தமிழ் சினிமா ரசிகர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து விட்டார்கள். 'அந்தப் படத்தில் கதை நல்லா இல்லை' என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது. 'திரைக்கதை சொதப்பிட்டாங்க!', 'கதை சூப்பர்... ஸ்கிரீன்ப்ளே அவுட்!' என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டன. ஹாலிவுட்டில் திரைக்கதைக்கென்றே தனி டீம் போட்டு உழைக்கிறார்கள். பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்களில் திரைக்கதைக்கெனத் தனியாக ஆட்கள் வேலை செய்கிறார்கள். தமிழிலும் தற்போது அந்த டிரெண்ட் உருவாகிவருகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். 'கிரியோனி - பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி' என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார்.
ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு மஞ்சள் பச்சை', `கொலை' என்ற இரண்டு படங்களுக்கான திரைக்கதையில் பணிபுரிந்திருக்கிறார்.
தற்போது ஒரே நேரத்தில் தமிழில் ஆறு படங்களுக்கு ஸ்கிரிப்ட் கன்சல்டிங் (Script Consulting) செய்துகொண்டிருக்கிறார். மேலும் பல திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களோடு கதை விவாதங்களில் ஈடுபட்டுள்ளார். பத்து வருட சினிமா அனுபவத்தைக் கொண்டு Creoni’s Story Goal Structure (கிரியோனி - ஸ்டோரி கோல் ஸ்ட்ரக்ச்சர்) என்று திரைக்கதைக்கென ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். அது எளிதாகவும் எல்லா வகை சினிமாவுக்கும் பொருந்தி இருக்கிறது.
உலகில் முதன் முறையாக ஸ்கிரிப்ட்டை மதிப்பீடு (Script Validation) செய்ய 'Creoni - Film & Script Strategy App’ என்ற சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் ஒரு ஸ்கிரிப்ட்டை மதிப்பீடு செய்யவும், தயாரிப்பாளர் தரப்புக்கு தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்தவும், ஹீரோ தனது கேரக்டரை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளவும் முடியும் என்பதால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஆளாக மாறியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன்...
"தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆலோசகர் (Script consultant) என்ற வேலைக்கு இப்போதைய தேவை எந்த அளவுக்கு இருக்கிறது?"
"வருடத்திற்குக் குறைந்தது 200 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகின்றன. அனைவரும் படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் படம் எடுக்கிறார்கள். ஆனால் அதில் பத்தில் இருந்து இருபதுபடங்கள் வரைதான் வெற்றியடைகின்றன. மீதி 90% படங்கள் தோல்வியடைகின்றன. மக்கள் அதற்குக் காரணமாக நடிகர்கள் ஒழுங்காக நடிக்கவில்லையென்றோ, ஒளிப்பதிவு சரியில்லையென்றோ, மியூசிக் சரியில்லையென்றோ கூறுவதில்லை, கதை சரியில்லை என்றோ திரைக்கதை சரியில்லை என்றோதான் கூறுகிறார்கள்.
ஒரு கதையை ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை அறிந்து, அதைச் சரி செய்வதற்கான தேவை, இங்கு அதிகம் உள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் கண்டிப்பாக வெற்றியடைய முடியும், குறைந்தபட்சம் தோல்வியையாவது தவிர்க்கமுடியும். அந்தக் கதையைச் சரிசெய்வதற்கும், அதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வளிப்பதற்குமான நிறுவனமாக நாங்கள் இயங்கி வருகிறோம்!"
"மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. சினிமாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத சூழல் இருக்கும்போது ஒரு ஹிட் சினிமாவை எப்படி உங்களால் கணிக்க முடியும்?"
"காலம் காலமாக மக்கள் கொண்டாடி வெற்றியடையச் செய்த திரைப்படங்களையும், அவர்கள் நிராகரித்துத் தோல்வியடையச் செய்த பல திரைப்படங்களையும், ஏன் வெற்றியடையச் செய்தார்கள், ஏன் தோல்வியடையச் செய்தார்கள் என்பதை நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம்.
எளிமையான கான்செப்ட்டுகளைப் பத்து வருட பல ஆராய்ச்சிகளின் முடிவில் தொகுத்து தியரியாக்கியிருக்கிறோம். அதோடு ஒரு ஃபார்முலா போல உருவாக்கியிருக்கிறோம். எளிமையாக ஆப் மூலம் இந்த ஸ்ட்ரக்ச்சரை உருவாக்கி எல்லோருக்கும் எளிதாகப் புரிய வைக்கிறோம்.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், 'சினிமா பிசினஸ் ஆவதற்கு இங்கு என்ன செய்ய வேண்டும்' என்ற அந்த நுட்பம் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். வருத்தமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இங்கு படமெடுக்கும் பலருக்கு அது தெரியவில்லை. அதனால்தான் வருடத்திற்கு 90% திரைப்படங்கள் தோல்வியடைகின்றன.
வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் (துணிக் கடை, நகைக் கடை, மளிகைக் கடை...) தன்னிடம் பொருள் வாங்க வருபவருக்கு என்ன விற்கிறோம் என்பது விற்பவருக்கு மிக நன்றாகத் தெரியும், ஆனால் சினிமாவைப் பணம் கொடுத்துப் பார்க்கவரும் ஆடியன்ஸுக்கு திரை மூலமாக நாம் எதை விற்கிறோம் என்பது அதை உருவாக்குபவர்களுக்குத் தெரிகிறதா?
உங்களுக்கு மிகவும் பிடித்த பல முறை தியேட்டரிலும், டி.வி-யிலும் பார்த்து ரசித்த திரைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் முறை நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்கும்போது மட்டும்தான் அந்தக் கதையில் சஸ்பென்ஸ் இருக்கும், அதன்பின் அந்தப் படத்தின் கதை உங்களுக்கு நன்றாகத் தெரிந்ததுதான். அப்படி இருந்தும் ஏன் அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பணத்தையும் நேரத்தையும் செலவளித்துப் பார்க்கிறீர்கள். காரணம் அந்தப் படத்தின் மூலம் நமக்குக்கிடைத்த சிறந்த அனுபவம்தான். அந்த அனுபவம் நமக்குப் பிடித்ததனால்தான் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்.
நிஜத்தில் தன்னோடு இருந்த ஒருவரின் இறப்பிற்குக் கலங்காதவர்கள்கூட சினிமாவில் இறக்கும் கதாபாத்திரத்திற்காக அது நடிப்பு என்று தெரிந்தும் கண்கலங்குகிறார்கள்... சோகமடைகிறார்கள். ஏன்?
பல பிரச்னைகள் நம் வாழ்விலிருந்தாலும் அதை அனைத்தையும் மறந்து சில காட்சிகளில் சிரிக்கிறோம் சந்தோஷமடைகிறோம். சில காட்சிகளில் பயப்படுகிறோம், கோபப்படுகிறோம், ஏன் தன்னை மறந்து கத்துகிறோம், கொண்டாடுகிறோம்.
சினிமாவில் திரையின் மூலம் சந்தோஷம், சோகம், துக்கம், பயம், கோபம், வியப்பு, வெறுப்பு என்ற இந்த உணர்வுகளைத்தான் நாம் விற்கிறோம். இந்த உணர்வுகளைச் சிறந்த அனுபவமாகக் கட்டமைக்கும் போது ஒரு வெற்றிப்படத்தை உருவாக்கமுடியும்.
இந்த உணர்வையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துவதற்கான கருவிதான் கதை. ஒரு கதை தட்டையாக இருக்கிறதா, உணர்வுபூர்வமாக இருக்கிறதா, சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்துமா என்பதை ஆராயும்போது, நிச்சயமாக நம்மால் அந்தத் திரைப்படத்தின் வெற்றி தோல்வியைக் கணிக்கமுடியும்!"
விகடன் நடத்தும் 'ஸ்கிரீன்ப்ளே ஒர்க் ஷாப்' ஒன்லைன் தொடங்கி, கதை எப்படி ஹிட் திரைக்கதையாக... லேயர் லேயராக உருமாறுகிறது என்பதை தியரிகளாக யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவின் இளம் திரைக்கதைப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பாலகுமாரன்.
அக்டோபர் 8-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இடம்: ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 2.
பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1
source https://www.vikatan.com/events/announcements/vikatan-screenplay-workshop-a-guide-to-nailing-the-perfect-script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக