கோவை துடியலூர் வி.கே.எல்.நகர் பகுதி குப்பைத் தொட்டியில் இருந்து கடந்த வாரம் வெட்டி துண்டாக்கப்பட்ட ஒரு கைப்பகுதி கண்டறியப்பட்டது. அது ஓர் ஆணின் இடது கை என்ற ஒற்றை தகவல் மட்டுமே போலீஸ்க்கு கிடைத்தது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக 8 தனிப்படை போலீஸ் டீம்கள் அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினர்.
ரெளடிகளை கண்காணிப்பது, முன்விரோத வழக்குகளை ஆராய்வது, தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் போலீஸ் சல்லடை போட்டு விசாரித்தனர்.
250 சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, சமீபத்தில் காணாமல் போன 500க்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றி விசாரித்தனர். அப்போதுதான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (39) என்பவர் காணவில்லை என்று அவரின் மனைவி கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.
பிரபு கோவையில் தங்கி ஓர் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். குப்பைத் தொட்டியில் கைப்பற்றப்பட்ட கையின் ரேகைகளோடு, பிரபுவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கை ரேகைகள் ஒத்துப்போனது. பிரபுவின் செல்போன் எண் விசாரித்தபோதுதான் அதிர்ச்சி தகவல் வெளியானது.
பிரபுவுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது. சரவணம்பட்டியில் உள்ள கவிதாவின் வீட்டில்தான் பிரபு வாடகைக்கு இருந்துள்ளார்.
இதனிடையே கவிதாவுக்கு திவாகர் என்ற மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பிரபுவை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, கவிதாவை தனிமையில் எடுத்தப் படங்களை எல்லாம் காண்பித்து டார்ச்சர் செய்துள்ளார்.
இதையடுத்துதான், திவாகர் மற்றும் அவரது மற்றொரு நண்பர் கார்த்திக் ஆகியோர் மூலம் பிரபுவை கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக கவிதா, திவாகர், கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“ஆரம்பத்தில் அந்தக் கையை தாண்டி வேறு எந்தத் துருப்பும் கிடைக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் தலை பாகம் கிடைத்தால்தான், குற்றவாளிகளை நெருங்க முடியும். காணமால் போனதாக வழக்குப்பதிவான விவரங்களை ஆராய்ந்தபோது தான் பிரபு குறித்து அவர் மனைவி கொடுத்தப் புகார் தெரியவந்தது.
பிரபுவின் அறையில் ஆய்வு செய்ததில், வாட்டர் பாட்டிலில் இருந்து எடுக்கப்பட்ட கை ரேகையுடன், குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்த கை ரேகை ஒத்துப்போனது. பிறகு அவருக்கு வேண்டப்பட்டவர்கள் குறித்து விசாரித்தோம். அப்போதுதான் கவிதா குறித்து தெரியவந்தது. கடைசியாக பிரபு, திவாகர் மற்றும் கார்த்திக்குடன் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தன.
பிரபுவின் செல்போனும் திவாகரின் செல்போனும் ஒரே இடத்தில் தான் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டனர். கவிதாவுக்கு டார்ச்சர் கொடுத்தால், பிரபுவை கொல்ல முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வாரம் திட்டமிட்டுள்ளனர். கவிதா மூலம் பிரபுவை காந்திமாநகரில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துள்ளனர்.
திவாகர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். அதனால் கடுமையான ஆயுதங்கள் மூலம் அங்கு வந்த பிரபுவை கொலை செய்துள்ளனர். மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரின் உடலை 12 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். அந்த பாகங்களை குப்பைத் தொட்டி, கிணறு, சாக்கடை என்று பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர். தற்போதுவரை தலை உள்பட 8 பாகங்களை மீட்டுள்ளோம். தலைப்பகுதி கிடைப்பதற்கு முன்பே குற்றவாளிகளை கண்டறிந்துவிட்டோம்.
கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இந்த வழக்கை முடித்த எஸ்.பி, டி.எஸ்.பி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். இதன் மூலம் ஒருவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், எந்த சூழ்நிலையிலும் காவல்துறை நெருங்கிவிடும் என்ற செய்தியை தெரியப்படுத்துகிறோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-3-arrested-for-murdering-beauty-parlour-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக