தமிழரசி, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.,
``திராவிடம் குறித்து, பாவம் அவருக்கென்ன தெரியும்... இங்கு திராவிடம் என்றால் தமிழ்தான் என்று யாருமே சொல்லவில்லை. எங்கள் முதல்வர், திராவிடம் என்பது ஒரு கருத்தியல் என்பதைத்தான் தொடர்ந்து சொல்லிவருகிறார். திராவிடக் குடும்ப மொழிகளில் பிரதானமான மூத்த மொழி தமிழ் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம். மொழிகளை அழித்து, ஓர் இனத்தின் வரலாற்றை மறைக்க நினைப்பவர்களை எங்களின் சொல்லும் செயலும் எரிச்சலடைய வைக்கத்தான் செய்யும். இந்தியாவில் மொழி, சாதியை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பதை மக்களே நன்கறிவார்கள். கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியைக் கட்டாயமாக்க பா.ஜ.க முயன்றுகொண்டிருக்கிறது. அவர்கள் என்ன முயற்சி செய்தாலும், தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை ஒருபோதும் செய்துவிட முடியாது. தமிழ்நாட்டில் தி.மு.க-வின் ஆட்சி சிறப்பாக நடந்துவருகிறது. இது பிடிக்காமல், இப்படிப் புதிது புதிதாக எதையாவது பேசி, மக்களை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அரசியமைப்புச் சட்டம் ஆளுநருக்குக் கொடுத்திருக்கும் கடமைகள் எவ்வளவோ இருக்க, ஒரு கட்சிக்காரரைப்போல பேசுவதையும், செயல்படுவதையும் நிறுத்திக்கொள்வதே அந்தப் பதவிக்கு அழகு!’’
சி.சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர், பா.ஜ.க
``உண்மைநிலையை அப்படியே பேசியிருக்கிறார் ஆளுநர். நமது தேசியகீதத்தில் திராவிடம் என்பது தென் மாநிலங்களை உள்ளடக்கியது என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் ஒருநாள் தங்களை திராவிடர்கள் என்றும், அடுத்தநாள் தங்களைத் தமிழர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். திராவிடம், திராவிட மாடல் என்று இப்படி மாற்றி மாற்றிப் பேசி மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சில அரசியல் கட்சிகள் மக்களைக் குழப்பி, அரசியல் ஆதாயம் தேட நினைப்பதைத்தான் ஆளுநர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேபோல, தமிழ்நாட்டில் தங்களின் சுயநலத்துக்காகச் சாதிகளின் பெயர்களாலும், மொழிகளை வைத்தும் அரசியல் செய்யும் நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடங்கி, ஒரு தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதுவரை சாதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. திராவிடத்தில் தமிழ் ஓர் அங்கம் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். இந்த உண்மையை அவர் சொன்னதால், சில அரசியல் கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-governor-statement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக