Ad

திங்கள், 12 செப்டம்பர், 2022

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 47 - பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் ஃபேஷனை பின்பற்றுவதா, டிரெண்ட் பழையது என்றாலும் பிடித்த கிளாஸிக் லுக்கை தேர்வு செய்வதா... உங்கள் விருப்பம் என்ன?'' - ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

விடை என்ன?

ஊர் பெயர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய கேள்விகளுக்கான விடைகள் கட்டங்களில் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒளிந்திருக்கின்றன. சரியான பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.

1. கண்ணகி எரித்த ஊர். உலகம் முழுவதும் மணம் பரப்பும் ஊர். ராணி மங்கம்மா ஆண்ட ஊர். தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற ஊர். அது எந்த ஊர்?

2. நெல் விளைச்சலுக்குப் பெயர் பெற்ற ஊர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் கொண்ட ஊர். தமிழுக்குப் பல்கலைக்கழகம் இருக்கும் ஊர். அது எந்த ஊர்?

3. நெல்வேலி நாதர் குடியிருக்கும் ஊர். இனிப்புக்கு உலகப் புகழ்பெற்ற ஊர். தாமிரபரணி செழிக்க வைக்கும் ஊர். அது எந்த ஊர்?

4. பட்டுக்குப் புகழ்பெற்ற ஊர். முன்னாள் முதல்வர் ஒருவர் பிறந்த ஊர். காமாட்சி குடியிருக்கும் ஊர். இந்த ஊர் பெயரில் இருக்கும் இட்லி மிகவும் விசேஷமானது. அது எந்த ஊர்?

5. கண்டாங்கி சேலைக்குப் புகழ் பெற்ற ஊர். அழகப்பா பல்கலைக்கழகம் இருக்கும் ஊர். பல காரங்களின் ருசிக்கு ஈடு இணையில்லா ஊர். அது எந்த ஊர்?

6. முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த ஊர். தீவில் இருக்கும் ஊர். பாலத்துக்குப் புகழ்பெற்ற ஊர். இந்தியாவின் கடைக்கோடி ஊர். அது எந்த ஊர்?

7. நாட்டிய நகரம் என்று அழைக்கப்படும் ஊர். திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் என்ற பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு. நடராஜர் குடியிருக்கும் ஊர். அது எந்த ஊர்?

8. ஆண்டாள் குடியிருக்கும் ஊர். திருப்பாவை அருளிய ஊர். பென்னிங்டன் நூலகம் உள்ள ஊர். பால்கோவாவுக்குப் புகழ்பெற்ற ஊர். அது எந்த ஊர்?

9. கொடி காத்த குமரன் உயிர் துறந்த ஊர். `டாலர் சிட்டி' என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. பிற மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ஊர். அது எந்த ஊர்?

10. திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி கோட்டை உள்ள ஊர். பூட்டுக்குப் புகழ் பெற்ற ஊர். அது எந்த ஊர்?

புதிர்ப்போட்டி-45 விடைகள்...

1. அருணா ஆசப் அலி

2. சரோஜினி

3. விஜயலஷ்மி பண்டிட்

4. லஷ்மி ஷேகல்

5. இந்திரா காந்தி

6. பிரதீபா பாட்டீல்

7. அஞ்சலை அம்மாள்

8. மணலூர் மணியம்மாள்

9. முத்துலஷ்மி

10. கல்பனா சாவ்லா

11. தெரசா

12. பச்சேந்திரி பால்

13. அருந்ததி ராய்

14. கர்ணம் மல்லேஸ்வரி

15. எம்.எஸ். சுப்புலஷ்மி

சரியான விடையுடன்... ‘அகலக்கால் வைக்காதே’ என் பார்கள். ஆனால், அதைப் பலரும் மதிப்பதே இல்லை. நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால், அதனால் வந்த எதிர் விளைவுகள்? - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. சரஸ்வதி பத்மநாபன், சென்னை-51: கடன் வாங்கி புது வீடு கட்டத் தொடங்கியபோது மூத்தவனுக்கு ஒரு தளமும், இளையவனுக்கு ஒரு தளமும் என்று அகலக்கால் வைத்ததன் விளைவு... ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை கடனுக்காக விற்க நேர்ந்தது. பழைய வீடாக இருந்திருந்தால்கூட பத்திர மாக இருந்திருக்கும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

2. ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி: பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கிறார்களே என்று நானும் என் இரு பிள்ளைகளையும் சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்தேன். முதலில் கட்ட வேண்டிய பள்ளிக் கட்டணத்தை, கடன் வாங்கி தான் கட்டினேன். அந்த ஆண்டு படிப்பு முடிந்த பிறகும் கடனை அடைக்க முடியாமல் போகவே, இப்போது என் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்ததன் விளைவுதான் இது.

3. த.அனுஷா, சென்னை-15: என்னால் இரண்டு இடங்களில் வேலை பார்க்க முடியாது என்பது தெரிந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு வேலைகளையும் செய்தேன். அதனால் என் உடல் பலவீனமாகி மருத்துவச் செலவு அதிகரித்தது. ஒரே வேலையைச் செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது.

4. பி.ஆனந்தி, சேலம்-3: முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்த நான், ஒரே நேரத்தில் பி.எட் மற்றும் எம்.பில் படிப்பில் சேர்ந்தேன். கடைசியில் என்னால் எதையும் முடிக்க முடியாமல் பிறகு டிஸ்கன்டினியூ செய்தேன். இப்போது பணமும் போச்சு, வருஷங்களும் போச்சு.

5. மீனலோசனி பட்டாபிராமன், சென்னை-92: பணி ஓய்வு பெறும்போது ‘இப்போதான் நமக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு’ என்ற எண்ணத்தில் என்ன, ஏது என்று யோசிக்காமல் நிறைய வகுப்புகளில் சேரவும், நிறைய டூர் போகவும் பணம் கட்டினேன். அலைச்சலால் உடல்நலம் பாதித்தது. சிறு வயதுபோல் புது விஷயங்களை கிரகிக்க சிரமப்பட்டேன். அதனால் வருத்தமும் தாழ்வுமனப்பான்மையும் ஏற்பட்டதுதான் மிச்சம். பின்னர் மிகவும் பிடித்த ஒன்றிரண்டு வகுப்பு தவிர மீதியை நிறுத்திய பிறகுதான் நிம்மதி கிடைத்தது.

6. ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி: நாங்கள் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறோம். நல்ல வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. எங்கள் கடைக்கு அடுத்ததாக ஒரு கடை காலியாக இருக்கவே, அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் கவரிங் கடை ஆரம்பித்தோம். கடன் வாங்கியும் மளிகைக்கடை பணத்தை வைத்தும் கவரிங் கடைக்காக செய்த முதலீடு அனைத்தும் வியாபாரம் ஆகாமல் முடங்கியதால், கடனையும் அடைக்க முடியாமல் மளிகைக் கடையையும் நடத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

7. கே.விஷ்மிதா, திருநின்றவூர்: எங்கள் வீட்டில் ‘பைக்’ இருந்தும் நான் பிடிவாதமாக பேங்கில் லோன் பெற்று, வெட்டி பந்தாவுக்காக கார் வாங்கினேன். காருக்கு பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகவில்லை. காரை சரியாகப் பராமரிக்கவும் முடிய வில்லை. பிறகு சில லட்சங்கள் குறைத்து அடிமாட்டு விலைக்கு விற்றேன். பணம், நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போனது.

8. டி.உமாதேவி, கோயம்புத்தூர்-12: பொதுவாக நான் அகலக்கால் வைப்பதில்லை. ஆனால், கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்று பலரும் கூறியதைக் கேட்டு, நிறைய மளிகை சாமான்கள் வாங்கி வைத்தேன். கடைசியில் அனைத்தும் கெட்டுப்போனதால் தூக்கி எறிந்தேன்.

9. சாந்தி சுந்தர், ஊரப்பாக்கம்: ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் வங்கிகளிலேயே வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்தான் வட்டி கிடைக்கும். ஒரு லட்சத்துக்கு மாதத்துக்கு பதினைந்தாயிரம் வட்டி தருவார்கள் என்று கூறியதை நம்பி, ஒரு லட்சம் டெபாசிட்டில் சேர்ந்தேன். மூன்று மாதங்கள் வட்டியை ஒழுங்காகத் தந்தனர். நான்காவது மாதம் பார்ட்டி எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. அகலக்கால் வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்தேன்.

10. என்.மாலதி, சென்னை-87: தந்தை இல்லாத நாத்தனார் கல்யாணத்தை சகோதரர்கள் ஆறு பேரும் பணம் போட்டு மிகச் சிறப்பாக நடத்த எண்ணி பெரிய இடமாக நிச்சயித்தோம். பின்னர், அனைவரும் கைவிட நாங்கள் மிகவும் சிரமப்பட்டு நடத்தினோம். அகலக்கால் வைத்துவிட்டோமோ என இன்று வரை வருந்துகிறோம்.



source https://www.vikatan.com/news/general-news/puthirpotti-47

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக