Ad

வெள்ளி, 14 அக்டோபர், 2022

``உயிரோடு இருக்கும் வரை பாஜக பக்கம் திரும்ப போகமாட்டேன்” - பீகார் முதல்வர் நிதீஷ் குமார்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பாஜகவுடனான உறவை துண்டித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசு அமைத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி சேரும் முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருந்தார். அந்த கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டுத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இப்போது மீண்டும் பாஜகவை கைகழுவிவிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனால் நிதீஷ் குமார் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டது .

பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டணி மாறுவார் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இனி பாஜக பக்கமே போகமாட்டேன் என்று நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பொறியியல் கல்லூரியின் தொடக்க விழாவில் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிதீஷ் குமார், பாஜக-வில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி. முரளி மனோகர் ஜோஷியின் சகாப்தத்தை நினைவு கூர்ந்தார். ``தற்போதைய பாஜக தலைமை ஆணவத்துடன் இருக்கிறது. அவர்கள் லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனால்தான் அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக்கொண்டேன். இப்போது நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அவர்கள் புதிய வழக்கை போட்டுள்ளனர். இதிலிருந்து அவர்களின் செயல்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். நான் வாஜ்பாய் அமைச்சரவையில் எல்.கே.அத்வானியுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது இருக்கும் தலைவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. யாருக்கும் மரியாதையும் கொடுப்பதில்லை. அதனால் நான் உயிரோடு இருக்கும் வரை மீண்டும் அவர்களிடம் செல்லமாட்டேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தற்போது மகாகட்பந்தன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து ஒன்றாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2024-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது புதிய வழக்கு ஒன்றில் சிபிஐ குற்றப்பத்திரிகை தக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/i-will-not-go-back-to-them-till-i-am-alive-says-bihar-chief-minister-nitish-kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக