சேலம், அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ரெட்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் நகர மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பும், அவரின் தம்பி எட்டாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய சகோதரர்கள் இரண்டு பேர் என 5 பேர் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்ப வேண்டிய மாணவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப் போன மாணவர்களின் பெற்றோர்கள் விசாரித்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது காணாமல் போன மாணவர்களில் ஒருவர் தன் பெற்றோருக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு, ``நாங்கள் இனி படிக்க மாட்டோம். எங்களை தேட வேண்டாம், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்னர் அந்த மாணவன் பேசிய நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மேற்கண்ட ஐந்து மாணவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து... எங்கு இருக்கின்றனர்? பள்ளியில் ஆசிரியர்கள் ஏதும் மாணவர்களை திட்டினார்களா? அல்லது ஏதும் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளனாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/police-investigating-the-disappearance-of-students-who-went-to-school-in-salem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக