகிவரும் இதேவேளையில், இணையவாசிகள் பலரும் ரெனாட்டாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/international/woman-spends-around-rs2-crore-to-visit-titanic-wreckage-after-saving-up-for-over-30-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக