கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றியாடி அருகே உள்ள வேளம் பகுதியைச் சேர்ந்த தேவானந்த்(16). 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனான தேவானந்த் நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் வீடு முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினான். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் முதல்வர் பினராயி விஜயனை பார்க்க வேண்டும் என கூறியுளார். எதற்காக முதல்வரை பார்க்க வேண்டும் என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு தனது தந்தை பெயர் ராஜூ. அவர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றிருந்தார்.. மாத தவணை கட்ட தவறியதால் அந்த நிதி நிறுவனம் கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், அதனால் தினமும் வீட்டில் பெற்றோர் கண்ணீர் வடிப்பதாகவும், அதனால் தனக்கு நிம்மதி இல்லாமலும் உள்ளதாக மாணவன் தேவானந்த் தெரிவித்துள்ளான்.
மேலும், வீட்டினருக்கு தெரியாமல் முதல்வர் பினராயி விஜயனிடம் உதவி கேட்க வந்துள்ளதாக மாணவன் கூறியுள்ளான். வங்கியின் கடன் தவணை செலுத்தாததால் தனது வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த வாரம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. எனவே மாணவன் தேவானந்தை மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து விசாரித்தனர் போலீஸார்.
பின்னர் மாணவனின் தந்தைக்கு தகவல் கொடுத்து நேற்று காலை அவரை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்தனர். இதற்கிடையே முதல்வரை பார்க்க வேண்டும் என கோழிக்கோட்டில் இருந்து மாணவன் ஒருவன் திருவனந்தபுரத்துக்கு வந்த தகவல் பினராயி விஜயனுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவனை பார்க்க முதல்வர் நேரம் ஒதுக்கினார். நேற்று தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் அந்த மாணவனை பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.
அப்போது மைக்ரோ பைனான்ஸ் ஒன்றில் தனது தந்தை கடன் வாங்கியது குறித்தும், கடனை செலுத்தாததால் நெருக்கடி கொடுப்பதால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி போய்விட்டததாகவும், அதனால் பெற்றோருக்கு தெரியாமல் தீர்வு தேடி முதல்வரை காண வந்ததாகவும் தேவானந்த் தெரிவித்தார். கடனை அடைப்பதற்கு வழிகாணலாம் எனக் கூறிய முதல்வர் பினராயி விஜயன், "பெற்றோருக்கு தெரியாமல் இனி வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது" என அறிவுரை கூறினார். மாணவனும் இனி அப்படி செய்யமாட்டேன் என உறுதியளித்தார். பின்னர் தேவானந்த் மற்றும் அவரின் தந்தை ராஜூ ஆயோரை போலீஸார் ரயில் நிலையம் வரை அழைத்துச்சென்று கோழிக்கோட்டுக்கு வழியனுப்பிவைத்தனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/student-same-to-meet-cm-pinarayi-he-advised
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக