அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க சார்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக தங்க கவசத்தை வழங்கினார். அதற்கு அ.தி.மு.க பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை பொறுப்பாளராக நியமித்தார். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையின் போது மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் உள்ள தங்ககவசத்தை ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம்மிட்டு பெற்று, அதனை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் வழங்குவார். விழா ஏற்பாட்டாளர்கள் அதனை தேவர் சிலைக்கு அணிவிப்பார்கள்.
நிகழ்ச்சி முடிந்து தங்க கவசம் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படும். அவர் மீண்டும் அதனை வங்கியில் ஒப்படைத்து விடுவார். கடந்தாண்டு வரை இதே நிலை தொடர்ந்த நிலையில், தற்போது இரு அணிகளாக பிரிந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்குள்ளும் தங்க கவசத்தை கைப்பற்றுவதில் 'நீயா நானா' போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் தங்க கவசத்தை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என வங்கிக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளனர்.
தேவர் குருபூஜை விழாவிற்கு இன்னும் 15 நாள்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நேற்று காலை முன்னாள் அமைச்சர்கள் எட்டு பேர் தேவர் நினைவிட பொறுப்பாளர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தங்க கவசத்தைப் பெற அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்று அவர்கள் வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், எம்.பியுமான தர்மர், தேவர் நினைவிடத்திற்குச் சென்று நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார். காலை எடப்பாடி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திச் சென்ற நிலையில், மாலை ஒ.பி.எஸ் ஆதரவாளர் தருமர் பேச்சுவார்த்தை நடத்திச் சென்ற நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது.
இதுகுறித்து தர்மர் எம்.பியிடம் நாம் பேசினோம், ``தேவர் குருபூஜை விழா ஏற்பாடு குறித்து பார்வையிடுவதற்காக வந்தேன். அப்போது நினைவிட பொறுப்பாளர்களிடம் காலை முன்னாள் அமைச்சர்கள் வந்து என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என கேட்டேன். தங்க கவசத்தை பெற தங்களுக்கு ஆதரவளிக்கும்படி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு இது உங்கள் உள் கட்சியை விவகாரம், நாங்கள் நடுநிலையாகத்தான் செயல்படுவோம், வங்கி யாரிடம் ஒப்படைகிறதோ அவர்கள் தங்க கவசத்தை கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் திண்டுக்கல் சீனிவாசன் தங்ககவசத்தை பெற்றுவிட்டது போல் அதனைப் பெற அழைப்பு வந்ததாக சொல்கிறார். எதற்காக இப்படி சொன்னார்கள் என புரியவில்லை. ஓ.பி.எஸ்தான் பொறுப்பாளர். அவர் கையெழுத்திட்டால்தான் வங்கியில் இருந்து அதனை எடுக்க முடியும். தங்க கவசத்தை பெற தகுதியானவர் ஓ.பி.எஸ்தான் என்பது எடப்பாடி அணிக்கே தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/o-panneerselvam-supporter-dharmar-mp-at-devar-memorial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக