Ad

புதன், 28 செப்டம்பர், 2022

நேரு குடும்ப விசுவாசியான அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது ஏன்?!

ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சிப்பூசலால், அந்த மாநில அரசியலில் பெருங் குழப்பம் நீடித்துவருகிறது. அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் மோதலை சரிக்கட்ட முடியாமல் தவித்துவருகிறது கட்சித் தலைமை. இந்த நிலையில், நேரு குடும்பத்தின் நீண்டகால விசுவாசியான அசோக் கெலாட், தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன செய்கிறார் அசோக் கெலாட்? - பார்ப்போம்!

கெலாட், பைலட் மோதிக்கொள்வது ஏன்?

தற்போது ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்து கிடப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. 2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவதற்காகக் களத்தில் இறங்கி பல்வேறு பணிகளைச் செய்தார் சச்சின் பைலட். வெற்றிக்குப் பிறகு, சீனியர் என்ற அடிப்படையில் அசோக் கெலாட்டை முதல்வராக்கினார் சோனியா. இது சச்சின் பைலட்டை வருத்தமடையச் செய்தது. தொடர்ந்து, ராஜஸ்தானின் துணை முதல்வர் பதவியேற்ற சச்சின் பைலட், கெலாட் அரசுமீது வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். எனவே, இரு தரப்புக்கும் இடையேயான மோதல் அடுத்தகட்டத்துக்குச் சென்றது. இந்தச் சிக்கலைச் சரி செய்ய நடத்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை, சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்தனர். இதனால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் உருவானது.

சச்சின் பைலட், அசோக் கெலாட்

`பா.ஜ.க-வுடன் இணைந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார் சச்சின் பைலட்' என கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கொந்தளித்தனர். உடனடியாக கட்சித் தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகமாக பிரச்னையை முடித்துவைத்தது. சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து சாந்தமானார் கெலாட். இந்த நிலையில், தற்போது மீண்டும் இரு தரப்புக்குமிடையேயான மோதல் பெரிதாகியிருக்கிறது.

மீண்டும் மோதல் வெடித்தது ஏன்?

`ராகுல் காந்திதான் கட்சியின் தலைவராக வேண்டும்' என்று தொடர்ந்து முழங்கிவந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை, ஒரு வழியாகப் பேசிச் சரி செய்து காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தினார் சோனியா காந்தி. இதையடுத்து, தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் அவர். இருந்தும், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலும் தொடர தன்னை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். `ஒரு நபருக்கு ஒரு பதவி' என்று உதய்ப்பூர் மாநாட்டில் கொண்டுவந்த தீர்மானத்தை முன்வைத்து, கெலாட்டின் கோரிக்கையை மறுத்தது கட்சித் தலைமை. மேலும், கெலாட்டின் அரசியல் எதிரியான சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கவும் ராகுல் காந்தி திட்டமிட்டுவந்தார். இதனால் ஆத்திரமடைந்த கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தலைமைக்கு எதிராகத் திரும்பினர். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெய்ப்பூருக்கு வந்த மேலிடப் பொறுப்பாளர்களையும் சந்திக்க மறுத்தனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

கெலாட்டை ஆதரிக்கும் சுமார் 90 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், அவைத் தலைவரைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும் செய்திகள் வந்தன. இதனால், சச்சின் பைலட்டை சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்க ராஜஸ்தானுக்கு வந்த மேலிடப் பொறுப்பாளர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், அஜய் மாகேனும் ஏமாற்றத்துடன் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர். சோனியா காந்தியைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கமளித்தனர். பேச்சுவார்த்தையைத் தவிர்க்க நினைத்த அசோக் கெலாட், பாகிஸ்தான் எல்லையிலுள்ள கோயில் ஒன்றுக்கு வழிபாட்டுக்குச் சென்றுவிட்டார். கெலாட்டின் இந்தச் செயல் சோனியாவை மேலும் கோபமடையச் செய்திருக்கிறது.

கிளர்ச்சி செய்யும் கெலாட்!

``கெலாட் கடைசி வரை தங்களுக்கு விசுவாசியாக இருப்பார் என்று ராகுலும், சோனியாவும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், தனது அரசியல் லாபத்துக்காக நேரு குடும்பத்துக்கு எதிராகவே திரும்பிவிட்டார். இவர் கையில் கட்சித் தலைமை சென்றால், அது காங்கிரஸுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்'' என்று மூத்த நிர்வாகிகளே புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்

இந்த விவகாரம் குறித்து, ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆட்சியைக் கவிழ்க்க நினைத்த சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறார் அசோக் கெலாட். அதனால்தான், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வைத்து காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவே கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். மொத்தமுள்ள 108 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில், சுமார் 90 எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் இருப்பதால்தான், இந்த விஷயத்தில் தைரியமாகத் தலைமையை எதிர்த்து நிற்கிறார் கெலாட்'' என்கின்றனர் ராஜஸ்தான் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.

2020-ல் கெலாட், பைலட் இருவருக்கும் கட்சித் தலைமை சமரசம் செய்து வைத்ததைப் போலவே, மீண்டும் சமரசம் செய்து வைத்தால் மட்டுமே ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தப்பிக்கும்!


source https://www.vikatan.com/government-and-politics/politics/rajasthan-congress-crisis-why-ashok-gehlot-turns-against-sonia-and-rahul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக