Ad

வியாழன், 22 செப்டம்பர், 2022

``மத்திய அரசின் காதுகளுக்கு அம்பானி, அதானி கோரிக்கைகள் மட்டுமே கேட்கிறது" - சு.வெங்கடேசன் எம்.பி.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும், அச்சுத்தொழிலும் பிரதானமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் தொழில் நகரத்தில் முன்னணியில் உள்ள சிவகாசியில் மக்கள் அடர்த்தியும் அதிகம். எனவே, இங்குள்ளவர்கள் வேலைக் காரணமாகவும், தொழில் ரீதியாகவும் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தை சார்ந்தே இயங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முன்னர், தென்காசி, சிவகாசி, மதுரை வழித்தடத்தில் கொல்லம்-சென்னை, சென்னை-கொல்லம் இடையே விரைவு ரெயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.

போராட்டம்

அதுவரையில், வியாபாரத்திற்காகவும் போக்குவரத்திற்காகவும் பொதிகை அதிவிரைவு ரயிலை மட்டுமே நம்பியிருந்தவர்கள் கொல்லம்-சென்னை விரைவு ரயிலை பயன்படுத்த தொடங்கினர். கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்வது போல, மறுமார்க்கத்தில் கொல்லம் நோக்கி நள்ளிரவு நேரத்தில் சிவகாசிக்கு வரும் ரயிலும் நின்று சென்றது. இதனால் வியாபார ரீதியாகவும் சிவகாசியை சேர்ந்தவர்கள் கேரள மாநிலத்துக்கு கொல்லம் விரைவு ரெயிலில் சரக்குகளை அனுப்பிவந்தனர். ஆனால், கொரோனாவுக்கு பின் ரயில்சேவையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கான சிவகாசி நிறுத்தம் பறிக்கப்பட்டது. இதனால் சிவகாசியை சேர்ந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கைது

சென்னையிலிருந்து சிவகாசி வரும் பயணிகள் நள்ளிரவில் விருதுநகர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, சிவகாசியிலிருந்து கேரளா மாநிலம் செல்லவேண்டிய பல லட்சக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளையும் ரெயில் மூலமாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில் பயணிகள்‌ நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்வதை ரத்து செய்து வெளியிட்ட அறிவிப்பை தென்னக ரெயில்வே திரும்ப பெறவேண்டும். மீண்டும் பழையப்படியே சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்‌. இதுதொடர்பாக விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், மத்திய ரயில்வேத்துறை அமைச்சரிடமும், மக்களவையிலும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை அதற்கு, மத்திய அரசு எந்த பதிலும் தராததால், அனைத்துக்கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 22-ந்தேதி சிவகாசியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாணிக்கம் தாக்கூர் எம்.பி.அறிக்கை வெளியிட்டார். அதன்படி, சிவகாசியில் ரெயில் போராட்டம் நடைபெற்றது. இதில் சு.வெங்கடேசன் எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக்கட்சியினர், வியாபார அமைப்புகள், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே நடந்து வந்த போராட்டக்காரர்கள் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, அனுமதியின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணிக்கம் தாக்கூர் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உள்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., "கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்ற தயாராக இல்லை. அவர்களை பொறுத்தமட்டில் ரயில் நிலையம், ரெயில் என எல்லாவற்றையும் கூட தனியாருக்கு எழுதிக் கொடுத்து விடுவார்கள். ஆனால் ரயில் நிலையத்தில் வண்டி நின்று செல்ல அனுமதிக்கேட்டால் மட்டும் செய்யமாட்டார்கள். மத்திய அரசின் காதுகளுக்கு கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானியின் கோரிக்கைகள் மட்டும்தான் கேட்கும். அதை நிறைவேற்றுவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. சாதாரண மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sivakasi-rail-seige-protest-arrest-suvengadesan-mp-pressbyte

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக