`ஒரு பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, அதைத் தீர்ப்பதுதான்.’ - டாக்டர் ராபர்ட் அந்தோணி, அமெரிக்க எழுத்தாளர்.
அது, பிரிட்டிஷார் இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலம். மும்பை. 'வாட்சன்’ஸ் ஹோட்டல் (இப்போது எஸ்பிளானேடு மேன்ஷன்). ஜாம்ஷெட்ஜி, தன் ஐரோப்பிய நண்பர் ஒருவருடன் அந்த ஹோட்டலுக்குள் நுழைய காலடி எடுத்துவைத்தார். வாசலில் இருந்த காவலாளி அவரைத் தடுத்தான்.
ஜாம்ஷெட்ஜி, என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தார்.
அவன் அங்கிருந்த ஒரு போர்டைக் காட்டினான். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது... `ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி. இந்தியர்களுக்கு அனுமதி இல்லை.’ கொதித்துப்போனார் ஜாம்ஷெட்ஜி.
``இது என்ன பிரமாதமான ஹோட்டல்... இதைவிட பிரமாண்டமாக, இதே பம்பாயில் ஒரு ஹோட்டலைக் கட்டுகிறேன் பாருங்கள்..." என்று நண்பரிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
சவால்விடுவது பெரிய காரியமில்லை. அது நிறைவேற்றப்படும்போதுதான் முழுமையடைகிறது, வெற்றி என அடையாளப்படுத்தப்படுகிறது. தான் சொன்னபடியே `தாஜ் மஹால் பேலஸ்’ என்ற பிரமாண்டமான ஒரு ஹோட்டலைக் கட்டினார். 1903, டிசம்பர் 3-ம் தேதியன்று அதைத் திறந்தும் வைத்தார் ஜாம்ஷெட்ஜி. அது, `தாஜ் ஹோட்டல்ஸ்’ என்ற பெயருடன் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. `ஜாம்ஷெட்ஜி நஸ்ஸர்வான்ஜி டாடா’தான் இன்றைய பிரபல டாடா குழுமத்தின் நிறுவனர். `ஜே.என்.டாடா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.
`இந்தக் குழுமம் கால் பதிக்காத துறையே இல்லை’ எனும் அளவுக்கு இன்றைக்கு டாடாவுக்குப் பல நிறுவனங்கள். `டி.சி.எஸ்’, `டாடா எல்க்ஸி’, `டாடா ஸ்டீல்’, `டாடா பவர்’, `டாடா மோட்டார்ஸ்’, `டாடா கெமிக்கல்ஸ்’... ஏன் டீயைக்கூட விட்டுவைக்கவில்லை டாடா. வெளிநாட்டிலும் இந்த நிறுவனங்களுக்குக் கிளைகள் உண்டு.
ஒரு தொழிலைத் தொடங்குவது பெரிய விஷயமில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளைத் தாண்டியும் விரிவுபடுத்தி, தொழிலை வெற்றிகரமாக நடத்துவதுதான் சாதனை.
`டாடா குழுமத்துக்கு சறுக்கலே இல்லையா?’ உண்டு. எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டது. அவற்றிலிருந்து சமாளித்து எழுந்தது. இன்றைக்கும் `டாடா’ என்கிற தனி அடையாளம் உலகமெங்கும் தெரிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.என்.டாடா, ஜே.ஆர்.டி.டாடா, ரத்தன் டாடா.
உதாரணமாக ரத்தன் டாடாவின் ஓர் அணுகுமுறையைப் பார்க்கலாம். நிறுவனத்தில் சிக்கல்களும் பிரச்னைகளும் எழும்போதெல்லாம் அவற்றைத் தீர்த்ததோடு, அவற்றின் ஆணிவேரைக் கண்டு களையெடுத்தவர் ரத்தன் டாடா. 1988-ம் ஆண்டின் இறுதியில் `TELCO (Tata Engineering and Locomotive Company Limited' (இன்றைய டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் தலைவர் பதவி அவரைத் தேடிவந்தது. பதவிக்குப் பின்னாலேயே பிரச்னையும் ஓடி வந்தது. பூனாவில், பிம்ப்ரியில் இருக்கும் தொழிற்சாலையில் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தார் ரத்தன் டாடா. உண்மையில் ஊதியம் பிரச்னை இல்லை என்று தெரிந்தது. எல்லோரும் பிரச்னைக்குக் காரணம் என்று ஒரு நபரைக் கட்டம்கட்டிக் காட்டினார்கள். அவர் பெயர், கிருஷ்ணன் புஷ்பராஜன் நாயர். சுருக்கமாக, `ராஜன் நாயர்.’ `டி.கே.எஸ் - டெல்கோ காம்கர் சங்கடனா’ என்ற தொழிற்சங்கத்தின் தலைவர். இத்தனைக்கும் ராஜன் நாயர் டெல்கோ நிறுவனத்தில் அப்போது வேலையில் இல்லை. செக்யூரிட்டி ஒருவரைக் கொடூரமாகத் தாக்கியதாக ஒரு கிரிமினல் குற்றம் அவர்மீது சுமத்தப்பட்டது. அது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரை தொழிற்சாலை நிர்வாகம் வேலையைவிட்டு அனுப்பியிருந்தது. `என்னையா வெளியேத்துறீங்க... இந்த ஃபேக்டரியையே இழுத்து மூடவெக்கிறேன் பாரு...’ என்று சவால்விட்டிருந்தாராம் ராஜன் நாயர்.
தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைத்தது. தொழிலாளர்களின் பிரதிநிதியாக ராஜன் நாயர் வந்து உட்கார்ந்தார். நிர்வாகம் அவருடன் பேச மறுத்தது. ``என்னைத் தவிர வேறு யாரும் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டார்கள். வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான்தான் தொழிலாளர்களின் தலைவன்’’ என்றார் ராஜன் நாயர். தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. தொழிற்சாலை ஆளரவமின்றி, இயக்கமின்றி, முடங்கிப்போய்க் கிடந்தது. உற்பத்தி இல்லை; ஏற்கெனவே விற்பனையில் ஊசலாட்டம்; இப்போது விற்பனக்கே வழியில்லை. ரத்தன் டாடா யோசிக்க ஆரம்பித்தார்.
1989, மார்ச் 15. உச்சகட்டமாக, பூனாவின் பல இடங்களில் ராஜன் நாயரின் ஆட்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். தொழிற்சாலை நிர்வாகத்தைச் சேர்ந்த 22 பேர் ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். ``பேசாமல் ராஜன் நாயரின் கோரிக்கைக்குப் பணிந்துவிடுங்கள்’’ என்று எல்லோரும் ரத்தன் டாடாவிடம் சொன்னார்கள். ஆனால், ரத்தன் டாடாவுக்கு அது சரியாகப்படவில்லை. `இப்போது விட்டுக்கொடுத்துவிடலாம். இன்னும் சில நாள்கள் கழித்து ராஜன் நாயர் வேறொரு கோரிக்கையுடன் கொடிபிடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்... அதோடு ராஜன் நாயரைப்போல் வேறொருவரும் உருவாக மாட்டார் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை".
``நாம் எந்தத் தவறும் செய்யவில்லை. ராஜன் நாயரின் மிரட்டலுக்கெல்லாம் பணிய முடியாது’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் ரத்தன் டாடா.
மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையின் தீவிரத்தை ரத்தன் டாடாவும், பிற நிர்வாகிகளும் எடுத்துச் சொன்னார்கள். தொழிற்சாலையில் இருந்த மற்றொரு தொழிற்சங்கமான `டெல்கோ எம்ப்ளாயீஸ் யூனியன்’ சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். உடனடியாக அந்தச் சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வை அறிவித்தார் ரத்தன் டாடா. பிறகு அத்தனை தொழிலாளர்களுக்கும் தனித்தனியாக ஒரு கடிதம் அனுப்பினார் ரத்தன் டாடா. `தொழிற்சாலையின் நிலையை நீங்கள் அறிவீர்கள். சம்பள உயர்வு கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், தொடர்ந்து பிரச்னை செய்தால் பூனாவில் இந்தத் தொழிற்சாலையை நடத்த வேண்டுமா என்று யோசிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்...’ என விரிவாகப் பேசிய அந்தக் கடிதம் தொழிலாளர்களின் மனதை மாற்றியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பத் தயாரானார்கள்.
ராஜன் நாயர் வேறொரு போராட்டத்தைக் கையில் எடுத்தார். 3,000 ஊழியர்களுடன் `சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிற போராட்டம். பூனாவே பதற்றத்தில் ஆழ்ந்தது. மகாராஷ்டிர அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்னை வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அப்போதும் ராஜன் நாயர் பிடிகொடுக்கவில்லை. தன் ஆதரவாளர்களைக்கொண்டு தொடர்ந்து டாடா நிர்வாகத்துக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருவழியாக, 1989, செப்டம்பர் 29 அன்று ராஜன் நாயரும் அவருடன் இருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். பிரச்னை தீர்ந்தது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப, தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.
வேலை நிறுத்தம் முடிந்ததும் அப்படியே இருந்துவிடவில்லை ரத்தன் டாடா. டெல்கோ நிறுவன ஊழியர்களுக்கு உண்மையில் என்ன பிரச்னை என்று அலசி, ஆராய்ந்தார். அதற்காகப் பலரையும் களத்தில் இறக்கினார். தொழிலாளர்களுக்கு ஊதியம் தொடர்பான பிரச்னை இருக்கத்தான் செய்தது. அதோடு பணிச்சூழலிலும் குறைகள் இருந்தன; அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கவில்லை. காரணம், தொழிலாளர்களின் குரலைக் காதுகொடுத்துக் கேட்க நிர்வாகத்தில் யாரும் இல்லை. எல்லாவற்றையும் சரிசெய்தார் ரத்தன் டாடா. தொழிலாளர் நலனுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தார். தொழிலாளி - நிர்வாகம் இரண்டுக்குமான இடைவெளியைக் குறைத்தார். ஒரு தொழிலாளி, `இது என் நிறுவனம்’ என்கிற மனநிலையோடு, நல்லவிதமாகப் பணியாற்றும் சூழலை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் `ரத்தன் டாடா’ என்கிற நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன்.
பிரச்னைகளையெல்லாம் தீர்த்த பிறகு ரத்தன் டாடா இப்படிச் சொன்னார்... ``பல ஆண்டுகளாக, எங்கள் தொழிற்சாலையில் எல்லாம் சரியாக இருக்கின்றன என்கிற கற்பனை மயக்கத்தில் இருந்தோம்; அதனால் நாங்கள் ஏமாந்துவிட்டோம்.’’
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/motivation-from-the-life-of-rathan-tata
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக