தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT - The National Council of Educational Research and Training), 36 மாநிலங்களில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான 3.79 லட்சம் பள்ளி மாணவர்களிடம், அவர்களின் மனநலன் மற்றும் மகிழ்ச்சி பற்றி அறிந்துகொள்ளும்விதமாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
73% மாணவர்கள் தங்களின் பள்ளிச்சூழல் திருப்தியாக இருக்கிறது என்றிருக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை திருப்தியாக உள்ளது என்று 51% மாணவர்கள், அதாவது… சரிபாதி மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 45% மாணவர்களுக்கு அவர்கள் உருவம் பற்றிய திருப்தி இல்லை. 7% மாணவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் உணர்வு பற்றி மனம் திறந்திருக்கிறார்கள். 43% மாணவர்கள் தங்களுக்கு மூட் ஸ்விங்ஸ் உள்ளதாகவும், 29% மாணவர்கள் தங்களுக்கு கவனக்குறைவு உள்ளதாகவும் பகிர்ந்துள்ளனர்.
படிப்பு, தேர்வு, தேர்வு முடிவுகள் எல்லாம் தங்களுக்குக் கடுமையான கவலை தருவதாக 81% மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோவிட் சூழலில் 51% மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பது தங்களுக்கு சிரமாக உள்ளதாகவும், 28% மாணவர்கள் வகுப்பில் கேள்வி கேட்பதில் தங்களுக்குத் தயக்கம் உள்ளதாகவும் தங்கள் மனதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு, குழந்தைகளின் மனநலன் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறது.
வழக்கம்போல இந்த முடிவுகளை எல்லாம் எண்களாகப் பார்க்காமல், நம் பிள்ளைகளின் எண்ணங்களாகப் பார்ப்போம். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உறுதிசெய்ய, பெற்றோர், ஆசிரியர், பள்ளி, அரசு என்று அனைத்துத் தரப்புக்கும் பொறுப்பிருக்கிறது. ஆனால், நடப்பதோ தலைகீழ்.
`உனக்கு என்ன வேண்டும் சொல்...’ என்று பிள்ளைகளுக்குப் பார்த்து பார்த்து வாங்கித் தரும் பெற்றோராக இருக்கிறோம். ஆனால், ‘நீ சந்தோஷமாக இருக்கிறாயா?’ என்று எத்தனை பெற்றோர்கள் இன்று குழந்தைகளுடன் உரையாடல் நடத்துகிறோம்? அதற்கான சூழலை அவர்களுக்கு உருவாக்கி, சரிசெய்து தருகிறோம்?
பல ஆசிரியர்கள், ஈகோவுடன் மாணவர்களை நடத்தும் விதம், தங்களை ரட்சிப்பாளர்கள் போலவும், குழந்தைகளை அடிமைகளாகவும் கையாளும் முறை என இவையெல்லாம் மாணவர்களுக்குக் கற்றல் அனுபவத்தையே கசக்க வைக்கின்றன. புரியாத ஒன்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வெளிகூட இருப்பதில்லை பல வகுப்பறைகளில்.
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துமே அது அதற்கு உண்டான சர்வாதிகார போக்குடன்தான் நடத்துகின்றன மாணவர்களை. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட தாமதமாகும் மாணவர்கள் வகுப்புறைக்கு வெளியே நிறுத்தப்படும் வன்முறைகள் நடக்கின்றன. பள்ளிகள் பிசினஸ் ஆகும்போது வேறு என்ன நடக்கும்?
அரசோ, கல்வியை அரசியலாக்குகிறது. ஒன்றுக்கொன்று முரணுடன் நிற்கும் மத்திய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகள், மொழித்திணிப்பு, ஹிஜாப் உள்ளிட்ட பிரச்னைகள் என, வகுப்பறையில்கூட அரசியல் லாபம் பார்க்கின்றன ஆளும்கட்சிகள்.
இப்படி, எல்லா தரப்புமே சரியில்லாத சூழலில், அவர்களின் தவறான அணுகுமுறை, செயல்பாடுகள், திட்டங்களின் விளைவுகள் எல்லாம் மாணவர்களை சூழ்ந்துகொள்கின்றன; அவர்களின் மனநலனும் மகிழ்ச்சியும் சுருங்கிப்போகின்றன தோழிகளே. அந்த சின்னஞ்சிறு மனிதர்களின் உலகில் கவனம் கொள்வோம்.
உரிமையுடன்
ஸ்ரீ
ஆசிரியர்
source https://www.vikatan.com/news/editorial/namakkulle-editorial-page-9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக