உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் மாநில அமைச்சர் அஜய் குமார் மகன் அசிஷ் மிஸ்ரா கார் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தமோலியாபுர்வா என்ற கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் பட்டியலின சகோதரிகள் இரண்டு பேர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது துப்பட்டாவில் தூக்கில் மாட்டி தொங்கி இருந்தனர்.
இரண்டு பேரையும் யாரோ சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக இரு சகோதரிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு பேரும் மைனர் ஆவர். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என்று கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறி கலைந்து போகச்செய்தனர். மூன்று பேர் சேர்ந்து சிறுமிகளை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. போலீஸார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரி லட்சுமி சிங் இது குறித்து கூறுகையில், ``இரு மைனர் சிறுமிகள் தங்களது துப்பட்டாவில் தூக்கு மாட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெற்றோர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ``யோகி ஆதித்யநாத் அரசும், குண்டர்களும் தினம் தினம் சகோதரிகளையும், தாய்மார்களையும் துன்புறுத்துகின்றனர். இரு சிறுமிகளை கடத்தி கொலை செய்தவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து இறந்துள்ள இரண்டு சகோதரிகளும் பட்டப்பகலில் கடத்திச்செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தினம் தினம் பேப்பர்களில் விளம்பரம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு சரியாகிவிடாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டும் 19 வயது பட்டியலின சிறுமி மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் வீட்டிற்கு பிரியங்கா காந்தி சென்ற போது அவரையும் போலீஸார் கைது செய்தனர். செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த விவகாரம் குறித்து பிரியங்கா காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இரு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பகல் வேளையில் சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். வெறுமனே தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் பொய் விளம்பரம் செய்வதால் சட்ட ஒழுங்கு சீராகாது. எல்லாவற்றுக்கும் மேலாக, உ.பியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகிறது?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
source https://www.vikatan.com/news/india/two-dalit-sisters-hanged-in-uttar-pradesh-opposition-attacks-yogi-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக