நிதி நிறுவனங்களில் லோன் வாங்கிவிட்டு அதனைத் திரும்பிச் செலுத்தமுடியாத இக்கட்டான சூழலில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் நிதி நிறுவன அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நாமும் அவ்வப்போது பார்த்துதான் வருகிறோம். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு விவசாயியின் டிராக்டரை மீட்கச் சென்ற நிதி நிறுவன அதிகாரிகள், 3 மாத கர்ப்பிணிப் பெண்ணை டிராக்டர் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், மஹிந்திரா நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், ஜார்கண்ட்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வீட்டுக்கு டிராக்டரை மீட்கச் சென்றிருக்கின்றனர். அப்போது அதிகாரிகளால் கடும் வாக்குவாதம் ஏற்பட 3 மாத கர்ப்பிணி ஒருவர் டிராக்டர் முன் நின்று டிராக்டரை மறித்திருக்கிறார். இதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் ட்ராக்டரை இயக்க அந்த பெண், ட்ராக்டரின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்த உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், நிதி நிறுவன அதிகாரிகள் தங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்ததாகவும், வாக்குவாதத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் மீது ட்ராக்டரை ஏற்றியதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி அதிகாரி, மீட்பு முகவர், தனியார் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது கொலை குற்றத்துக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் இதுபற்றி வருத்தம் தெரிவித்த மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா, ``ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்திருக்கிறோம். மேலும், தற்போதுள்ள மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் ஆய்வு செய்வோம். அதோடு, வழக்கின் விசாரணைக்கு நாங்கள் முழு ஆதரவளிப்போம்" எனக் கூறியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/india/in-jharkhand-pregnant-woman-crushed-and-dead-under-tractor-by-loan-recovery-agent
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக