Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ராமநாதபுரம்: ஹிஜாப் தொடர்பாக தலைமை ஆசிரியை, மாணவியின் தாய் பேசும் வீடியோ; சர்ச்சை - நடந்தது என்ன?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக சாதி, மதம் பாகுபாடு தொடர்பாக வெளியாகும் அதிர்ச்சிக்குரிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரும் அளவில் சர்ச்சைகளாக வெடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் கடைக்கு மிட்டாய் வாங்க சென்ற பள்ளி சிறுவர்களுக்கு தீண்டாமை கொடுமை ஏற்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தற்போது ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பான வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இப்பகுதியில் கடந்த வாரம், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். அந்த மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் தாய் ஹிஜாப் அணிவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பேசுவதை அவருக்கே தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட நகல்

அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியின் தாயிடம், ``பள்ளிக்கு வரும்போது பள்ளிக்குள் சால் (ஹிஜாப்) அணிந்து வரக்கூடாது அனைத்து மாணவிகளுக்கும் ஒரே ரூல்ஸ் தான். நான் அட்மிஷன் போடும்போதே பள்ளிக்குள் சால் அணிய அனுமதி இல்லை என கூறினோம், இப்போது வந்து சால் அணிந்து தான் வருவேன் என்றால் என்ன செய்வது. இங்கு எல்லா மாணவிகளுக்கும் ஒரே ரூல்ஸ் தான். உங்கள் ஒரு மாணவிக்காக அதனை மாற்ற முடியாது” என்கிறார். அதற்கு அந்த மாணவியின் தாய், ``எங்கள் ஜமாத் பெரியவர்களிடம் ஹிஜாப் அணிந்துவர தடை இல்லை என நீங்கள் சொன்னதாக தெரிவித்தார்கள். அரசு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என சட்டம் இயற்றவில்லையே‌” எனக் கூறியதும், அதற்கு தலைமை ஆசிரியை, ``இல்லை அரசு ரூல்ஸ் போட்டு இருக்கிறது” என தெரிவித்தவுடன், ``அப்படி ரூல்ஸ் போடவில்லை என நிரூபித்தால் அனுமதிப்பீர்களா?” என மாணவியின் தாய் கேள்வி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு மாணவிகள் வருவது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பு சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து கல்வி பயில தடை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை” என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அடங்கிய நகலுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்துமிடம் பேசினோம், "இந்த வீடியோ விவகாரம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டோம். இது கடந்த வாரம் மாணவியின் தாய் தன்னிடம் வந்து பேசும்போது எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளதாக தலைமை ஆசிரியை கூறினார். எனவே பள்ளி மேலாண்மை குழுவை கூட்டி ஜமாத்தார்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டு அவர்கள் முடிவுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளோம். நாங்கள் நான்கு பள்ளிகளை விசாரித்தோம் அதில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து, பள்ளி நுழைவாயில் வரை வருவார்கள், பள்ளிக்குள் நுழையும் போது அதனை கழற்றி தங்களுடைய பேக்கில் வைத்துக் கொண்டு மீண்டும் மாலை வீட்டிற்கு செல்லும் போது மாட்டிக் கொள்வார்கள். ஒரு சிலர் மட்டும் ஹிஜாப் அணிந்தபடியே வகுப்புகளுக்கு வருவார்கள். நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதேதான் இந்த தலைமை ஆசிரியையிடமும் , ஹிஜாப் அணிந்து வந்தாலும் சரி, அணியாமல் வந்தாலும் சரி அதைப் பற்றி நீங்கள் வாய் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/the-matter-of-the-schoolgirl-wearing-hijab-in-ramanathapuram-government-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக